ஒத்தை ரூபாய்க்கு ஒரு ஜிபி: பிஎஸ்என்எஸ் புது பிளான் நாளை அமலாகுது!
‘ரிலையன்ஸ் ஜியோ’ வருகையால் இந்திய தொலைதொடர்பு துறையில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்து பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்-ன் தலைவரும், தலைமை மேலாண் இயக்குனருமான அனுபம் ஸ்ரீவத்சவா அளித்த பேட்டியின் போது, “இந்திய தொலைதொடர்பு சந்தையில் ‘ரிலையன்ஸ் ஜியோ’வின் வருகை மற்ற அனைத்து தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுக்கும் சவாலான ஒன்றாகவே இருக்கும். எனினும், போட்டியாளர்களுக்கு இணையாக கட்டணச் சலுகையில் சேவைகளை வழங்க பி.எஸ்.என்.எல் நிறுவனத்தால் இயலும். தொலைதொடர்பு சந்தையில் நீடித்து இருக்க ஜியோவிற்கு இணையான கட்டணத்தில் சேவை வழங்குவதை விட வேறு வழியில்லை. நிறுவனங்களுக்கு இது சவாலாக இருப்பினும் மக்களுக்கு இந்த போட்டியின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் சேவைகள் கிடைக்கும்.

சவால் என்று வரும்போது பி.எஸ்.என்.எல். எப்போதும் அதை சமாளிக்கும் வலுவுடன் இருந்து வருகிறது. ரிலையன்ஸ் ஜியோவிற்கு இணையாக கட்டண சலுகைகளை வழங்குவதில் பி.எஸ்.என்.எல் போட்டியாளராக விளங்கும். குறிப்பாக, ஏற்கனவே லேண்ட்லைன், ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க்கில் வலுவாக இருப்பதால் புதிதாக முதலீடு செய்து சலுகைகளை வழங்க வேண்டிய நிலை பி.எஸ்.என்.எல்-க்கு இல்லை” என்றார்
இதனிடையே நாடு முழுவதும் சுமார் ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி தகவல்களைப் பெறும் புதிய திட்டம் (இன்டர்நெட் டேட்டா) பிஎஸ்என்எல் வெள்ளிக்கிழமை (செப்.9) முதல் அறிமுகப்படுத்த உள்ளது.
இதுகுறித்த விவரம்: வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையிலான புதிய திட்டங்களை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வகையில், நகரங்கள், கிராமங்கள் ஆகிய பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், “அன்லிமிடெட் வயர்லைன் பிபி 249′ எனும் புதிய அகண்ட அலைவரிசை திட்டத்தை செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தபட உள்ளது. அதன்படி, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் வரையில்லாத (அன்லிமிடெட்) ஒரு ஜிபிக்கும் அதிகமான தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதோடு, இந்தத் திட்டம் 2 எம்பிபிஎஸ் வேகத்தில் தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
6 மாதத்துக்கு..: இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த தொடங்கியதிலிருந்து மாதத்துக்கு 300 ஜிபி தகவல்களை ரூ.249-க்கு வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். அதன்படி, ஒரு ஜிபி-க்கான பதிவிறக்க கட்டண செலவு ரூ.1-க்கும் குறைவாகவே பிஎஸ்என்எல் வழங்க உள்ளது. ஆறு மாதத்துக்கு பிறகு, வாடிக்கையாளர்கள் ஏதேனும் ஒரு அகண்ட அலைவரிசை திட்டத்துக்கு மாறிக்கொள்ளலாம்.
புதிய வாடிக்கையாளர்கள் இந்த பிபி-249 திட்டத்தை பிஎஸ்என்எல் விற்பனை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 18003451500 என்ற கட்டணமில்லா இலவச எண்ணிலும் www.bsnl.co.in என்ற இணையதள முகவரியிலும் தெரிந்துகொள்ளலாம் என பிஎஸ்என்எல் தமிழ்நாடு தொலைப்பேசி வட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.


