அருணாச்சல் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட் – ஜனநாயகத்துக்கு சாதகமா? பாதகமா?
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் நபம் துகி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏ.க்கள் தனித்து செயல்பட்டதால் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை தொடர்ந்து அம்மாநிலத்தில் கடந்த மாதம் 26-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப் பட்டது. இதை எதிர்த்து முன்னாள் முதல்வர் நபம் துகி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அருணாச்சலப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக் கொள்ள குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதற்கிடையில், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ கலிகோ புல் தலைமையில் 31 எம்எல்ஏ.க்கள் கடந்த திங்கட்கிழமை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அவர்களில் 19 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ.க்கள், 11 பாஜக எம்எல்ஏ.க்கள், 2 சுயேச்சை எம்எல்ஏ.க்கள் அடங்குவர்.இதையடுத்து, “அருணாச்சலில் புதிய அரசு அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது. தற்போதுள்ள நிலையே நீடிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த, சுப்ரீம் கோர்ட் எந்த இடைக்கால உத்தரவும் அன்று பிறப்பிக்காமல். அருணாச்சலில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று மட்டும் உத்தரவிட்டது. கடந்த பிப்ரவரி 22-ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (புதன்கிழமை) அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சியையே ஆட்சியில் அமர்த்தி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் அம்மாநில ஆளுநர் பிறப்பித்த உத்தரவுகள் அரசியல் சாசன சட்டத்திட்டங்களுக்கு எதிரானது எனவும் எனவே, ஆளுநர் பிறப்பித்த அத்தனை உத்தரவுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ல்லியில் அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா செய்தியாளர்களிடம், “ஜனநாயக நாட்டில், மாநிலத்தில் அரசமைப்பதற்கு அரசியல் கட்சிக்கு போதிய உறுப்பினர்களின் பலம் இருத்தல் அவசியமாகும். அத்தகைய பலம், தற்போதைய முதல்வர் கலிகோ ஃபுல்லுக்கு உள்ளது. ஆனால், முன்னாள் முதல்வர் நபம் துகிக்கு அந்த பலம் இல்லை. அவரது அரசை மீண்டும் ஏற்படுத்தும்படி உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது. கடந்த 7 மாதங்களில் ஏராளமான சம்பவங்கள் நடந்து விட்டன. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, ஜனநாயகத்தை வலுப்படுத்துமா? அல்லது பலவீனப்படுத்துமா? என்ற கேள்வியை எழுப்புகிறது. மேலும், அரசமைப்பதற்கு போதிய உறுப்பினர்கள் இருக்கும் ஒருவரை எதிர்க்கட்சி வரிசையில் அமரும்படி கோர முடியுமா? போதிய உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத ஒருவர் அரசு அமைக்க முடியுமா? என்ற கேள்விகளையும் எழுப்புகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மிகவும் விநோதமாக உள்ளது. இதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் விமர்சிப்பதாக கருதக் கூடாது. தீர்ப்பை முழுவதும் படித்து முடித்ததும், பாஜக தனது பதிலைத் தெரிவிக்கும்”என்றார் ஸ்ரீகாந்த் சர்மா.
முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “அருணாசலப் பிரதேசத்தில் ஜனநாயக வழியில் தேர்வு செய்யப்பட்ட ஓர் அரசை, அரசமைப்பு சட்டத்துக்கு விராதமாக நீக்கினார்கள். தற்போது வழங்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் மீண்டும் அந்த அரசு ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால், அரசமைப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள ஜனநாயக நெறிமுறைகள் உறுதியாக நிலைநாட்டப்படும் என்று நம்புகிறேன். இதேபோல், ஆட்சி அதிகாரத்தை மீண்டும் தவறாக பயன்படுத்துவதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தடுத்து நிறுத்தும் என்றும் நம்புகிறேன் ” என்று தெரிவித்தார்.


