சென்னையில் பறவைக் காய்ச்சல் உறுதி: பரவும் H5N1 வைரஸ் – தற்காத்துக் கொள்வது எப்படி?
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாக அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் ஓஎம்ஆர், ஈசிஆர் சாலைகளில் காகங்கள் கொத்துக் கொத்தாக மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த உயிரிழந்த காகங்களின் மாதிரிகளைச் சேகரித்த காஞ்சிபுரம் கால்நடை நோய்த் தடுப்பு புலனாய்வுக் குழுவினர், அவற்றை போபாலில் உள்ள தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு ஆய்வு நிறுவனத்திற்கு (NIHSAD) அனுப்பி வைத்தனர். தற்போது அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் காகங்களுக்கு H5N1 (Avian Influenza) எனப்படும் பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நோய் பரவலைத் தடுக்கவும், மனிதர்களுக்குத் தொற்று ஏற்படாமல் காக்கவும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை மிக முக்கியமான அவசர வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது:
பொதுமக்களுக்கான அவசர எச்சரிக்கைகள்:
-
காகங்கள் மற்றும் இதர பறவைகள்: உங்கள் பகுதியில் காகங்களோ அல்லது மற்ற பறவைகளோ மர்மமான முறையில் இறந்து கிடந்தால், அவற்றை எக்காரணம் கொண்டும் வெறும் கைகளால் தொடக்கூடாது. குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளை அண்டவிடக் கூடாது.
-
முறையான அடக்கம்: உயிரிழந்த பறவைகள் மற்றும் இதர கால்நடைகளை (பசு மாடுகள் உட்பட) கண்ட இடங்களில் வீசக்கூடாது. அவற்றை வைரஸ் பரவாத வண்ணம் எரிக்க வேண்டும் அல்லது ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் ஆழமாக குழிதோண்டிப் புதைக்க வேண்டும்.
-
தகவல் அளித்தல்: உங்கள் பகுதியில் பறவைகள் தொடர்ச்சியாக உயிரிழந்தால், உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கோ அல்லது மாநகராட்சி அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்.
கோழிப் பண்ணையாளர்களுக்கான கட்டுப்பாடுகள்:
-
பண்ணை பாதுகாப்பு: கோழிப் பண்ணைகளுக்குள் அந்நிய நபர்கள் அல்லது வெளி நபர்கள் நுழைவதை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும்.
-
பணியாளர் நடமாட்டம்: நோய் பரவலைத் தடுக்க, ஒரு பண்ணையில் வேலை செய்பவர் அதே நாளில் மற்ற பண்ணைகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இது வைரஸ் ஒரு பண்ணையிலிருந்து மற்றொன்றுக்குக் கடத்தப்படுவதைத் தடுக்கும்.
-
இறக்குமதித் தடை: அண்டை மாநிலங்களில் இருந்து கோழிகள், கோழி இறைச்சி அல்லது முட்டைகளைக் கொண்டு வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள்:
தமிழக அரசு மாநில எல்லைகளில் தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. கால்நடைத் துறை அதிகாரிகள் குழுக்கள் அமைக்கப்பட்டு, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உடல்நலம் காக்க சில குறிப்புகள்:
-
கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்றாக 70°C-க்கும் அதிகமான வெப்பநிலையில் சமைத்த பின்னரே சாப்பிட வேண்டும். நன்றாகச் சமைக்கப்பட்ட உணவின் மூலம் இந்த வைரஸ் பரவாது.
-
பறவைகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டவர்கள், காய்ச்சல் அல்லது சுவாசக் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.


