பியூட்டி டிரெண்ட் 2026:இளைய இந்தியர்களின் ரசனை இப்போது வேற லெவல்!
இன்றைய நவீன உலகில், அழகு மற்றும் தனிநபர் பராமரிப்பு என்பது வெறும் மேலோட்டமான ஒப்பனை என்ற நிலையிலிருந்து மாறி, ஒருவரின் ஆரோக்கியம் மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக இந்தியாவில், ‘ஜென்-இசட்’ (Gen Z) மற்றும் இளைஞர்களிடையே நிலவும் அதீத விழிப்புணர்வு, இத்துறைக்கான தேவையை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. வெறும் விளம்பரங்களை மட்டும் நம்பாமல், ஒரு தயாரிப்பின் தரம் மற்றும் அதன் பின்னாலுள்ள அறிவியல் உண்மைகளை ஆராய்ந்து வாங்கும் ஒரு ‘தகவல் சார்ந்த சந்தையாக’ (Information-driven market) இது மாறியிருக்கிறது. சமூக வலைதளங்களில் செல்வாக்கு செலுத்தும் ‘இன்ஃப்ளூயன்ஸர் எக்கனாமி’ மற்றும் சர்வதேசத் தரத்திலான பொருட்கள் கட்டுப்படியாகும் விலையில் கிடைப்பது ஆகியவை இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. மேலும், பெருநகரங்களைத் தாண்டி சிறு நகரங்களிலும் உயர்தரப் பராமரிப்புப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவது, இந்தியர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டுகிறது. இயற்கை மற்றும் மருத்துவத் தரம் வாய்ந்த தயாரிப்புகளுக்கு இடையே நிலவும் இந்த ஆரோக்கியமான போட்டி, நுகர்வோருக்குச் சிறந்த தீர்வுகளைத் தருவதோடு மட்டுமல்லாமல், இந்திய அழகுசாதனத் துறையை உலக அளவில் ஒரு முக்கிய சக்தியாக உயர்த்தியுள்ளது.
சமீபத்திய ஆய்வறிக்கைகள் மற்றும் நிபுணர்களின் கருத்துப்படி, இந்திய அழகுசாதனத் துறையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு இதோ:

1. விழிப்புணர்வு மிக்க இளம் இந்தியா
இன்றைய இளைஞர்கள் தங்களின் சருமப் பராமரிப்பு குறித்து மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். இது குறித்து ஐஸ்யா எஸ்தெடிக்ஸ் (Isya Aesthetics) இயக்குநர் டாக்டர் கிரண் சேத்தி கூறுகையில், “இளம் இந்தியர்கள் இப்போது ஸ்கின்கேர் மற்றும் வீட்டிலேயே பயன்படுத்தும் அழகு சாதனங்கள் குறித்து முழுமையாக அறிந்து வைத்துள்ளனர். பிரச்சினைகள் வந்த பிறகு தீர்வு காண்பதை விட, வருமுன் காக்கும் சிகிச்சைகளை (Preventive Care) அவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்,” என்கிறார்.
2. இன்ஃப்ளூயன்ஸர் எக்கனாமி (Influencer Economy)
சமூக வலைதளங்களில் அழகு குறித்த தகவல்களைப் பகிரும் ‘இன்ஃப்ளூயன்ஸர்’களின் தாக்கம் இதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆடம்பரமான விளம்பரங்களை விட, ஒரு பொருளில் என்னென்ன உட்பொருட்கள் (Ingredients) இருக்கின்றன என்ற தகவலுக்கே இளைஞர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள். மேலும், கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கும் உயர்தரமான ‘அஃபோர்டபில் லக்சரி’ (Affordable Luxury) தயாரிப்புகள் சந்தையை ஆக்கிரமித்துள்ளன.

3. ‘பார்மசி டூ லக்சரி’ – இந்திய பிராண்டுகளின் ஆதிக்கம்
இந்தியாவின் தட்பவெப்ப நிலை மற்றும் மாசடைந்த சூழலுக்கு ஏற்ப, பிரத்யேகமான தயாரிப்புகளை வழங்கும் உள்நாட்டு பிராண்டுகள் (Homegrown brands) இன்று வெற்றி நடை போடுகின்றன. இது பற்றி அழகுக்கலை நிபுணர் சுங்ஜெம்லிலா லோங்குமர் கூறுகையில், “இந்தியர்களின் சருமப் பிரச்சினைகளான ‘ஹைப்பர் பிக்மென்டேஷன்’ மற்றும் மாசுக்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும் தயாரிப்புகளை வழங்கும் பிராண்டுகள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. மருத்துவத் தரம் மற்றும் அதே நேரத்தில் அழகான பேக்கேஜிங் கொண்ட கிளினிக்கல் தயாரிப்புகளை மக்கள் விரும்புகிறார்கள்,” என்கிறார்.
4. டயர் 2 மற்றும் 3 நகரங்களின் எழுச்சி
பெருநகரங்கள் மட்டுமின்றி, சிறிய நகரங்களிலும் அழகு சாதனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதற்கு:
-
அதிகரித்துள்ள தனிநபர் வருமானம்.
-
ஸ்மார்ட்போன் மற்றும் இணையப் பயன்பாடு.
-
பிராந்திய மொழிகளில் கிடைக்கும் அழகு குறிப்புகள்.
-
சமூக ஊடகங்கள் வழியாக எளிதாகப் பொருட்களை வாங்கும் வசதி ஆகியவை முக்கியக் காரணங்களாக உள்ளன.
5. ஜெனரேஷன்-இசட் (Gen Z) மற்றும் மைந்த்ரா (Myntra) சாதனை
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான மைந்த்ராவின் சிஇஓ நந்திதா சின்ஹா ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதன்படி, மைந்த்ராவின் அழகுசாதனப் பொருட்களை வாங்குபவர்களில் 60% பேர் ‘ஜெனரேஷன்-இசட்’ (Gen Z) பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள். மேலும், மைந்த்ராவில் ஆர்டர் செய்யப்படும் ஒவ்வொரு 5 பொருட்களில் ஒன்று ‘பியூட்டி’ (Beauty) வகையைச் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
6. மாறுகின்ற பாலின எல்லைகள்
அழகு என்பது பெண்களுக்கு மட்டுமானது என்ற பிம்பம் இப்போது உடைக்கப்பட்டு வருகிறது. ஆண்களுக்கான பராமரிப்புப் பொருட்கள் (Male grooming) மற்றும் பாலின பேதமற்ற (Gender-fluid) அழகு சாதனங்கள் இந்தியச் சந்தையில் தற்போது புதிய இடத்தைப் பிடித்துள்ளன என ஆய்வறிக்கை கூறுகிறது.
அடிசினல் ரிப்போர்ட்
அழகுத் துறையில் ‘ஆண்களின்’ அதிரடி!
இனி அழகு என்பது பெண்களுக்கு மட்டுமேயான ஏகபோக உரிமை அல்ல! இந்தியச் சந்தையில் ஆண்களுக்கான அழகு சாதனப் பொருட்களின் (Male Grooming) விற்பனை முன்பை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.
-
மாறிய மனநிலை: தாடி பராமரிப்பு (Beard care) தாண்டி, ஃபேஸ் வாஷ், சீரம் (Serum), சன்ஸ்கிரீன் மற்றும் ஆண்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மேக்கப் சாதனங்களை இந்திய ஆண்கள் இப்போது தேடித் தேடி வாங்குகிறார்கள்.
-
காரணம்: சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும் அலுவலகம் அல்லது வெளி இடங்களுக்குச் செல்லும்போது பொலிவாகத் தெரிய வேண்டும் என்ற ஆர்வம் ஆண்களிடையே அதிகரித்துள்ளது.
-
சந்தை மதிப்பு: 2026-க்குள் இந்தியாவின் ‘மேல் குரூமிங்’ சந்தை பல பில்லியன் டாலர்களைத் தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.
பொற்காலம்:
ஆக மொத்தம் இந்திய அழகுசாதனத் துறை இப்போது ஒரு ‘தகவல் சார்ந்த’ (Information-driven) சந்தையாக மாறியுள்ளது. பெண்ணும் சரி, ஆணும் சரி.,வெறும் கவர்ச்சியை மட்டும் நம்பாமல், தரம் மற்றும் அறிவியல் பூர்வமான தீர்வுகளை மக்கள் தேடுகிறார்கள். இந்த மாற்றம் உள்நாட்டுத் தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்பம் சார்ந்த பிராண்டுகளுக்கும் ஒரு பொற்காலமாக அமைந்துள்ளது.
ஈஸ்வர் பிரசாத்


