பேபி அண்ட் பேபி- விமர்சனம்!

ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த சத்யராஜ் மகன் ஜெய் தான் வாழ்ந்த கிராமத்தைச் சேர்ந்த பிரக்யாவை லவ் மேரேஜ் செய்து அப்பாவுக்கு பயந்து வெளிநாட்டிற்கு புது ஒய்ஃபுடன் சென்று விடுகிறார். இதனால் ஜெய் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார் சத்யராஜ். அதேசமயம், ஜமீனுக்கு ஒரு ஆண்வாரிசு இல்லையே என்று கவலையிலும் சத்யராஜூன் மகன் ஜெய்க்கு ஆண்குழந்தை பிறந்திருப்பதாக தகவல் கிடைக்க, ஜெய் மீது இருந்த கோபம் அனைத்தையும் மறந்து உடனே ஊருக்கு கிளம்பி வர சொல்கிறார் சத்யராஜ்.இதை அடுத்து மனைவி மகனுடன் தனது ஊருக்குச் செல்ல விமான நிலையம் வருகிறார்கள் ஜெய்.
அதேசமயம், ஜாதகம், சாஸ்திரத்தில் மஹா நம்பிக்கை கொண்ட இளவரசு மகன் யோகி பாபு. அவர் ஜாதகத்தில் வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க வேண்டும் என்று இருப்பதாகக் கூறி யோகிபாபுவை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து விடுகிறார் இளவரசு.அப்படி வெளிநாடு போன இடத்தில் சாய் தன்யாவை மேரேஜ் செய்து கொள்கிறார். அந்த திருமண விஷயத்தை கேள்விப்பட்ட இளவரசு கடும் கோபத்தில் இருக்கிறார். இச்சூழலில் ஜாதகப்படி வீட்டிற்கு ஒரு பெண்குழந்தை இருந்தால் மட்டுமே குடும்பம் செழிக்கும் என்று இருப்பதாகச் சொன்ன காலக் கட்டத்தில் யோகிபாபுவிற்கு பெண்குழந்தை பிறந்து இருப்பதாக செய்தி கிடைத்து மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார் இளவரசு. உடனே குழந்தையை அழைத்துக் கொண்டு யோகிபாபுவை கிராமத்திற்கு வரச் சொல்கிறார் இளவரசு. இப்படி ஜெய், யோகி பாபு இருவரும் தங்கள் குழந்தை மற்றும் மனைவிமார்களை அழைத்துக் கொண்டு துபாயில் இருந்து இந்தியா திரும்பும் போது இவர்களின் கைக்குழந்தைகள் இடம் மாறி விடுகின்றன. அப்படி குழந்தைகள் மாறிவிடவே இரண்டு குடும்பத்திலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. கூடவே குழந்தைகள் கடத்தப்படுவதெல்லாம் நிகழ்கிறது. இந்த குழப்பங்கள் எல்லாம் தீர்வதெப்படி என்பதை கலகலப்பாக சொல்ல முயன்று இருப்பதே பேபி அண்ட் பேபி படக் கதை.
ஹீரோ ஜெய் ஏனோ தன் கேரக்டரில் கொஞ்சமும் இன்வால்வ் ஆகாமல்,மேக் அப்பில் கூட அக்கறைக் காட்டாமல் விட்டேத்தியாக நடித்து பெயில் மார்க் வாங்கி விடுகிறார். அதிலும் நாளைய முதல்வர் விஜய் ஸ்டைலை கடைபிடிப்பதெல்லாம் ரொம்ப ஓவர். கோலிவுட்டின் செட் பிராப்பர்ட்டி யோகி பாபு ரோலும் வழக்கம் போல் எடுபடவில்லை. நாயகிகள் பிரக்யா மற்றும் சாய் தன்யா இருவரும் டைரக்டர் சொன்னதை செய்து விட்டு போகிறார்கள்.சத்யராஜ் தனது அனுபவ நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இளவரசு நடிப்பில் சிரிக்க வைக்கிறார். கூடவே ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், ஸ்ரீமன் சிங்கம் புலி, தங்கதுரை, ராமர் என பெரிய பட்டாளமே ஒன்று சேர்ந்து காமெடி கும்மாளம் போட்டிருக்கிறது.
டி இமான் இசையில் பாடல்கள் எல்லாமே 90ஸ் காலகட்ட பாடல்கள் போல் தெளிவாக இனிமையாக ஒலிக்கிறது. அதிலும் யுகபாரதியின் வரிகளில் ‘ஆராஅமுதே’ பாடல் ஈர்க்கிறது. கேமராமேன் டிபி சாரதி கலர்ஃபுல்லாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.
டைரக்டர் பிரதாப் தன்னை இன்னொரு சுந்தர் சி போல் நினைத்து கோட்டை விட்டு விட்டார். சிரிப்பு வர இன்னும் கொஞ்சம் அக்கறைக் காட்டி இருக்கலாம்!
மொத்தத்தில் பேபி அண்ட் பேபி – இன்குபேட்டர் மூவி
மார்க் 2.25/5