அமைதியை விரும்புவதால் பலவீனமானவன் என்று நெனக்கப்படாது! – ராணுவ புது தளபதி
இந்திய ராணுவத்தின் தளபதியாக இருந்த தல்பீர் சிங் சுஹாக் 42 ஆண்டு கால பணிக்குப் பிறகு நேற்று ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் தனது பொறுப்புகளை புதிய தளபதி பிபின்ராவத்திடம் ஒப் படைத்தார். நாட்டின் 27-வது ராணுவத் தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட பிபின் ராவத், காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங் களிலும் சிறப்பாக பணியாற்றியவர். 2008-ல் காங்கோவில் ஐ.நா. அமைதிப் பணியில் இந்தியப் படைக்கு தலைமை வகித்துள்ளார்.பிரவீன் பக் ஷி, பி.எம்.ஹாரிஸ் ஆகிய இரு மூத்த அதிகாரிகளை ஓரங்கட்டிவிட்டு பிபின் ராவத்தை ராணுவத் தளபதியாக மத்திய அரசு நியமித்தது சர்ச்சையானது.அதை பொருட்படுத்தாமல் புதிய தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள ஜெனரல் பிபின் ராவத்துக்கு ச்ந்ல்லியில் உள்ள சவுத் பிளாக் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “நம் நாடு எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறது. ஆனால் அதற்கு நாம் பலவீனமாக இருப்பதாக அர்த்தமல்ல. நாம் அனைத்து விதத்திலும் வலிமையாக இருக்கிறோம். தேவைப்பட்டால் எந்த வடிவத்திலும் பலத்தைப் பிரயோகிக்க ராணுவம் தயங்காது.எல்லையில் அமைதியைப் பராமரிக்க வேண்டும் என்பதே நமது குறிக்கோள். எனினும் தேவைப்பட்டால் படை பலத்தைப் பிரயோகிக்கத் தயங்க மாட்டோம் என்பதை மீண்டும் கூறுகிறேன்.
ராணுவத்தில் எனது பொறுப்புகள் என்ன என்பதை உணர்ந்துள்ளேன். ராணுவத்தில் உள்ள ஒவ்வொரு வீரரும் – அவர் எந்த நிலையில் இருந்தாலும், எந்த வகையான ஆயுதங்களைக் கையாள்பவராக இருந்தாலும் – முக்கியமானவர்தான். ஏனெனில், ஒவ்வொரு வீரரின் பங்களிப்பும் சேர்ந்துதான் ராணுவத்தைத் திறன்வாய்ந்ததாகவும், வலிமையானதாகவும் மாற்றுகிறது.
என்னைப் பொருத்தவரை அனைத்து வீரர்களையும் சமமாகவே கருதுகிறேன். என்னைத் தலைமைத் தளபதியாக நியமிப்பது என்ற அரசின் முடிவை பணிவோடு ஏற்றுக் கொண்டுள்ளேன். அதேவேளையில், ராணுவத்தின் கிழக்குப் பிராந்திய துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பிரவீண் பக்ஷி, தெற்குப் பிராந்திய துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எம்.ஹாரிஸ் ஆகியோரைத் தாண்டி நான் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளேன். அவர்களை நான் மதிக்கிறேன். அவர்கள் என்னுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றி வந்துள்ளனர்.
ராணுவத்தை வலிமையாகவும் ஒற்றுமையாகவும் வைத்திருப்பதற்காக அவர்கள் எதிர்காலத்திலும் அதேபோல் தோளோடு தோள் நின்று பணியாற்றுவார்கள். எல்லைகளைப் பாதுகாப்பது, உள்நாட்டில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதில் அரசுக்கு உதவுவது, பேரிடர்க் காலங்களில் உதவுவது போன்றவற்றுக்கு நாம் (ராணுவம்) கடமைப்பட்டவர்கள்.
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரர்கள், வீராங்கனைகள், போர் வீரர்களின் விதவை மனைவிகள், ராணுவத்தில் பணியாற்றியபோது ஊனமடைந்தவர்கள் ஆகியோரை கடைசிக்காலம் வரை ராணுவம் கவனித்துக் கொள்ளும்” என்றார் ராவத்.


