மன்னிப்பு -ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உருக்கம்!
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கடந்த 2022-ம் வருடம் ஜனாதிபதியால் டி.ஒய்.சந்திரசூட் அறிவிக்கப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டின் 50வது தலைமை நீதிபதியாக 50வது தலைமை நீதிபதியாக இவர் பதவியேற்றார். 1959, நவம்பர் 11ம் தேதி பிறந்த சந்திரசூட், ஜூன் 1998 இல் பம்பாய் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். மார்ச் 29, 2000 அன்று பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அக்டோபர் 31, 2013 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார். நீதிபதி சந்திரசூட், டெல்லியின் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் பிஏ பட்டமும், டெல்லி பல்கலைக்கழக வளாக சட்ட மையத்தில் எல்எல்பியும், ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் எல்எல்எம் மற்றும் ஜூரிடிகல் சயின்சஸ் (எஸ்ஜேடி) முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவரது தலைமை நீதிபதி பணிக்காலம் நாளை மறுநாள் 10ந்தேதியுடன் முடிவடைகிறது.இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியான சஞ்சீவ் கண்ணா தலைமையிலான நீதிபதிகள் அவருக்கு பிரியாவிடை அளித்தனர். நிகழ்ச்சியில் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, அட்டர்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல், உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் (SCBA) தலைவர் கபில் சிபல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அப்போது பேசிய நீதிபதிகள், ”உங்களது புன்னகையை மறக்க முடியாது. பொறுமையாக வழக்குகளை விசாரணை மேற்கொண்டுள்ளீர்கள். சுப்ரீம் கோர்ட்டில் புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவந்தீர்கள். இளம் வழக்கறிஞர்களுக்கு ஊக்கமாக இருந்தீர்கள். அம்பேத்கர் சிலையை சுப்ரீம் கோர்ட்டில் நிறுவியதற்கு நன்றிகள்.என்றும் இளமையாக இருக்கும் உங்கள் ரகசியத்தை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். உடல் ரீதியாக இனி நீங்கள் சுப்ரீம் கோர்ட்டில் இல்லை.என்றாலும், நீங்கள் விசாரணை மேற்கொண்ட வழக்குகளும், வழங்கிய நூற்றுக்கணக்கான தீர்ப்புகளும் காலத்திற்கும் நிலைத்திருக்கும். இனிவரும் தலைமுறையினருக்கு அதுஅது உறுதுணையாக இருக்கும்” என்றனர்.
மேலும் சந்திரசூட்டை வாழ்த்திப் பேசிய நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “தலைமை நீதிபதிக்கு எனது நல்வாழ்த்துகள். அவர் எனது பணியை எளிதாகவும் கடினமாகவும் ஆக்கியுள்ளார். அவர் செய்த புரட்சிகள் எனது பணியை எளிதாக்கி உள்ளன. அவர் அளவுக்கு எனது பயணம் இருக்காது என்பதால் கடினமாக ஆக்கி இருக்கிறார். அவரை நாங்கள் நிச்சயம் மிஸ் பண்ணுகிறோம்” என குறிப்பிட்டார்.
இதை அடுத்து நன்றி தெரிவித்துப் பேசிய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், “என்னைத் தொடர்ந்து வழிநடத்துவது எது என்று கேட்டீர்கள். இந்த நீதிமன்றம்தான் என்னைத் தொடர்ந்து வழி நடத்துகிறது. ஏனென்றால், எதையும் கற்றுக்கொள்ளாத, சமூகத்துக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைக்காத நாள் என்று ஒரு நாள் கூட இல்லை. தேவைப்படுபவர்களுக்கும், சந்திக்காதவர்களுக்கும், தெரியாத நபர்களுக்கும், அவர்களைப் பார்க்காமலேயே சேவை செய்வதை விட மேலான உணர்வு எதுவும் இல்லை. நான் இளம் வக்கீலாக இருந்தபோது, கோர்ட்டிற்கு வந்து நீதிமன்ற நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிப்பேன். எப்படி வாதாடுவது , நீதி மன்றத்தில் எப்படி நடந்து கொள்வது என பலவற்றை கற்றுக் கொண்டேன். வாழ்க்கையைப் பற்றி நீதிமன்றத்தில் நான் ஏராளமாக கற்றுக் கொண்டேன். முந்தைய வழக்கைபோல புதிய வழக்கு ஒன்று வருவதில்லை, ஒவ்வொன்றும் புதியதாகவே இருக்கும்.
அதே சமயம் இளம் சட்ட மாணவராக நீதிமன்றத்தின் கடைசி வரிசையில் அமர்ந்த நாள் இன்றும் நினைவில் இருக்கிறது. நீதிமன்றத்தில் செலவழிக்கும் ஒவ்வொரு நாளும், சட்ட அறிவு மற்றும் தனிப்பட்ட நுண்ணறிவு இரண்டையும் கற்றுக் கொள்ளவும் வளரவும் ஒரு வாய்ப்பாக இருந்தது. இந்த நாற்காலியில் அமர்வதால் வந்த பொறுப்பை நான் எப்போதும் அறிந்திருக்கிறேன். ஆனால் முடிவில், அது தனிநபரைப் பற்றியது அல்ல, அது நிறுவனம் மற்றும் காரணத்தைப் பற்றியது. நாங்கள் இங்கு நீதியை நிலைநாட்டுகிறோம்.தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள சஞ்சய் கண்ணா கண்ணியமானவர், நீதி வழங்குவதில் ஆழ்ந்த அர்ப்பணிப்பு கொண்டவர். நீதிமன்றத்தை சமமான அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் வழிநடத்துவார் என்று வழக்கறிஞர் சமூகத்துக்கு நான் உறுதியளிக்கிறேன். நான் யாரையும் புண்படுத்தியிருந்தால், அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என தெரிவித்தார்.