‘அந்தோனி’ – யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பு நிறைவுபெற்று டப்பிங் பணிகள் தீவிரம்!
ஓசை பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பில், கயல் வின்சன்ட் மற்றும் T.J. பானு இணைந்து நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதம் பூஜையுடன் ஆரம்பமாகி, இலங்கை – யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளன. தற்போது படக்குழுவினர் டப்பிங் பணிகளைத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இளம் இயக்குநர்களின் கூட்டணி மற்றும் வலுவான தயாரிப்புக் குழு:
“அந்தோனி” திரைப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு இளம் கலைஞர்கள் இணைந்து இயக்குகின்றனர். ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர்களான கலைவளரி சக ரமணா மற்றும் சுகந்தினி ரமணதாஸ் ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். திரு. இரமணன் அவர்கள் இத்திரைப்படத்தில் இணை இயக்குநராகவும் பணிபுரிகின்றார். மேலும், இணை தயாரிப்பாளர்களாக விஜயன் பாலசிங்கம் (விஜய் பிலிம்ஸ்) மற்றும் ஸ்ரீஸ்கந்தராஜா (ட்ரிம்லைன் புரொடக்ஷன்ஸ்) ஆகியோர் இணைந்துள்ளனர்.

நட்சத்திரப் பட்டாளம்:
‘கயல்’ திரைப்பட நடிகர் கயல் வின்சன்ட் கதாநாயகனாக நடிக்கிறார். ‘காதலிக்க நேரமில்லை’, ‘வாழ்’, ‘போர்’, ‘மாடர்ன் லவ்’, ‘இமைகள்’ போன்ற வித்தியாசமான கதையம்சமுள்ள படங்களில் நடித்து சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகை T.J. பானு கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன், நடிகர் அருள்தாஸ், குணச்சித்திர நடிகர் நிழல்கள் ரவி, இலங்கையைச் சேர்ந்த நடிகர் சுதர்சன் ரவீந்திரன், நடிகை செளமி, ஆண்டவன் கட்டளை அரவிந்தன், இதயராஜ், யசிதரன், தர்ஷிபிரியா, ஷாமிலா, சாந்தா, சர்மிளா, வசந்த சீலன் போன்றோரும், தமிழகத்தைச் சேர்ந்த பல நடிகர்களும் இணைந்து நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்தர தொழில்நுட்பக் குழு:
பெரும் பொருட்செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தப் படத்திற்கு, ஒளிப்பதிவாளர் ரிஷி செல்வம் தனது கைவண்ணத்தால் உயிர் ஊட்டியுள்ளார். ‘சித்தா’ மற்றும் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்’ போன்ற திரைப்படங்களின் படத்தொகுப்பாளரான சுரேஷ் ஏ. பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்குநராக கலா மோகன், ஆடை வடிவமைப்பாளராக தரங்கனி, ஒப்பனை கலைஞர்களாக கலைவாணி மற்றும் அகல் சகி ஆகியோர் பணியாற்றியிருக்கின்றனர்.
உலகத் தமிழர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு:
இலங்கையில் வெளிவந்த சினிமா திரைப்படங்களைப் பொறுத்தவரை, ஒரு தனித்தன்மை கொண்ட, எமது மண் சார்ந்த சினிமாவை எடுத்துக்காட்டும் திரைப்படமாக “அந்தோனி” அமையும் என்பதால், இத்திரைப்படம் ஐரோப்பிய அளவில் வாழும் உலகத் தமிழ் மக்கள் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை உண்டுபண்ணியிருப்பதாகத் திரைப்படக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர், ஆடியோ, டிரெய்லர் வெளியீடு மற்றும் உலகளவில் திரையரங்கு வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


