‘அஞ்சான்’ ரீ-எடிட்: “சில நேரங்களில் நாங்களே ஏமாந்து விடுகிறோம்” – லிங்குசாமி ஆதங்கம்! 🫂

‘அஞ்சான்’ ரீ-எடிட்: “சில நேரங்களில் நாங்களே ஏமாந்து விடுகிறோம்” – லிங்குசாமி ஆதங்கம்! 🫂

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் சமீபகாலமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இயக்குநர் என். லிங்குசாமி டைரக்‌ஷனில் நடிகர் சூர்யா நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘அஞ்சான்’ திரைப்படம், தற்போது 4K தொழில்நுட்பத்தில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு, நவம்பர் 28 அன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது.

தற்போது இப்படத்தின் நீளம் கணிசமாகக் குறைக்கப்பட்டு, சுமார் 36 நிமிடங்கள் மறு படத்தொகுப்பு (Re-Edit) செய்யப்பட்டு, புதிய வடிவத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, சமந்தா, வித்யுத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

‘அஞ்சான்’ ரீ-ரிலீஸ்: இயக்குநர் லிங்குசாமியின் ஆதங்கம் 

‘அஞ்சான்’ ரீ-ரிலீஸ் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் என். லிங்குசாமி, படம் குறித்த பல சுவாரஸ்யமான மற்றும் உணர்வுபூர்வமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

நீளம் குறைக்கப்பட்டதன் காரணம்: 

“இப்படம் முதலில் 2 மணி நேரம் 36 நிமிடம் ஓடும் விதமாக இருந்தது. இப்போது 36 நிமிடங்கள் குறைத்துள்ளோம். நீளத்தை குறைத்தால் மட்டுமே ஒரு படம் நன்றாக வந்துவிடாது. ஆனால், படத்தைப் பார்க்கும்போது அதன் அவசியம் உங்களுக்குத் தெரிய வரும். 11 வருடங்களுக்கு முன்பு இப்படம் வெளியானபோதுதான் முதன்முதலாக அதிகப்படியான ட்ரோல்களில் சிக்கியது.”

வெற்றி வெறுப்பையும் பொறாமையையும் ஏற்படுத்தும்: 

“அந்த சமயத்தில் திருப்பதி பிரதர்ஸ், ‘கோலி சோடா’, ‘மஞ்சப்பை’, ‘கும்கி’ எனத் தொடர்ச்சியாகப் பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்தது. தொடர் வெற்றி கூட ஒரு சிலருக்குக் கோபம், வெறுப்பு, பொறாமை இவற்றையெல்லாம் கூட ஏற்படுத்திவிடும். முதன்முதலில் அப்படி எங்களை குறி வைத்துத் தாக்கியவர்கள், இப்போது தயவு தாட்சண்யம் இன்றி எல்லாப் படங்களையும் அடிக்கிறார்கள்.”

11 வருடங்களுக்கு முன் திட்டியதை விடவா இப்போது திட்டப் போகிறார்கள்? 

“நான் இப்போது பயப்படுவது இல்லை. 11 வருடத்திற்கு முன்பு திட்டியதை விடவா இப்போது திட்டப் போகிறார்கள்? தவிர, ட்ரோல் செய்வதால் மட்டுமே ஒரு படத்தின் வெற்றியைத் தடுத்து விட முடியாது. ‘ரன்’, ‘சண்டக்கோழி’ போன்ற படங்கள் அப்போது வந்திருந்தால் இந்த ட்ரோல்கள் என்ன செய்திருக்கும்? மக்கள் விரும்பினால் படத்தின் ஓட்டத்தைத் தடுக்க முடியாது.”

தவறை ஒப்புக்கொண்ட இயக்குநர்: 

“அதேசமயம், என் பக்கமும் தவறு இருக்கிறது. 100% சரியான படத்தைக் கொடுத்துவிட்டு, மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என அவர்கள் மீது பழி போட விரும்பவில்லை. அதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நானும் சில தவறுகளை இந்த படத்தில் செய்திருக்கிறேன். அதை அவர்கள் பல மடங்கு பெரிதாக்கிவிட்டார்கள். ரசிகர்களை ஏமாற்றுவதற்காகப் படம் எடுக்கவில்லை. சில நேரங்களில் நாங்களே ஏமாந்து விடுகிறோம்.”

தன்னம்பிக்கை பேச்சு ஏன் பூதாகரமானது? 

“அஞ்சான் வெளியான சமயத்தில் நான் ஒரு பேட்டியில் சொன்ன தன்னம்பிக்கையான வார்த்தைகளை சிலர் வேறு விதமாகப் பூதாகரப்படுத்தி விட்டார்கள். தனியாக கிராமத்தில் இருந்து கிளம்பி சினிமாவுக்கு வந்து வெற்றிகளைப் பெற்ற ஒருவன் இந்த அளவுக்கு கூடத் தன்னம்பிக்கையுடன் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது?”

“இதை வெற்றி தோல்வியை மனதில் வைத்தோ, யாருக்கும் சவால் விடுவதற்காகவோ ரீ-ரிலீஸ் செய்யவில்லை. இந்தப் படத்தை ரொம்பவே விரும்பித்தான் எடுத்தேன். மணிரத்னம், ஷங்கர் போன்றவர்களுக்கு கூட மிக பெரிய அளவில் நெகட்டிவ் கருத்துக்களைப் பரப்புகிறார்கள்.”

ரீ-எடிட் செய்யப்பட்டதன் நோக்கம்: 

“அஞ்சான் வெளியான சமயத்தில் கிடைத்த விமர்சனங்கள் மற்றும் நிறை குறைகளை மனதில் வைத்துதான் இந்த டிஜிட்டல் வெர்ஷனை மறு படத்தொகுப்பு செய்து உருவாக்கியுள்ளோம். இதில் நடிகர்களின் கதாபாத்திரங்கள் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என கணக்கிட்டு நீக்கப்படவில்லை. கதையின் சீரான ஓட்டத்திற்கு ஏற்ப மீண்டும் படத்தொகுப்பு செய்திருக்கிறோம்.

அடுத்த திட்டம்: 

“அடுத்ததாக தற்போது பிப்ரவரியில் புதிய படத்தை இயக்கத் தயாராகிவிட்டேன். இந்த படத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் கதாநாயகனாக நடிக்கிறார்,” என்று அவர் தனது அடுத்தப் படம் குறித்தும் பேசினார்.

லிங்குசாமியின் இந்த தைரியமான முயற்சிக்குத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

error: Content is protected !!