32°C
விளம்பரம்
Advertisement

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் & டி ஸ்டுடியோஸ் இணைந்து “வேல்ஸ் – டி ஸ்டுடியோ” என்றானது!

admin Published: November 28, 2025 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


சென்னையில் தமிழ்த் திரையுலகின் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பத் தரத்தை உலகளாவிய நிலைக்கு உயர்த்தும் நோக்கில், ஒரு முக்கியக் கூட்டணி உருவாகியுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் இயக்குநர் விஜய்யின் டி ஸ்டுடியோஸ் போஸ்ட் (D Studios Post) இணைந்துள்ளது. இனி இந்த நிறுவனம் ‘வேல்ஸ் – டி ஸ்டுடியோ’ என்ற பெயரில் செயல்படும்.

இக்கூட்டணி, தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப மற்றும் திறமையாளர்களை ஊக்குவிக்கும் மையமாகச் செயல்படவுள்ளது. உலகத் தரம் வாய்ந்த, நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் அமையப்பெற்றுள்ள டி ஸ்டுடியோஸ் போஸ்ட் நிறுவனம், முன்னணி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

இயக்குநர் விஜய் பகிரும் உத்வேகம் 

இந்தக் கூட்டணி குறித்துப் பேசிய இயக்குநர் விஜய், சென்னை இந்திய சினிமாவின் இதயத்துடிப்பு என்று வலியுறுத்தினார்.

“திரைப்படத் தயாரிப்பின் சில துறைகளில் மும்பை எவ்வாறு முன்னணியில் உள்ளது என்பதை நான் பல ஆண்டுகளாகக் கவனித்து வருகிறேன். அதுதான் இங்கு (சென்னையில்) உலகத் தரம் வாய்ந்த படைப்பாற்றல் சூழலை உருவாக்க என்னைத் தூண்டியது. டாக்டர் ஐசரி கே. கணேஷ் சார் என்னுடைய இன்ஸ்பிரேஷன். அவரது ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வை என்னை எப்போதும் வழிநடத்தியுள்ளன. இந்தப் புதிய பயணத்தில் அவருடன் இணைந்திருப்பது ரொம்பவே ஸ்பெஷல். வருங்காலத்தில் ‘வேல்ஸ் – டி ஸ்டுடியோ’ தமிழ் சினிமாவை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்லும் நிறுவனமாக இருக்கும்,” என்றார்.

மேலும், இந்தப் புதிய ஸ்டுடியோவில் உயர்தர கேமராக்கள், புரொடக்ஷன் கருவிகள், எடிட்டிங் சூட்ஸ், ஒலி மற்றும் விஷூவல் எஃபெக்ட்ஸ் சப்போர்ட் மற்றும் அவுட்டோர் யூனிட் என அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் ரிலாக்ஸாகப் பணிபுரிய இது உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

டாக்டர் ஐசரி கே. கணேஷின் தொலைநோக்கு 

தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் இந்த இணைவு குறித்துப் பேசுகையில், தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாகக் குறிப்பிட்டார்:

“இயக்குநர் விஜய்யுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி. சினிமா துறையினர் நம்பிக்கையுடனும் சுதந்திரமாகவும் பணிபுரியும் வகையில் உலகத் தரத்திலான கிரியேட்டிவ் இடத்தை சென்னையில் உருவாக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டிருக்கிறேன். நான் ஆசைப்பட்ட விஷயமும், டி ஸ்டுடியோஸ் போஸ்ட்டின் விருப்பமும் ஒன்றாக இருந்தது. திறமையான அணியினருடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது, “‘வேல்ஸ் – டி ஸ்டுடியோ’ மூலம், திரைத்துறையினருக்குச் சிறந்த வசதிகளை வழங்குவதையும், சினிமா தரத்தை உயர்த்துவதையும், தமிழ்த் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். திரைப்படத் தயாரிப்பிற்கான மையமாகச் சென்னையை வலுப்படுத்துவதே எங்கள் குறிக்கோள்,” என்றார்.

டாக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் இயக்குநர் விஜய் இடையேயான இந்த வலுவான கூட்டணி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பிலும் தொழில்நுட்பத்திலும் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெறுமென்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

உடனடி செய்திகள்