அநீதி – விமர்சனம்!
அங்காடி தெரு, வெயில் & ஜெயில் ஆகிய படங்கள் மூலம் எளியவர்களின் வாழ்க்கையையும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும் தொடர்ந்து தனது படங்களில் பதிவு செய்து வந்த டைரக்டர் வசந்தபாலன், இந்த படத்திலும் சைக்கோ பிரச்சனை, பெண்கள் பணக்கார வீடுகளில் வேலை பார்க்கும் போது சந்திக்கும் பிரச்சனைகள்,கார்ப்பரேட்டின் இன்னொரு முகம், போலீஸார் எளிய மக்களை நடத்தும் விதம் இப்படி ஒரே படத்தில் பல விஷயங்களையும் , ஆழமாக இல்லாமலும் தெளிவாக சொல்லாமலும் கடுபேற்றி இருக்கிறார் . அதிலும் பிரச்னைக்குரிய கார்ப்பரேட் ஓனரை கொலை செய்து விட்டால் பிரச்சனைகள் எல்லாம் மாறி விடும் என்ற சினிமாத்தனமான தீர்வைக் காட்டி போரடித்து விட்டார்.

அதாவது ஸ்விக்கி, டொமோட்டா ஸ்டைலில் இயங்கும் மீல் மங்கி என்ற நிறுவனத்தில் ஃபுட் டெலிவரி பாய் அர்ஜுன் தாஸ், தினசரி தான் டெலிவரி செய்யும் வீடுகளில் பல்வேறு அவமானங்களுக்கு இடையே உணவு டெலிவரி செய்து வருகிறார். சிறு வயதில் நடந்த கசப்பான சம்பவத்தால் அவருக்கு ஓசிடி என்னும் மன நோய் ஏற்படுகிறது. இதனால் தன்னை அவமானப்படுத்துபவர்களை எல்லாம் கொலை செய்வது போல் அவருக்கு எண்ணம் ஏற்படுகிறது. இதற்காக அவர் ஒரு மனநல மருத்துவரை அணுகி ட்ரீட்மென்ட் எடுத்து வருகிறார். இதற்கிடையே அவர் உணவு டெலிவரி செய்ய ஈசிஆரில் ஒரு பெரிய பங்களாவிற்கு போன இடத்தில் துஷாரா விஜயனுடைய நட்பு ஏற்படுகிறது. வழக்கம் போல் அதுவே காதலாக மாறி இவரது மன நோயையும் சரி செய்கிறது. இருவரும் சந்தோஷமாக லவ்வி வரும் சூழலில் ஒரு நாள் இரவில் துஷாரா விஜயனின் முதலாளி அம்மாவிடம் இருவரும் மாட்டிக் கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து, அந்த முதலாளியம்மா அடுத்த சில மணி நேரத்தில் இறந்து விடுகிறார். முதலாளி அம்மாவின் பிள்ளைகளுக்கும், போலீசாருக்கும் அவர் எப்படி இறந்தார் எனச் சந்தேகம் ஏற்படுகிறது. இதனால் அர்ஜுன் தாசும், துஷாரா விஜயனும் கொலை குற்றத்திற்கு ஆளாகின்றனர். இதையடுத்து அந்த முதலாளியம்மா எப்படி இறந்தார்? இந்தக் கொலை குற்றத்தில் இருந்து இருவரும் தப்பித்தார்களா, இல்லையா? என்பதே அநீதி படத்தின் கதை.
ஹீரோ அர்ஜூன் தாஸ், தன் ரோலின் வீரியத்தை முழுமையாக புரிந்து நடித்து கவனம் பெறுகிறார். எளிய மக்களை இழிவாக நடத்துபவர்களை பார்த்தால் அவர்கள் மீது கொலைவெறி கொள்வது, யாருடனும் பேசாமல் இறுக்கமாக இருப்பது, என பல இடங்களிலும் மிக சிறப்பாக நடித்திருப்பவர், காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தடுமாறி விடுகிறார்.. ஆனாலும் இவரது குரலே இவர் கேரக்டருக்கும் பெரிதும் துணை புரிவதால் ஸ்கோர் செய்கிறார். நாயகியான துஷாரா விஜயன், பக்கா வேலைக்கார பெண்ணாக அதிலும்பக்கத்து வீட்டு பெண் போல் இருப்பதோடு, கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
பந்தாவான பணக்கார திமிருடன் வரும் சாந்தா தனஞ்சயன் ரசிகனுக்கே கோபத்தைத் தூண்டும்படியான நடிப்பை வெளிப்படுத்து அசத்துகிறார். திருநெல்வேலி வட்டார வழக்கில் வெகுளி மனிதராக வரும் காளி வெங்கட் உடல்மொழி, வசன உச்சரிப்புதான் படத்தை ஒஎப்பேற்றுகிறது. அவரது மகனாக வரும் குழந்தை நட்சத்திரம் ரெனிஷ் புதுவரவாம்.. அடடே சொல்ல வைக்கிறான். வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்ரவர்த்தி, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோரின் நடிப்பில் சிவாஜியும், எஸ்.ஜே.சூர்யாவும் எட்டிப் பார்க்கிறார்கள்..
கேமராமேன் எட்வின் சாகேவின் ஒளிப்பதிவு கதாபாத்திரங்களின் எளிமையை அழகாக காட்சிப்படுத்தியிருப்பதோடு,நைட் எஃபெக்ட் காட்சிகளையும், வெயில் காலபூமி காட்சிகளையும் ரசிக்கும்படி வழங்கி இருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையில் மட்டும் ஆர்வம் காட்டி பாடலில் சொதப்பி விட்டார்.
ஒரு கதையில் தொடங்கிய கதை அடுத்தடுத்து வேறொரு கதையில் பயணித்து அங்கும் இங்குமாகச் சுற்றி மறுபடியும் வந்த இடத்திலேயே முடிந்திருக்கும் நான் லைனர் பாணியில் மிகவும் சாதாரணமாக உருவாக்கப்பட்டுள்ள திரைக்கதையில் புதுமையான அம்சங்கள் எதுவும் இல்லை. ஏற்கெனவே பல படத்தில் நாம் பார்த்த காட்சிகளை மீண்டும் இதே படத்தில் பார்ப்பது போலவே உள்ளது.வசந்த பாலனே இயக்கிய அங்காடித் தெரு, தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படங்களின் சாயல்கள் கூட பல இடங்களில் உள்ளது.
மொத்தத்தில் அநீதி – கோலிவுட்டில் இன்னொரு சினிமா அவ்வளவே
மார்க் 2.5/5


