அம்மா கணக்கு டிரைலர் + பாடல்கள் இதோ!
தனுஷ் தயாரிப்பில் அஸ்வினி ஐயர் திவாரியின் இயக்கத்தில் சமுத்திரக்கனி, அமலா பால், ரேவதி போன்றோர் நடித்துள்ள படம் – அம்மா கணக்கு. இதன் பாடல்களும் டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளன.
அஸ்வினி, இதற்கு முன்பு Nil Battey Sannata என்கிற படத்தை இயக்கியுள்ளார். இது பல சர்வதேசப் பட விழாக்களில் விருதைப் பெற்றுள்ளது. அந்தப் படம்தான் தற்போது அம்மா கணக்கு என்கிற பெயரில் தமிழில் உருவாகியுள்ளது. தன்னந்தனியாக தன் மகளை வளர்க்கும் ஒரு தாயின் கதைதான் அம்மா கணக்கு. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.அம்மா கணக்கு, ஜூன் 24-ம் தேதி வெளியாக உள்ளது.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதுவரை தான் தயாரித்த படங்களின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளாத தனுஷ், முதன் முறையாக ‘அம்மா கணக்கு’ சந்திப்பில் கலந்து கொண்டார். அச்சந்திப்பில் தனுஷ் பேசும்போது, “என்னை யாரும் கூப்பிடவில்லை, நானே போன் செய்து எங்கு நடக்குது, எப்போனு கேட்டுட்டு நானே கிளம்பிவந்துட்டேன். என்னைக்குமே ஒரு படம் அந்த நடிகர்களுக்கான படமா தான் இருக்கனும், நான் வந்து தொந்தரவு தரவேணாம்னு தான் நான் தயாரிக்கும் படங்களின் நிகழ்ச்சிகளில் கலந்துக்குறது இல்லை. ஆனால் இந்தப் படத்தை என்னுடைய படமாகவே நினைக்கிறேன். எனக்கு ரொம்ப ஸ்பெஷல் இந்த “அம்மா கணக்கு”.
தயாரிப்பாளர் ஆனந்த் எல் ராய்யை சந்தித்த போது, இந்தப் படத்தின் இந்தி டிரெய்லரை பார்த்தேன். பார்த்ததுமே இந்தப் படத்துக்கான தமிழ் ரீமேக் உரிமையை நானே வாங்கிக்கிறேன்னு சொன்னேன். அதற்குப் பிறகு தான் முழு படமும் பார்த்தேன். சமுதாயத்திற்கு சொல்ல வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் இந்தப் படத்தில் இருக்கு. பிளஸ் 2வில் நானும் கணக்கு ஃபெயில், குழந்தைங்க கணக்குப் பாடம் படிக்க எவ்வளவு கஷ்டப்படுறாங்க, அதை எப்படியெல்லாம் சமாளிக்கலாம், படிக்கும் குழந்தைகள் என்ன மாதிரியான மன அழுத்தத்திற்கு ஆளாகுறாங்க, பெற்றோர்கள் எப்படி அதை புரிஞ்சிக்கணும்னு இந்தப் படம் நிச்சயம் சொல்லும்” என்றார்.


