‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ (ஏ ஆர் எம்) விமர்சனம்!
நம்மூர் விட்டலாச்சார்யா, இராம.நாராயணன் படங்களை விரும்பி பார்ப்பீர்களா? அப்படியெனில் உங்களை கவரவே ஒரு சிலையை மையமாக வைத்துக் கொண்டு அட்டகாசம் செய்யும் தொழில்நுட்பக் குழு. மூன்று விதமான காலக்கட்டத்தில் நடக்கும் கதைக்கேற்ற அதற்கேற்ற உடை, ஒப்பனை, கலை இயக்கம், ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள் மட்டுமின்றி திபு நினன் தாமஸூடைய இசையுடன் மாயாஜாலம் செய்ய முயன்றிருக்கிறது ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ டீம். எடுத்துக் கொண்ட சப்ஜெக்டை இன்னும் கொஞ்சம் திரைக்கதையாக்குவதில் அக்கறைக் காட்டி இருந்தால் ஹாலிவுட்டே மிரண்டிருக்கும்.
கவர்மெண்ட் ஜாப்புக்காக எக்ஸாம் எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் ஹீரோ டோவினோ தாமஸ். அவரது தாத்தா, ஊர் கோவிலில் இருக்கும் பழம்பெரும் அதிசய விளக்கை திருட முயன்றதால், அவரையும், ஹீரோவையும் கூட ஊர் மக்கள் திருடனாகவே பார்த்து அவ்வபோது அவமானப்படுத்துகிறார்கள். இதற்கிடையே, அதிசய விளக்கு பற்றி ஆவணப்படம் எடுக்க அந்த ஊருக்கு வரும் ஹரிஷ் உத்தமன் அந்த விளக்கை திருட திட்டம் போடுவதோடு, அதை டோவினோ தாமஸ் மூலமாகவே செய்யவும் முயற்சிக்கிறார். அதை அடுத்து நடந்தது என்பதை சுவாரஸ்யமாக சொல்ல்ல ட்ரை பண்ணி இருப்பதே ‘ஏ.ஆர்.எம்’- அதாவது ’அஜயனின் ரெண்டாம் மோஷனம்’ (அஜயனின் ரெண்டாவது திருட்டு) என்ற மலையாள வாக்கியத்தின் சுருக்கமான ‘ஏ.ஆர்.எம்’ படக் கதை.
நடிகர் டொவினோ தாமஸின் ஐம்பதாவது படமாமிது டொவினோவுக்கு கதைப்படி ட்ரிப்பிள் ஆக்ஷன். கேளு, மணியன், அஜயன்னு என்ற மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். குறிப்பாக, ஊரில் களவாணியாக வரும் மணியன் முரட்டுத்தனமான, யாருக்கும் பயப்படாத ஒரு கதாபாத்திரம். ஆனால், அவருடைய பேரனாக வரும் அஜயன் பயந்த, தயங்கி நிற்கும் கதாபாத்திரம். இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்குமான வித்தியாசத்தை அழகாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார். குறிப்பாக தாத்தா செய்த தவறுக்காக தன்னையும் திருடனாக பார்க்கும் ஊர் மக்கள் முன்னிலையில் தனது இயலாமையை வெளிப்படுத்தும் அஜயன் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடம் இறக்கத்தை சம்பாதிப்பவர், குஞ்சிக்கெழு என்ற கதாபாத்திரத்தில் வீரமும், விவேகமும் நிறைந்த மனிதராக நடிப்பில் நிதானத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படி மூன்று கதாபாத்திரங்களுக்கும் தோற்றம் மூலமாக வெளிக்காட்டிய வேறுபாடுகளை விட, நடிப்பு மூலம் டோவினோ தாமஸ் வெளிக்காட்டியிருக்கும் வேறுபாடு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி, கீர்த்தி ஷெட்டி, ரோகிணி. இதில் ஐஸ்வர்யா ராஜேஜூக் கு முக்கியத்துவம் இல்லை. சுரபி கதாபாத்திரம் கவனிக்க வைக்கிறது. மற்றபடி ரோகிணி, கீர்த்தி ஷெட்டி கொடுத்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார்கள். டொவினோவின் நண்பனாக வரும் ஜோசப் கதாபாத்திரம், கொல்லனாக வருபவர் கதாபாத்திரத்தை இன்னுமே சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம். முன்னரேச் சொன்னது போல் இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது. குறிப்பாக மூன்று காலக்கட்டங்களை தனது பீஜியம் மூலமாக வேறுபடுத்தி காட்டியிருக்கிறார்.
கேமராமேன் ஜோமன் டி.ஜான் அழகான கேரள பகுதிகளுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். எடிட்டர் சமீர் மொஹமத், மூன்று கதாபாத்திரங்களையும், மூன்று காலக்கட்டங்களையும் நான் லீனர் முறையில் தொகுத்தாலும், ரசிகர்களுக்கு எந்தவித குழப்பமும் ஏற்படாத வகையில் மட்டும் இன்றி எந்த இடத்திலும் படம் தொய்வடையாதவாறு காட்சிகளை தொகுத்து ரசிக்க வைத்திருக்கிறார். ஸ்டண்ட் சீன்களை வடிவமைத்த விக்ரம் மோர் மற்றும் பீனிக்ஸ் பிரபு, களரி சண்டைக் காட்சியை வடிவமைத்த பி.வி.சிவகுமார் குருக்கள் ஆகியோரது பணியும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. மேலும் சலீம் லஹிரின் தலைமையில் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் படத்தின் லெவலை சில அடி உயரம் உயர்த்தி இருக்கிறது .
ஒரு ஃபேண்டஸி எலமென்ட் இலக்கணப்படி டாப் ஸ்டார்ஸ்களான மோகன் லால், விக்ரம், சிவ ராஜ்குமார் என மூவரும் குரல் கொடுத்திருக்கிறார்களாம். தமிழ்ப் பதிப்பில் விக்ரம் குரலும், மலையாளப் பதிப்பில் மோகன் லால் குரலும், கன்னடப் பதிப்பில் சிவ ராஜ்குமார் குரலும் சேர்க்கப்பட்டிருப்பது ஒர்த்தாகவே இருக்கிறது
ஆனாலும் , சொல்ல வந்த விஷயங்களை அழுத்தம் செலுத்தாமல் கொண்டு போவதும், கதையின் மெயின் பாயிண்டுக்குள் போகவே ஏகப்பட்ட நேரம் எடுக்கும் ஃபர்ஸ்ட் ஆஃப் , மணியன் வீரதீரன், கள்வன் என்பதைத் தாண்டி அவரை விரும்ப வேண்டிய காரணங்கள் எதுவும் இல்லாததே பெரும் பலவீனம். அதே சமயம் மலையாளத்தில் இப்படியோர் படைப்பு உருவாக்கி இருப்பதைப் பாராட்டி பார்க்கத் தகுந்த பட பட்டியலில் இடம் பிடித்து விட்டதென்னவோ நிஜம்.
மார்க் 3.5/5