‘ஏஸ்’ -விமர்சனம்!

Ace என்பது பெரும்பாலான சீட்டு விளையாட்டுகளில் மிக உயர்ந்த மதிப்புள்ள அட்டையாகும். இது அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் உயர்ந்த தரம் ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு குறியீடாகவும் பயன்படுத்தப்படுகிறது. “Ace up your sleeve” (ரகசியமான நன்மை), “Ace in the hole” (மறைக்கப்பட்ட பலம்) போன்ற சொற்றொடர்கள் Ace இன் இந்த உயர்ந்த நிலையை பிரதிபலிக்கின்றன.சுருக்கமாக, Ace இன் பயணம் குறைந்த மதிப்புள்ள அட்டையில் இருந்து சீட்டுக் கட்டுகளின் ராஜாவுக்கு (King) மேலான ஒரு நிலைக்கு உயர்ந்தது, இது விளையாட்டுகளின் விதிகள் மற்றும் சமூக, அரசியல் மாற்றங்களால் உந்தப்பட்டது. அந்த “ஏஸ்” என்ற டைட்டிலில் வெளியாகி இருக்கும் சினிமா – இது நீங்கள் எந்தவித முன் முடிவுகளோ, எதிர்பார்ப்புகளோ இல்லாமல், திரையில் விரியும் காட்சிகளை அப்படியே உள்வாங்கிக் கொள்ள வேண்டிய ஒரு தனித்துவமான, உருப்படியான சினிமா அனுபவம். தேவையில்லாமல் மூளையைக் கசக்கிக் கொண்டு, “இது என்ன வகையான கதை?” என்று யோசிக்கத் தேவையில்லை. ஆம், இதில் குற்றச் சம்பவங்கள் அடுத்தடுத்துசரம் கோர்க்கின்றன; ஆனால், “ஏஸ்” ஒரு தீவிரமான கிரைம் படம் என்று கூறிவிட முடியாது. பணக் கொள்ளை காட்சிகள் பரபரப்பை கூட்டுகின்றன; அப்படியானால், இது கொள்ளைப் படமா என்று கேட்டால், அதற்கும் “இல்லை” என்பதே பதில். படத்தில் காதல் இழையோடுகிறது, அடடா, காதல் இருக்கிறதே என நீங்கள் அவசரப்பட்டு இது காதல் படம் என்று முடிவு செய்துவிடக் கூடாது. ஏனென்றால், இது வெறும் காதல் கதையும் இல்லை.அப்படியானால், “ஏஸ்” எந்த மாதிரியான படம் தான் என்று கேட்கிறீர்களா? இது எல்லாவற்றின் சுவைகளும் கலந்த ஒரு அற்புதமான திரை விருந்து! எதிர்பாராத திருப்பங்களும், உணர்வுபூர்வமான தருணங்களும், விறுவிறுப்பான காட்சிகளும் ஒருங்கே அமைந்த, வரையறைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு புதிய சினிமா அத்தியாயம். “ஏஸ்” உங்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும்!
அதாவது பொழப்புக்கு தப்பு செய்து சிறைக்கு போய்விட்டு திரும்புவதை வாடிக்கைக் கொண்ட கொண்டவர் நாயகன் போல்ட் கண்ணன். ஒரு சூழலில் தனது குற்றப் பின்னணியை மறந்து புதிய வாழ்க்கையைத் தொடங்க மலேசியா போகிறார் ). மலேசியாவில் குப்பை பொறுக்கி வாழ்ந்தாலும் , தொழிலதிபராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் யோகி பாபு (அறிவு) அவரைத் தனது நண்பனின் உறவினராக அறிமுகப்படுத்தி, தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு, எதிர் வீட்டில் வசிக்கும் நாயகி ருக்குவுக்கும் (ருக்மணி வசந்த்) போல்ட் கண்ணனுக்கும் பார்தவுடன் பச்சென்ற காதல் மலர்ந்து விடுகிறது. அந்த காதலி க்குவுக்கு அவரது வளர்ப்புத் தந்தையால் (பப்லு பிருத்விராஜ்) சொத்துப் பிரச்னை இருப்பது தெரியவருகிறது. அதைத் தீர்த்தால் மட்டுமே அவரது தொல்லையில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ முடியும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. இந்த நிலையில், நாயகன் தனக்கு கை வந்த கலையான வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார். அதனால் அவருக்கு ஏற்படும் சிக்கல்கள் என்ன என்பதை கமர்ஷியல் மசாலாவுடன் கலந்து சொல்லி இருப்பதுதான் ‘ஏஸ்’ படக் கதை.
நாயகன் போல்ட் கண்ணன் என்ற நாமகரணத்தில் வரும் விஜய் சேதுபதி தன் கேரக்டரை அநாயசமாக ஹேண்டில் செய்திருக்கிறார். தன் பெயருக்குக் காரணமாக ஒவ்வொரிடமும் ஒவ்வொரு கதை சொல்வது; யோகி பாபுவை ஜாலியாக டீல் செய்வது; ருக்குவிடம் வழியாமல் லவ்வுவது, ஓடிக்கொண்டே இருப்பது என மைல்டான காமெடி மற்றும் நக்கல் பாணியுடன் ஜாலியாக நடித்துக் கொடுத்திருக்கிறார். அதிலும் உடல் கொஞ்சம் இளைத்து இருப்பதும் இந்த ரோலுக்கு பெஉம் பலமாக இருக்கிறது. நாயகி ருக்மிணி வசந்த் நீட்டான நடிப்பை தந்திருக்கிறார். ஆனால் டயலாக் டெலிவரியில் கவனம் செலுத்தாததால் ஒட்டாமல் போய் விடுகிறார். ஆனாலும் அடுத்தடுத்து கோலிவுட் படங்களில் மிளிரும் ஒளிவட்டம் தென்படுகிறது. . பப்லூ பிருத்விராஜ் ஒரு டெரர் வில்லனாக தொடங்கினாலும் அவரது கேரக்டர் போகப் போக அழுத்தமில்லாமல் போய்விடுகிறது. திவ்யா பிள்ளை ஈர்க்கிறார்.
வெகு காலத்துக்குப் பின்னர் கோலிவுட்டின் செட் பிராப்பர்ட்டி யோகிபாபு ஏற்றிருக்கும் வேடமும் அதைச் சிறப்பாகச் செய்துவிட வேண்டும் என்று அவர் காட்டியிருக்கும் முனைப்பும் அவர் இருப்பைக் காண்பித்து உள்ளது, ஆனால் அந்த உருவக்கேலியை விடவே மாட்டாரா?
கேமராமேன் கிரன்பக்தூர்ராவத் ஒளிப்பதிவில் மலேசியாவின் அழகுகள் புதிதாகவும் அழகாகவும் பதிவாகியிருக்கின்றன.காட்சிகளுக்கேற்ற லைட்டிங்கிலும் தனிக்கவனம் பெறுகிறார்.
மியூசிக் டைரக்டர் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி அமைந்திருக்கின்றன. குறிப்பாக தாமரையின் வரிகளில், ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் ‘உருகுது உருகுது’ என்ற பாடல் படம் முடிந்த பின்னரும் ஞாபகத்தில் இருப்பது சிறப்பு. பேக்ரவுண்ட் மியூசில் அமைத்துள்ள சாம்.சி.ஏஸ் இசை படத்தின் தன்மைக்கும்ப் பலம் சேர்க்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. அதிலும் சண்டைக் காட்சிகளில் இவர் பணி தனித்து கவர்கிறது.
படத்தைத் தொகுத்துள்ள பென்னி ஆலிவர்,இரண்டாம் பாதியில் கொஞ்சம் அசந்து விட்டார் போலும்.
ஹெய்ஸ்ட் படம்- அதுவும் விஜய்சேதுபதிக்கென எழுதப்பட்ட கதைம் திரைக்கதை வசனத்தில் இன்னும் கொஞ்சம் அக்கறைக் காட்டி இருக்கலாம் என்றாலும் க்ளைமாக்ஸூக்காக தனியா ரூம் போட்டு யோசித்து அசத்திவிட்டார்கள்.
மொத்தத்தில் இந்த ஏஸ் – பாஸ்
மார்க் 3.5/5