’அக்யூஸ்ட்’ -விமர்சனம்!

’அக்யூஸ்ட்’  -விமர்சனம்!

ஒரு எம்.எல்.ஏ. கொலை, குற்றவாளி எனச் சிறைவாசம், நீதிமன்றப் பயணம், நடுவழியில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள்… இவையெல்லாம் ஒரு க்ரைம் த்ரில்லருக்குத் தேவையான மசாலாக்கள். இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் தன் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் இந்த மசாலாக்களைக் கூட்டி இருக்கிறார். ஆனால், இந்தக் கதைக்களத்தை ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக மாற்றினாரா என்பதுதான் இங்கே கேள்வி.

கதை: கணக்கில் சிக்கிய ஒருவன்!

ஹீரோ உதய், ஒரு எம்.எல்.ஏ.வைக் கொலை செய்த குற்றவாளியாகி புழல் சிறையில் அடைக்கப்படுகிறார். வழக்கின் விசாரணைக்காக புழல் சிறையிலிருந்து சேலம் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். இதற்காக, அசிஸ்டெண்ட் கமிஷனர் உத்தரவுப்படி, இன்ஸ்பெக்டர் தலைமையில் இரண்டு கான்ஸ்டபிள்கள், அதில் ஒருவர் அஜ்மல், இந்தப் பொறுப்பை ஏற்கிறார்கள்.

பயணம் தொடங்கிய பின்னர்தான், இது ஒரு திட்டமிட்ட சதி என்பது அஜ்மலுக்குத் தெரியவருகிறது. அடுத்தடுத்து, கொலையாளிகள் மட்டுமல்லாமல், உடன் வரும் போலீஸ் டிபார்ட்மெண்டே உதயாவைக் கொல்லக் குறி வைக்க, அஜ்மல் உயிருக்கும் ஆபத்து நேர்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், அவர்களால் நீதிமன்றத்துக்குச் செல்ல முடிந்ததா? அத்துடன், இந்தப் பயணத்துக்குள் உதய் யார், எப்படி இந்தச் சதி வலைக்குள் சிக்கினார் என்பதெல்லாம் பிளாஷ்பேக்குகளாகச் சொல்லப்படுவதுதான் ‘அக்யூஸ்ட்’டின் கதை.

நடிப்பு: கணக்கு மற்றும் மிடுக்கான காக்கி

ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், லவ், காமெடி காட்சிகளில் அசத்தியிருக்கும் உதய், ‘கணக்கு’ என்ற தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருப்பதோடு, அளவாக நடித்துப் பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்றுவிடுகிறார். அதிலும், நாயகி ஜான்விகா காளக்கேரியைக் ‘கணக்கு’ பண்ணும் போது உற்சாகம் தூக்கலாக நடித்தும் இருக்கிறார்.

இன்னொரு ஹீரோ லெவலில் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் அஜ்மல், சாதாரண காவலராக எண்ட்ரி கொடுத்தாலும், காவல்துறையின் பலம் மற்றும் துப்பாக்கியின் வீரியம் போல், மிடுக்காகவும், துடுக்காகவும் நடித்திருக்கிறார். அவ்வப்போது தனது வருங்கால மனைவியுடன் போனில் பயந்தும், பாசமாகவும் பேசும் காட்சிகளும் சிறப்பு. ஆனால், சில இடங்களில் அவரது அப்பாவித்தனம் ஓவராகிப் போய், அசடாக இருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அதற்கான சான்று யோகி பாபுவின் வசனங்களிலேயே கிடைக்கிறது. அந்த அளவுக்கு யோகி பாபு, உதயாவையும் அஜ்மலையும் ‘ஓட்டு ஓட்டு’ என்று ஓட்டுகிறார். அந்தக் காட்சிகள் எல்லாம் சிரிக்க வைக்கின்றன என்பது கூடுதல் ஆறுதல்.

நாயகியாக நடித்திருக்கும் ஜான்விகா காளக்கேரி, எளிமையாக இருந்தாலும், நடிப்பு மற்றும் நடனத்தில் அசத்தியிருக்கிறார். அஜ்மலின் ஜோடியாக செல்போனில் காதல் செய்யும் மற்றொரு நாயகி சாண்டிகாவின் நடிப்பிலும் குறைவில்லை.

எம்.எல்.ஏ.வாக நடித்திருக்கும் பவன், அவரது மனைவியாக நடித்திருக்கும் சுபத்ரா, எம்.எல்.ஏ.வின் தம்பியாக நடித்திருக்கும் ஸ்ரீதர், தயா பன்னீர்செல்வம், இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ், நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் தீபா பாஸ்கர், அரசியல்வாதியாக நடித்திருக்கும் டி.சிவா என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

தொழில்நுட்பம்: இசை சோதனையும் ஒளிப்பதிவு சிறப்புமாக

நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்கள் பழுதில்லாமல் ஒலிக்கின்றன. ஆனால், பின்னணி இசையில்தான்… குறிப்பாக நகைச்சுவைக் காட்சிகள் வரும் போது ரொம்பவும் சோதிக்கிறார் மனிதர். சில இடங்களில் எதுக்கு இந்த மியூசிக்ன்னு கடுப்பேத்துகிறார்.

மருதநாயகத்தின் ஒளிப்பதிவில் எந்தக் குறையும் இல்லை. சிறைச்சாலை, பயணக் காட்சிகள், இரவு நேர சண்டைகள் என அனைத்தையும் கச்சிதமாகப் படம்பிடித்துள்ளார்.

இயக்கம்: தொய்வும் தொல்லையும்!

எழுதி இயக்கியிருக்கும் பிரபு ஸ்ரீநிவாஸ், மிக விரிவாக ஸ்கிரிப்ட் வேலை செய்திருப்பது போல் தோன்றினாலும், அந்தக் காரணத்தினாலேயே திரைக்கதை அங்கங்கே தொக்கி நிற்கிறது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால், இதே கதைக்களத்தை இன்னும் சிறப்பாகச் சொல்லியிருக்கலாம். ஒரு சில போலீஸ் அதிகாரிகள் தவறு செய்யலாம். ஆனால், ஒரு கட்சியைச் சேர்ந்த பதவி இல்லாத பிரமுகரைக் காப்பாற்றுவதற்காக ஒட்டுமொத்த போலீஸ் டீமுமா வேலை செய்யும்? என்று லாஜிக் கேள்விகள் எழும்புகின்றன. பார்வையாளர்களின் யூகங்களுக்கு ஏற்ப திரைக்கதை அமைந்திருப்பது படத்தைத் தொய்வடையச் செய்துவிடுகிறது.

எம்.எல்.ஏ.வின் கொலைக்கான பின்னணியும், அதில் தொடர்புடைய நாயகனின் பின்னணியும் அதர பழசாக இருப்பதோடு, படத்தின் காட்சிகளும் ஏதோ பழைய படத்தைப் பார்க்கும் உணர்வையே கொடுக்கின்றன. இறுதியாக, ‘ஒரு மனிதன் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் இந்தச் சமுதாயம்தான் காரணம்’ என்கிற பொருளில் ஸ்லைடு போட்டு அனுப்புவதெல்லாம் சலிப்பைத் தந்துவிடுகிறது. ஒரு க்ரைம் த்ரில்லரில் லாஜிக் மீறல்கள் பெரிதாக இல்லாவிட்டாலும், இங்கு அவை கண்களை உறுத்துகின்றன.

மொத்தத்தில்: இந்த ‘அக்யூஸ்ட்’ அட்ராக்ட் செய்யவில்லை!

‘அக்யூஸ்ட்’ திரைப்படம், பரபரப்பான கதைக்களத்தை கொண்டிருந்தாலும், சலிப்பான திரைக்கதை, பலவீனமான லாஜிக் மற்றும் சில இடங்களில் எரிச்சலூட்டும் பின்னணி இசை காரணமாக அதிரடி ஆக்‌ஷன் ரசிகர்களைக்கூட அட்ராக்ட் செய்யத் தவறிவிட்டது.

மார்க்; 2.25/5

Related Posts

error: Content is protected !!