ஹவுஸ்மேட்ஸ் -விமர்சனம்!
அறிவியல் புனைவுப் படங்கள் தமிழில் அரிது. பிரபஞ்சம் எப்படித் தோன்றியது, அதன் எதிர்காலம் என்ன போன்ற கேள்விகளுக்கு அறிவியல் இன்னும் முழுமையான பதில்களை அளிக்கவில்லை. இந்தக் கேள்விகளுக்கான தேடல்கள் தத்துவார்த்தமாகவும், அறிவியல் ரீதியாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், அறிவியலில் நம்ப முடியாத பல விஷயங்களுக்கு விடை தேடும் ஒரு புனைவை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம்தான் இயக்குநர் டி.ராஜவேலின் ‘ஹவுஸ்மேட்’. ஆனால், புதியதொரு அறிவியல் களத்தைத் தொட்ட இயக்குநர், அதை சுவாரஸ்யமாகவும் நம்பும்படியாகவும் சொன்னாரா என்பதுதான் கேள்வி.
கதைக்களம்: பழக்கப்பட்ட அமானுஷ்யத்திலிருந்து புதிய ‘ட்விஸ்ட்’
காதலி அர்ஷா பைஜுவின் தந்தை கவிதா பாரதி, “உனக்கு ஒரு சொந்த வீடு இருக்கா?” என்று ஒற்றைக் கேள்வி கேட்க, அதற்காக நாயகன் தர்ஷன் படும் பாடுதான் படத்தின் ஆரம்பம். ஒரு செகண்ட் ஹேண்ட் ஃபிளாட்டை வாங்கிய தர்ஷன், காதலி அர்ஷாவை மணந்துகொண்டு அங்கு குடியேறுகிறார். பின்னர் அங்கு நடக்கும் வினோதமான அனுபவங்கள், நாம் பல காலமாகப் பார்த்துப் பழக்கப்பட்ட அமானுஷ்யங்களாகத் தோன்றுகின்றன. வழக்கமான ஆவிப் படம்தானே என்ற அலுப்புடன் நாம் நம் செல்போனில் ‘ஆந்தை நியூஸ் சேனல்’ பார்க்க ஆரம்பிக்கும் நேரம், எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்றைக் கொடுக்கிறார் டைரக்டர். அதாவது அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்கள் எதுவுமே ஆவியால் நடைபெறுபவை அல்ல என்று, அதற்கான ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் விளக்கத்தைத் தருகிறார். டைம் ட்ராவல், டைம் லூப் போன்ற ஹாலிவுட் படங்கள் வழியாக நமக்கு ஏற்கெனவே அறிமுகமான வழியில், இதில் ‘டெசராக்ட்’ (Tesseract) என்று ஒரு கற்பனை நிலையை அறிமுகப்படுத்துகிறார். அதன்படி, 2012 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளின் நிகழ்வுகள் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இணைகின்றன. இதனால், ஒரே வீட்டில் அந்தந்த ஆண்டுகளில் வாழ்ந்தவர்கள், ஒருவருக்கொருவர் தெரியாமல் ஒரே நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது போன்ற நிகழ்வுகள் எப்படி முடிவுக்கு வந்தன என்பதை இயக்குநர் ஒருவழியாகப் புரியவைத்து அனுப்புகிறார். ஆனால், அவர் சொன்ன விளக்கம் புரிந்தாலும், அதை ஏற்றுக்கொள்வதற்கான சரியான தர்க்க ரீதியான தீர்வை அவர் முன்வைக்கவில்லை என்பது படத்திற்கு ஒரு பலவீனம்.
நடிப்பு: கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த கலைஞர்கள்
படத்தின் நாயகர்களாக நடித்திருக்கும் தர்ஷன் மற்றும் காளி வெங்கட், நாயகிகளாக நடித்திருக்கும் அர்ஷா சாந்தினி பைஜூ மற்றும் வினோதினி ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக, அர்ஷா பைஜுவின் கண்கள் நிறையவே பேசிவிடுகின்றன; இதனால் அவருடைய வசனங்கள் குறைவாகவே இருக்கின்றன. நடிப்பதைவிட, பயப்படுவதே அவருக்கு வேலையாக மாறியிருக்கிறது. காளி வெங்கட், வினோதினி ஜோடியும் இவர்களுடன் நன்றாகவே மல்லுக்கட்டியிருக்கிறார்கள். காளி வெங்கட்டின் நடிப்பு பற்றிச் சொல்லத் தேவையில்லை – அவர் தனது பாத்திரத்திற்கு முழு நியாயம் சேர்த்திருக்கிறார். ஆனால், அவரை ஓவர்டேக் செய்யும் வினோதினி, அங்கங்கே பட்டையைக் கிளப்பி இருக்கிறார். அவர்களின் மகனாக வரும் மாஸ்டர் ஹென்ரியும் சிறப்பாக நடித்திருக்கிறான்.
தொழில்நுட்பம்: இசை மற்றும் ஒளிப்பதிவின் பங்கு
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. நம்ப முடியாத விஷயங்களையும், அதனுடன் பயணிக்கும் கதையின் மாந்தர்களின் உணர்வுகளையும் தனது பின்னணி இசை மூலம் பார்வையாளர்கள் மனதில் கடத்தி, அவர்களையும் அந்த வீட்டினுள் பயணிக்க வைத்திருக்கிறார். இது படத்திற்கு ஒரு பலமான அம்சம்.
ஒரே வீடு, இரண்டு வெவ்வேறு காலகட்டங்கள், வெவ்வேறு கோணங்கள் என்று ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.சதீஷ் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கிறார். ஒரே வீட்டில் பெரும்பாலான காட்சிகள் நகர்ந்தாலும், அவர் தனது கேமரா மூலம் வெவ்வேறு வடிவங்களாகக் காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
இயக்கம் மற்றும் விமர்சனம்: புதிதா, குழப்பமா?
எழுதி இயக்கியிருக்கும் டி.ராஜவேல் தமிழுக்குப் புதிய களத்தை அறிமுகப்படுத்தி இருப்பது ஒரு நல்ல முயற்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த முயற்சி முழுமையாக வெற்றியடையவில்லை. காலகட்டத்தில் உயிரோடு இல்லாத ஒரு நபர் சென்ற காலகட்டத்தில் விபத்திலிருந்து உயிர் பிழைத்துக் கொள்வதாகக் காட்டுவதெல்லாம் சற்று அலுப்பூட்டுகிறது. லாஜிக் மீறல்கள் அங்கங்கே துருத்தி நிற்கின்றன.
ராஜவேல் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் இருப்பதுடன் படத்தையும் இயக்கி இருக்கிறார். கமர்சியலாகவும், காமெடியாகவும் ஒரு கதையைச் சொல்ல வேண்டும், அதை வித்தியாசமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக ரசிகர்களைக் குழப்பி இருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது.


