அமெரிக்கர்கள் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்- ஜோபிடன் அட்வைஸ்!
போர்மேகச் சூழலில் சிக்கியுள்ள உக்ரைனில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜோபிடன் அறிவுறுத்தியுள்ளார். உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எல்லையில் சுமார் 1 லட்சம் வீரர்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அதிபர் பிடன், “அமெரிக்கர்கள் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டிய தருணம் இது. நாங்கள் உலகின் மிகப்பெரிய ராணுவத்தை எதிர்கொண்டுள்ளோம். இது மிகவும் வித்தியாசமான சூழல். நிலைமை விரைவில் கட்டுப்பாடின்றி செல்லலாம்” என்று கூறியுள்ளார். அதிபரின் இந்த அறிவிப்பால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

The U.S. urged its citizens to leave the country within 24-48 hours amid Russian invasion fears, reportedly by media. (Photo by Pavlo Gonchar/SOPA Images/LightRocket via Getty Images)
சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி, கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால், அந்த நாட்டு மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர்.
இந்த நிலையில் ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவை மட்டுப்படுத்துவதற்காகவே உக்ரைன் பிரச்சினையை அமெரிக்கா ஒரு கருவியாகக் கையில் எடுத்திருக்கிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில், அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம் என்றே புதின் தொடர்ந்து முழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


