பாஜகவின் சார்பிலான துணை ஜனாதிபதி வேட்பாளரானார் வெங்கய்ய நாயுடு!

பாஜகவின் சார்பிலான துணை ஜனாதிபதி  வேட்பாளரானார் வெங்கய்ய நாயுடு!

ஜனாதிபதி தேர்தல் இன்று நடந்து முடிந்த நிலையில் தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் தேதி ஆகஸ்ட் 5-ம் தேதி ஆகும். இதற்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் கடந்த 4-ம் தேதி முறைப்படி வெளி யிட்டது. இதன்படி வேட்பு மனு தாக்கல் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 18. மறுநாள் (ஜூலை 19) வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. ஜூலை 21 வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை அதில் போட்டியிடும் வேட்பாளரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள 20 பேர் முன்மொழிய, அதை 20 பேர் வழிமொழிய வேண்டும். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் வேட்பாளராக கோபால்கிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் வேட்பாள ரான கோபால்கிருஷ்ண காந்தி மகாத்மா காந்தி, ராஜகோபாலாச் சாரி ஆகியோரின் பேரன் ஆவார். இவர் மேற்குவங்க ஆளுநராகப் பதவி வகித்துள்ளார். தற்போது அவர் பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில் இன்று பாஜகவின் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக வெங்கய்ய நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெங்கய்ய நாயுடு தற்போது மத்திய நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக உள்ளார். பாஜகவின் தேசிய தலைவராக 2002-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை இருந்தார். மக்களவையில் நீண்ட ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர். தற்போது இவர் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.