நம்ம அசெம்பிளி எலெக்‌ஷனில் 553 கோடீஸ்வரர்கள் + குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நபர்கள் 283 போட்டி

நம்ம அசெம்பிளி எலெக்‌ஷனில்  553 கோடீஸ்வரர்கள் + குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நபர்கள் 283 போட்டி

தற்போது நடக்க இருக்கும் தமிழ்நாடு அசெம்பிளி எலெக்‌ஷனில் 553 கோடீஸ்வரர்களும், குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நபர்கள் 283 பேரும் போட்டியிடுவதாக ஆய்வு அறிக்கை தகவல் மூலம் தெரிய  வந்துள்ளது.

tn ass may 11

இது குறித்து “ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு’ (ஏ.டி.ஆர்.) என்று நிறுவனம் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், 3,776 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில், முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் 1,107 பேர். அவர்களில் 997 பேர் அளித்த பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தோம். அதில், 553 பேர் ரூ.1 கோடி மற்றும் அதற்கும் அதிக மதிப்புடைய சொத்துகள் இருப்பதாக பிரமாணப் பத்திரங்களில் குறிப்பிட்டுள்ளனர். அவர்களில், அதிமுகவைச் சேர்ந்தவர்கள் 156 பேர். திமுகவைச் சேர்ந்தவர்கள் 133 பேர் ஆவர். காங்கிரஸில் 32, பாஜகவில் 64, பாமகவில் 72, தேமுதிகவில் 57 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர்.2 பேருக்கு எந்தச் சொத்துமில்லை!: 997 வேட்பாளர்களின் சராசரி சொத்து விகிதம் ரூ.4.35 கோடி. 2 பேர், தங்களுக்கு எந்த சொத்தும் இல்லை என்று பிரமாணப் பத்திரத்தில் அறிவித்துள்ளனர்.

283 பேர் தங்களுக்கு எதிராக குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். அவர்களில், திமுகவில் 68 பேரும், பாமக 66, அதிமுக 47, தேமுதிக 41, பாஜக 26, காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 8 பேரும் போட்டியிடுகின்றனர். 28 தொகுதிகளில், முக்கிய கட்சிகளைச் சேர்ந்த 3 அல்லது அதற்கு அதிகமான வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

114 வேட்பாளர்கள், தங்களது பான் அட்டை விவரங்களையும், 284 பேர் வருமானவரி தொடர்பான விவரங்களையும் வெளியிடவில்லை. 454 பேர் தங்களது கல்வித் தகுதியாக, 5 முதல் 12 ஆம் வகுப்புவரையும், 488 பேர் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேலும் படித்திருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றனர். 6 பேர், சிறிதளவே படிப்பறிவு இருப்பதாகவும், 6 பேர் படிப்பறிவு இல்லையெனவும் தெரிவித்துள்ளனர். 537 வேட்பாளர்கள், 25 முதல் 50 வயது வரை உடையவர்கள். 458 வேட்பாளர்கள் 51 முதல் 80 வயது வரை உடையவர்கள். 2 பேர் மட்டும், 80-க்கும் அதிக வயது கொண்டவர்கள். 997 வேட்பாளர்களில், 96 பேர் பெண்கள்.

புதுச்சேரியில்..: புதுச்சேரி பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 344 வேட்பாளர்களில், 343 பேரின் பிரமாணப் பத்திரம் ஆய்வு செய்யப்பட்டது. அதில், 96 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். அவர்களில், காங்கிரஸ் 18, பாஜக 8, அதிமுக 18, என்ஆர் காங்கிரஸ் 21, பாமக 5, சுயேச்சை வேட்பாளர்கள் 16 பேர் ஆவர். 68 வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்களில், காங்கிரஸ் 6, பாஜக 8, அதிமுக 6, என்ஆர் காங்கிரஸ் 8, பாமக 6, நாம்தமிழர் கட்சி 3, சுயேச்சைகள் 11 பேர். மொத்த வேட்பாளர்களில், 22 பேர் மட்டும் பெண்கள் என்று அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts