உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு?

உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு?

உத்தரகாண்டில் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வந்தது. அக்கட்சியைச் சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதால் அவர்களை பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்தார். இதற்கிடையே, ஹரீஷ் ராவத் அரசைக் கலைத்து விட்டு உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது. ஆனால், இதனை ரத்து செய்து உத்தரகாண்ட் ஐகோர்ட் உத்தரவிட்டது. இருப்பினும், அந்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்ததால் உத்தரகாண்டில் ஜனாதிபதிஆட்சி தொடர்ந்தது.

uttar may 11

இதனிடையே, ஹரீஷ் ராவத்தின் கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவையில் மே 10-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதேவேளையில், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 9 பேரின் தகுதி நீக்கத்தை ரத்து செய்யவும், அவர்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கெடுக்க அனுமதிக்கவும் ஐகோர்ட் மறுத்துவிட்டது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டும் மறுத்துவிட்டது.

இந்நிலையில், உத்தரகண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஏதுவாக செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் இரண்டரை மணி நேரத்துக்கு ஜனாதிபதி ஆட்சி நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது, அவைக்காவலர்களின் பலத்த பாதுகாப்புக்கு இடையே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

யாருக்குச் சாதகம்?: மொத்தம் 71 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகண்ட் சட்டப்பேரவையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 9 எம்எல்ஏக்கள், பேரவைத் தலைவர் ஆகியோரைத் தவிர்த்து 61 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றனர். இதில் பீம்லால் ஆர்யா என்ற பாஜக எம்எல்ஏ காங்கிரஸுக்கு ஆதரவாகவும், ரேகா ஆர்யா என்ற காங்கிரஸ் எம்எல்ஏ பாஜகவுக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளதாகத் தெரிகிறது. “பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் இருவர், சுயேச்சைகள் மூவர், உத்தரகாண்ட் கிராந்தி தளம் (பி) கட்சியைச் சேர்ந்த ஒருவர் என 6 எம்எல்ஏக்களும் காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களித்தோம்’ என்று சுயேச்சை எம்எல்ஏ ஹரீஷ் சந்திர துர்காபால் தெரிவித்தார். இந்த 6 பேரையும் சேர்த்து காங்கிரஸுக்கு ஆதரவாக 33 எம்எல்ஏக்கள் வாக்களித்துள்ளதாகவும், எனவே, தங்களுக்கே வெற்றி கிடைக்கும் என்றும் காங்கிரஸ் எம்எல்ஏ ரீட்டா ஆர்யா கூறினார்.

அதே சமயம் பாஜக எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி கூறும்போது, “வாக்கெடுப்பில் பாஜகவை 28 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஆதரித்தனர். அதனால் எங்களால் இந்த எண் விளையாட்டில் வெற்றி காண முடியவில்லை” என்றார்.நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராவத், “உத்தராகண்ட் மாநில சர்ச்சை நாளை முதல் காணாமல் போய்விடும்” என்றார்.