ஹலோ.. ’அந்த’ பிரபஞ்சத்துலே யாராவது இருக்கீங்களா? – 640 கோடி ரூபாய்க்கான திட்டம் தொடக்கம்!
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (வயது 73). அங்குள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தவர். ‘காஸ்மாலஜி’ என்னும் அண்டவியல் மற்றும் ‘குவாண்டர் கிரேவிட்டி’ என்றழைக்கப்படும் குவாண்டர் ஈர்ப்பு பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளார். ஸ்டீபன் ஹாக்கிங் பேசும் திறனை இழந்து விட்டதுடன், முடக்குவாத நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளார். தனக்காக தயாரிக்கப்பட்டுள்ள பிரத்யேக நாற்காலி ஒன்றுதான் அவரது உலகம் ஆகி விட்டது. இருப்பினும், இந்த நிலையிலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் ஆராய்ச்சி இயக்குனராக பணியாற்றி வருகிறார். தொடர்ந்து தனது துறை சார்ந்த ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறார். இவர் தற்போது பிரபஞ்சத்தில் வேறு கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா என்பதை ஆராய ரூ. 640 கோடியில் புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்துக்கு ரஷ்ய தொழில் அதிபர் யூரி மில்னர் நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளார்.

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து உள்ளனர். பிரபஞ்சத்தில் பால்வெளி என அழைக்கப்படும் எண்ணற்ற நட்சத்திர கூட்டங்கள், பெரிய நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும் போது உருவாகும் சிறிய நட்சத்திரங்கள், அவற்றை சுற்றி வரும் கிரகங்கள் அவற்றின் துணை கோள்கள் நிரம்பியுள்ளன. பிரபஞ்சத்தின் ஏதேனும் ஒரு மூலையில் பூமியை போன்ற உயிர்வாழ்வதற்கு ஏற்ற கிரகங்களும் அதில் உயிர்களும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வான்வெளி விஞ்ஞானிகள் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.. ஆனால் வேறு கிரகத்தில் உயிரினங்கள் இருக்கின்றன என்பதற்கான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. இதனிடையே கடந்த மாதம் மாதம் மட்டும் விண்வெளியில் 1179 அடையாளம் தெரியாத பொருட்கள் பறந்து உள்ளன. முந்தைய வருடம் இதே மாதத்தில் பறந்த அடையாளம் தெரியாத பொருட்களை விட 600 பொருடகள் இது அதிகமாகும்.
தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம்.
அதுபோன்ற சம்பவம் இதுவரை நடக்கவில்லை. அதனால், அனேகமாக அதுபோல யாரும் இல்லாமல் இருக்கலாம். அல்லது, நம்மை கவனிக்காமல் அவர்கள் கடந்துபோயிருக்கலாம். அல்லது, எங்கும் பயணப்படாமல் அவர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகக்கூட இருக்கலாம். மேலும், வேற்று கிரக வாசிகள் இருந்தால் அவர்களை பார்த்து பயப்படவும் அவசியம் இல்லை. அவர்கள் எல்லா வளங்களும் நிறைந்தவர்களாகத்தான் இருப்பார்கள். பூமியில் இருந்து தண்ணீரோ, வேறு எதுவுமோ அவர்கள் எதிர்பார்க்கப் போவதும் இல்லை.இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேறுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய புதிய திட்டம் ஒன்றை நேற்று லண்டனில் தொடங்கியுள்ளார். இந்த திட்டத்துக்காக அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.640 கோடி செலவழிக்கப்படும். ரஷ்யாவை சேர்ந்த சிலிகான் வேலி தொழில் அதிபர் யூரி மில்னர் இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளார். இந்த திட்டத்திற்கு கேம்ரீஜ் பல்கலைகழகத்தை சேர்ந்த வானவியலாளர் ,காஸ்மோலாகிஸ்ட் பேராசிரிய லார்டு மார்ட்டீன் ரீஸ், தலைமை தாங்குகிறார்
இந்த திட்டம் குறித்து விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறுகையில், ”எல்லை இல்லாத இந்த பிரபஞ்சத்தில் வேறு உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உள்ளது. பிரபஞ்சத்தின் ஏதேனும் ஒரு மூலையிலிருந்து அறிவுபூர்வமான உயிர்கள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கலாம். பிரபஞ்சத்தில் வேறு உயிர்கள் இருக்கிறதா என்ற கேள்வியைக் காட்டிலும் வேறு மிகப்பெரிய கேள்வி இருக்க முடியாது. இதற்கான விடையை தேட வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்.
இந்த திட்டம் வானத்தை 10 மடங்கு கவர் செய்கிறது. வேற்று கிரகவாசிகளின் பரிமாற்றங்கள் கேட்க உலகில் மிக சக்தி வாய்ந்த இரண்டு ரேடியோ தொலைநோக்கிகள் முன்னணி விஞ்ஞானிகளை கொண்டு நிறுவப்படுகிறது.மற்றொரு தொலைநோக்கி மற்ற உலகங்களில் இருந்து வரும் லேசர் சிக்னல்களை தேடும்.இந்த தொலைநோக்கிகள் மூலம் பூமியை தவிர மற்ற நட்சத்திரங்கலீல் கிரகங்களில், விண் வெளியில் வேற்று உயிரினங்கள் வாழ்கின்றனவா என ஆய்வு செய்யப்படும். ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வெல்சில் 64 மீட்டர் ( 210 அடி ) பார்க் தொலைநோக்கி மூலமும், மேற்கு வர்ஜினியாவில் 100 மீட்டர்( 328 அடி) பர்ட் கிரீன் பேங்க் தொலைநோக்கியும் நிறுவபட்டு 10 ஆண்டுகள் கண்காணிக்கப்படும்.


