ஐயா.. நாங்க செத்துப் போக அனுமதி தாரீங்களா? வியாபம் வழக்கில் சிக்கிய மாணவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
மத்திய பிரதேச மாநிலம் தொழிற்கல்வி தேர்வு வாரியத்தில் ஊழல் முறைகேடுகள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் இறந்தது போன்ற உண்மைகள் அண்மையில் அடுத்தடுத்து வெளி வந்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. வியாபம்’ ஊழல் என்றழைக்கப்படும் இவ் விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி 40 அதிகாரிகள் கொண்ட சி.பி.ஐ. குழு, விசாரணையை நடத்தி வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, மத்திய பிரதேசம் மாநிலம் காஜ்ரா ராஜா மெடிக்கல் கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்கள், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதி உள்ளனர். கடிதத்தில் தங்களுக்கு நீதியை கோரிஉள்ள அவர்கள், அல்லது நாங்கள் இறப்பதற்கு அனுமதி வழங்குங்கள் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர். தங்கள் மீதான குற்றச்சாட்டை நாங்கள் தெளிவு செய்துவிட்டோம், ஆனால் நாங்கள் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் பேதம் பார்க்கப்படுகிறோம் என்று தெரிவித்து உள்ளனர்.

ஜனாதிபதிக்கு இவர்கள் எழுதி உள்ள கடிதத்தில், ”நாங்கள் பி.எம்.டி. தேர்வை (2010-ம் ஆண்டு நடந்த மருத்துவ நுழைவு தேர்வு) முடித்துவிடோம், ஆனால் மூன்று வருடங்கள் கழித்து எங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. எங்களுடைய புகைப்படம் மற்றும் கையெழுத்து, கல்லூரி ஐ.டி. கார்டில் இருந்து வேறுபடுவதாக கூறி எங்களது மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது” என்று தெரிவித்து உள்ளனர். இதையடுத்து தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் ஏமாற்றுதல் ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இதேபோன்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 95 பேர்களும் குற்றச்சாட்டில் இடம்பெற்றது.
குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 5 மாணவர்களும், அவர்களுடைய பெயரை தங்களது கைரேகையின் மூலம் தெளிவு செய்தனர். பின்னர் படிப்பதற்கு அனுமதி கோரி மத்திய பிரதேசம் மாநிலம் ஐகோர்ட்டை நாடினர். ஐகோர்ட்டும் அவர்களுக்கு அனுமதி வழங்கியது. பின்னர் குவாலியரை சேர்ந்த கல்லூரி அவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்த்துக் கொண்டது.
இருப்பினும் மாணவர்கள் மத்தியில் அவர்கள் பேதம் காட்டப்பட்டு உள்ளனர். மாணவர் அமித் சாகதா பேசுகையில், “எல்லோரும் எங்களுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு உள்ளதாகவே பார்க்கின்றனர், அவர்கள் எங்களை மோசடி காரர்கள் என்றே அழைக்கிறது. எங்களுடைய விடைத்தாள்களும் தனியாக எடுக்கப்படுகிறது,” என்று கூறி உள்ளார். “இது எங்களுக்கு மிகவும் சித்திரவதையாக உள்ளது, எங்களுக்கு நீதி வேண்டும் இல்லையென்றால் எங்களுக்கு இறப்பதற்கு அனுமதி வழங்குங்கள்,” என்று மாணவர்கள் மணிஷ் குப்தா, விகாஷ் குப்தா, ராகவேந்திரா, பங்கஜ் பன்சால் தங்களது கடிதத்தில் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு மாணவர்களிடம் இருந்து எந்தஒரு புகாரும் வரவில்லை என்று தெரிவித்து உள்ளது. எந்தஒரு மாணவர் மீதும் பேதம் காட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


