தேசிய விலங்காய் புலி போய் சிங்கம் வரப் போகுது! டும்!டும்!!டும்!!!
தற்போதைய தேசிய விலங்கு புலிக்கு பதிலாக சிங்கத்தை தேசிய விலங்காக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. மத்திய அரசின் இந்த முயற்சிக்கு விலங்கின ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் 17 மாநிலங்களில் உள்ள புலிகளை நீக்கிவிட்டு, குஜராத்தில் மட்டுமே இருக்கும் சிங்கத்தை ஏன் தேசிய விலங்காக்க மத்திய அரசு பரிசீலனை செய்கிறது, என்ற கேள்வியை எழுப்பியுள்ள விலங்கின ஆர்வலர்கள், நாடு முழுவதும் புலிகளை பாதுகாப்போம் என்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், அது திசை மாறுவதுடன், புலிகள் சரணாலயத்துக்கு அருகே தொழில் துவங்குவதற்கான வழியையும் ஏற்படுத்திவிடும், என்றும் தெரிவித்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், தொழிலதிபருமான பரிமல் நத்வானி தான், சிங்கத்தை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று கோரி சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து நத்வானி கோரிக்கை, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய வனவிலங்கு வாரியத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இந்த வாரியத்தில் பலரும் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த வாரியத்தின் தலைவராக உள்ள பிரகாஷ் ஜவ்டேகர் சிங்கத்தை தேசிய விலங்காக அறிவிப்பது குறித்து கடந்த மார்ச் மாதம் பரிசீலித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விரிவான ஆலோசனை நடத்துமாறு சுற்றுச்சூழல் அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக தேசிய வனவிலங்கு வாரிய உறுப்பினரான ராமன் சுகுமார் கூறியுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டிலேயே இது குறித்து நத்வானி கோரிக்கை வைத்த போது, மாநிலங்களவையில் பேசிய அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன், அப்படி யோசிக்கும் திட்டம் கூட அரசுக்கு இல்லை என்று தெரிவித்தார். கடந்த டிசம்பர் மாதத்தில் மீண்டும் இக்கோரிக்கையை நாடாளுமன்றத்தில் நத்வானி எழுப்பியபோது, மத்திய சுற்றுச்சுழல் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகரும், சிங்கத்தை தேசிய விலங்காக அறிவிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று கூறியிருந்தார்.
ஒட்டு மொத்த ஆசிய கண்டத்திலேயே மொத்தம் 411 சிங்கங்கள் தான் உள்ளது என்று தெரிய வந்துள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டுமே புலிகளின் எண்ணிக்கை 2200ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


