32°C
விளம்பரம்
Advertisement

மருத்துவமனையா? மரண பொறியா? ஐசிஎம்ஆரின் பகீர் ரிப்போர்ட்!

admin Published: September 3, 2026 2 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


ருத்துவமனைக்குச் செல்வது நோயைக் குணப்படுத்தத்தானே தவிர, புதிய நோயைச் சுமந்து வரவோ அல்லது உயிரை விட்டு வரவோ இல்லை. ஆனால், இந்திய மருத்துவமனைகளின் தற்போதைய நிலைமை அச்சமூட்டுவதாக மாறியிருக்கிறது. நாம் சாதாரணமாக நினைக்கும் கிருமிநாசினிகளுக்கும், வீரியமிக்க ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கும் அடங்காத ஆபத்தான பாக்டீரியாக்கள் நாட்டின் முன்னணி மருத்துவமனைகளிலேயே கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியுள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நாட்டின் 20 முன்னணி மருத்துவமனைகளில், 1.59 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளிடம் நடத்திய பிரம்மாண்ட ஆய்வு, மருத்துவ உலகையே உலுக்கியிருக்கிறது.

கார்பாபெனெம் மருந்துகளைக் கேலி செய்யும் சூப்பர் பக்ஸ்

மருத்துவத் துறையில் கடைசி கட்ட ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் மிக வீரியமிக்க நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துதான் ‘கார்பாபெனெம்’ (Carbapenem). தீவிரமான தொற்றுகளால் உயிருக்குப் போராடும் நோயாளிகளைக் காப்பாற்ற இந்த மருந்துகளே இறுதி நம்பிக்கையாக இருக்கும். ஆனால், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கிராம்-நெகட்டிவ் (Gram-negative) பாக்டீரியா தொற்றுகளில் 61.1 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்த கார்பாபெனெம் மருந்துகளையே அசைக்க முடியாத அளவுக்குத் தங்களின் எதிர்ப்புத் திறனை (Carbapenem-Resistance) வளர்த்துக் கொண்டுள்ளன.

குறிப்பாக ஈ.கோலை (E. coli), கிளெப்சியெல்லா நியூமோனியே, அசினெட்டோபேக்டர் மற்றும் சூடோமோனாஸ் ஆகிய நான்கு முக்கிய பாக்டீரியாக்கள் மருந்துகளுக்குக் கட்டுப்பட மறுக்கின்றன. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மரண ஆபத்து 16 சதவீதம் முதல் 43 சதவீதம் வரை உயர்கிறது. இதில் உச்சக்கட்ட கொடூரம் என்னவென்றால், இந்த பாக்டீரியாக்கள் ரத்தத்தில் பரவத் தொடங்கினால் உயிரிழக்கும் அபாயம் 51 சதவீதம் வரை எகிறுகிறது.

மருந்துகள் காரணமல்ல… மருத்துவமனை சுகாதாரச் சீர்கேடே முதன்மைக் குற்றவாளி!

பொதுவாக மக்கள் கண்டபடி ஆன்டிபயாடிக் மாத்திரைகளைச் சாப்பிடுவதுதான் மருந்து எதிர்ப்புத் திறனுக்குக் காரணம் என்று பரவலாகப் பேசப்படும். ஆனால், இந்த ஆய்வில் வெளிவந்த உண்மை முற்றிலும் வேறானது. “இந்த ஆபத்தான சூழலுக்கு மருந்துகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது மட்டுமே காரணமல்ல. மருத்துவமனைகளில் பராமரிக்கப்படும் நோயாளி பாதுகாப்பு நடைமுறைகளில் உள்ள பாரதூரமான குறைபாடுகளும், சுகாதாரச் சீர்கேடுகளுமே 85 சதவீதத்துக்கும் அதிகமான ரத்தத் தொற்றுகளுக்கு முக்கியக் காரணம்” என்று ஐசிஎம்ஆர் மூத்த விஞ்ஞானி டாக்டர் காமினி வாலியா அதிரடியாகச் சுட்டிக்காட்டியுள்ளார். நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களைச் சரியாகப் பராமரிக்காதது, கிருமிநாசினி தெளிப்பதில் காட்டும் அலட்சியம், கழிப்பறை மற்றும் படுக்கை அறைப் பராமரிப்பில் நிலவும் தூய்மையின்மையே இந்த பாக்டீரியாக்கள் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பெருகக் காரணமாகின்றன.

அவசரமாக மாற வேண்டிய உட்கட்டமைப்பு

வெறும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளின் விற்பனையைக் கட்டுப்படுத்துவதோ அல்லது நோயாளிகளைக் குறை சொல்வதோ இதற்கு தீர்வாகாது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மருத்துவமனைகளில் தூய்மைப் பராமரிப்பைத் தீவிரப்படுத்துதல், சர்வதேசத் தரத்திலான கிருமிநாசினிகளைப் பயன்படுத்துதல், ஒவ்வொரு நோயாளிக்கும் துல்லியமான நோய் கண்டறிதல் முறைகளை விரைந்து செயல்படுத்துதல் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு உபகரணங்களைத் தொடர்ந்து கிருமிநீக்கம் செய்தல் போன்ற உட்கட்டமைப்பு மாற்றங்களை உடனடி போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டால் மட்டுமே, கட்டுப்படாத இந்த பாக்டீரியா பரவலையும், தேவையற்ற மனித உயிர்களின் இழப்பையும் தடுத்து நிறுத்த முடியும்!

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

உடனடி செய்திகள்