செய்தியைக் கேட்க / Listen to News
2019-ஆம் ஆண்டு பாலாக்கோட் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் எஃப்-16 போர் விமானத்தை வீழ்த்தி இந்திய எல்லையைக் காத்த வீரர் குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான். இந்திய விமானப்படையில் தனது புகழ்பெற்ற சேவையை நிறைவு செய்து ஓய்வு பெற்றுள்ள இவர், தற்போது பிராந்திய விமான சேவை நிறுவனமான ‘ஃப்ளை91’ (Fly91) நிறுவனத்தில் இணைந்து தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். படைத்துறையில் இருந்து விலகி வர்த்தக ரீதியிலான விமானப் போக்குவரத்துத் துறைக்கு அவர் மாறியிருப்பது பாதுகாப்பு வட்டாரங்களிலும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையிலும் பெரும் வரவேற்பை ஒரு பக்கம் பெற்றாலும் நாடெங்கும் பேசு பொருளாகி உள்ளது.
வீரத்தின் அடையாளம்: பாலாக்கோட் சம்பவமும் வீர் சக்ரா விருதும்
பிப்ரவரி 27, 2019 அன்று பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் நுழைய முயன்றபோது, அபினந்தன் வர்த்தமான் தனது மிக்-21 பைசன் போர் விமானத்தில் சென்று அவற்றை வீரத்துடன் எதிர்கொண்டார். நவீன தொழில்நுட்பம் கொண்ட பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை, தனது பழைய தலைமுறை மிக்-21 விமானத்தைக் கொண்டே சுட்டு வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.
இந்த வான்வழித் மோதலின் போது அவரது விமானம் சேதமடைந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்தது. அங்கு பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டபோதிலும், அவர்களின் விசாரணையின் போது தனது மன உறுதியையும், தொழில்முறை கண்ணியத்தையும் சிறிதும் தளரவிடாமல் நாட்டின் ரகசியங்களைக் காத்தார். இந்திய அரசின் தீவிர ராஜதந்திர அழுத்தத்தைத் தொடர்ந்து, 60 மணி நேரத்திற்குள் அவர் தாயகம் திருப்பினான். நாட்டின் உயரிய ராணுவ விருதுகளில் ஒன்றான ‘வீர் சக்ரா’ விருது வழங்கி இந்திய அரசு அவரைக் கௌரவித்தது.

விமானப்படையில் இருந்து ஓய்வும் ‘ஃப்ளை91’ சேர்க்கையும்
இந்திய விமானப்படையில் குரூப் கேப்டனாகப் பணியாற்றி வந்த அபினந்தன், தனது பணிக்காலத்தை நிறைவு செய்து அண்மையில் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு, இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பிராந்திய விமான சேவை நிறுவனமான ‘ஃப்ளை91’ இல் அவர் இணைந்துள்ளார். கோவாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘ஃப்ளை91’, நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களை இணைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. விமானப் படையில் பத்தாண்டுகளுக்கு மேலாக அதிநவீன போர் விமானங்களை இயக்கிய அனுபவமும், சிறந்த தலைமைத்துவப் பண்பும் கொண்ட அபினந்தனின் வருகை, ஃப்ளை91 நிறுவனத்தின் இயக்க நிர்வாகத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பயணமும் சிவில் விமானப் போக்குவரத்து மாற்றமும்
இந்திய ராணுவத்தின் அனுபவம் வாய்ந்த விமானிகள் ஓய்வுக்குப் பிறகு வர்த்தக ரீதியிலான சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு வருவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், அபினந்தன் வர்த்தமானின் இந்தப் புதிய பொறுப்பு இந்திய வான்வழிப் போக்குவரத்துத் துறையில் தனி கவனத்தைப் பெற்றுள்ளது. போர்க்களத்தில் நாட்டைப் பாதுகாத்த ஒரு வீரர், தற்போது நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் பிராந்திய வான்வழி இணைப்பை மேம்படுத்தும் பணியில் களமிறங்கியிருப்பது அவரது சேவை மனப்பான்மையின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
