செய்தியைக் கேட்க / Listen to News
மனித வரலாற்றில் அதுவரை கண்டிராத ஒரு புதிய மக்கள்தொகையியல் மாற்றத்தை உலகம் சந்தித்துள்ளது. அமெரிக்கச் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியகத்தின் (U.S. Census Bureau) புதிய சர்வதேச அறிக்கையின்படி, உலகளவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மொத்த எண்ணிக்கையை விட, 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியோர்களின் எண்ணிக்கை முதன்முறையாக அதிகரித்துள்ளது. உலகளவில் பிறப்பு விகிதம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதும், அதேவேளையில் மக்களின் சராசரி ஆயுட்காலம் கணிசமாக உயர்ந்து வருவதுமே இந்தத் தலைகீழ் மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகும். ஆய்வாளர்கள் கணித்திருந்த காலக்கெடுவை விடவும் மிகவும் முன்பாகவே உலகம் இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது.
உலக மக்கள் தொகையில் 71 சதவீதம் பேருக்குப் பிறப்பு விகிதம் சரிவு
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை வளர்ந்த பணக்கார நாடுகளுக்கு மட்டுமே உரிய பிரச்சனையாகப் பார்க்கப்பட்ட பிறப்பு விகிதச் சரிவு, தற்போது ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்க வளர்ந்து வரும் நாடுகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது. 2013-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 45 சதவீதம் பேர் மட்டுமே மாற்றுப் பிறப்பு விகிதத்திற்கு (Replacement level – ஒரு பெண்ணிற்கு 2.1 குழந்தைகள்) கீழே உள்ள நாடுகளில் வாழ்ந்து வந்தனர். ஆனால், தற்போதைய தரவுகளின்படி உலக மக்கள் தொகையில் 71 சதவீதத்திற்கும் அதிகமானோர் பிறப்பு விகிதம் குறைந்த நாடுகளிலேயே வசிக்கின்றனர். உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா மற்றும் சீனா மட்டுமல்லாது மெக்சிகோ, வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளிலும் பிறப்பு விகிதம் 2.1 என்ற அளவை விடக் கீழே சரிந்துள்ளது.

2060-க்குள் 200 கோடியைத் தொடும் முதியோர் எண்ணிக்கை
தற்போது 2025-2026 காலக்கட்டத்தில் உலகளவில் 65 வயதைக் கடந்த முதியோர்களின் எண்ணிக்கை 85.2 கோடியாக உள்ளது. இது வரும் 2060-ஆம் ஆண்டிற்குள் 200 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 2060-ல் பூமியில் வாழும் மொத்த மக்கள்தொகையான 1023 கோடியில், ஐந்தில் ஒருவர் (20%) 65 வயதைக் கடந்த முதியவராக இருப்பார். 2025 முதல் 2060 வரை உலகில் நிகழப்போகும் நிகர மக்கள்தொகை வளர்ச்சியில் சுமார் 55 சதவீதப் பங்களிப்பு இந்த முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் மட்டுமே ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசியாவின் அதிரடி வளர்ச்சியும் ஆப்பிரிக்காவின் எதிர்பாராத மாற்றமும்
மக்கள்தொகை மூப்படைவதில் கண்ட வாரியாகப் பெரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிய கண்டம் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கும். ஆசியாவில் உள்ள முதியோர்களின் எண்ணிக்கை 2025-ல் உள்ள 48.7 கோடியிலிருந்து 2060-க்குள் 124 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் அதிகரிக்கும் மொத்த முதியோர் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு ஆசியாவிலேயே நிகழும்.
மறுபுறம், உலகின் மிகவும் இளம் கண்டமாகத் திகழும் ஆப்பிரிக்காவிலும் முதியோர் எண்ணிக்கை நான்கு மடங்குக்கும் அதிகமாக உயரும். 2025-ல் 6 கோடியாக இருக்கும் ஆப்பிரிக்க முதியோர்களின் எண்ணிக்கை 2060-ல் 24.9 கோடியாக அதிகரிக்கும். இதன் மூலம், பாரம்பரியமாக வயதான கண்டமாகக் கருதப்படும் ஐரோப்பாவை விட (2060-ல் 21.4 கோடி முதியோர்கள்) ஆப்பிரிக்காவில் அதிகளவில் முதியோர்கள் வாழும் சூழல் உருவாகும்.
கருவுறுதல் பொறி மற்றும் பொருளாதார நெருக்கடிகள்
மக்கள் தொகையியலாளர்கள் இந்தச் சூழலை ‘ஃபர்ட்டிலிட்டி ட்ராப்’ (Fertility Trap) அல்லது கருவுறுதல் பொறி என்று அழைக்கின்றனர். பெரிய அளவிலான முதியோர் தலைமுறைக்கு பின்னால் மிகச் சிறிய அளவிலான இளம் தலைமுறை உருவாகும்போது, அது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனைக் குறைக்கிறது.
பணிபுரியும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவதால் ஓய்வூதிய அமைப்புகள், முதியோர் பராமரிப்பு நிதி மற்றும் சமூகப் பாதுகாப்புச் செலவினங்கள் அரசாங்கங்களுக்குப் பெரும் சுமையாக மாறும். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் கூட சமூகப் பாதுகாப்பு நிதியின் நிதிநிலை குறித்த கேள்விகள் எழுந்துள்ள சூழலில், பிற நாடுகளுக்கும் இது மிகப்பெரிய பொருளாதாரச் சவாலாக உருவெடுத்துள்ளது.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்
