செய்தியைக் கேட்க / Listen to News
திரைப்பட உலகில் வழக்கமான ஃபார்முலா கதைகளைத் தாண்டி, சில படைப்புகள் பார்வையாளர்களின் மனதை ஆழமாகத் தொட்டுச் செல்லும். அந்த வகையில் பக்தி உணர்வு, தந்தை-மகள் பாசம் மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகளை ஒன்றாக இணைத்து உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான விருந்தளித்துள்ளது.
கதைக்களம்
ஆந்திராவின் கடைகோடி எல்லைக் கிராமம் ஒன்றில், இயற்கை எழில் சூழ்த பகுதியில் மதுவுக்கு அடிமையான ரவி தேஜா தனது மனைவியும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளுடனும் வசித்து வருகிறார். ஊரில் உள்ள பெண் குழந்தைகள் மீது அளவற்ற பாசமும் பாதுகாப்பும் கொண்டவர். தன் மகளின் சின்னத் தூக்கம் கூடக் கலைந்துவிடக் கூடாது என்பதற்காக அத்துமீறி வரும் லாரி ஓட்டுநரைத் தட்டிக் கேட்கும் அளவுக்கு மகள் மீது அசுரப் பாசம் கொண்டவர்.
மகளின் கோரிக்கையை ஏற்று, மதுவை முழுமையாக விட்டுவிடத் தீர்க்கமாக முடிவு செய்யும் அவர், 41 நாட்கள் ஐயப்ப தீட்சை எடுத்து மாலை அணிகிறார். தலையில் இருமுடியைச் சுமந்து கொண்டு சபரிமலை யாத்திரைக்குத் தயாராகும் வேளையில், கிராமப் பள்ளியில் மாணவிகளுக்குக் கொடூரமான ஆசிரியர் ரமேஷ் இந்திரா மூலம் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இந்தச் சூழலில் அரங்கேறும் ஒரு மர்ம மரணமும் கொலையும் கதையைத் திசை திருப்புகிறது. விரதக் கட்டுப்பாடுகளையும் மீறி, மகள் மீதான அசுரப் பாசத்தினால் ரவி தேஜா மீண்டும் கையில் ஆயுதம் ஏந்திப் போராடுவதே இப்படத்தின் உணர்வுப்பூர்வமான மீதிக் கதையாகும்.
நடிப்பு
மாஸ் மகாராஜா லேபிளில் வலம்வரும் ரவி தேஜா, இப்படத்தில் தனது வழக்கமான ஆர்ப்பாட்டமான பாணியை மாற்றிவிட்டு, அமைதியும் ஆழமும் நிறைந்த ‘திரிநாத்’ என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். மகனுக்காகவும் மகளுக்காகவும் ஏங்கும் தந்தையின் தவிப்பையும், சண்டைக் காட்சிகளில் வெளிப்படும் அவரது அசுரத்தனமான நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
அப்பாவியான முகபாவனையாலும் இயல்பான பேச்சாலும் கவரும் பேபி நட்சத்திரா, தந்தையின் மீதான அன்பையும் ஆபத்தில் வெளிப்படுத்தும் பயத்தையும் நேர்த்தியாக வெளிப்படுத்தித் திரையை ஆக்கிரமித்துள்ளார். குறைவான காட்சிகளில் வந்தாலும் குடும்பப் பாங்கான தோற்றத்தாலும், அழுத்தமான உணர்ச்சி வெளிப்பாட்டாலும் கவர்கிறார் பிரியா பவானி சங்கர்.
மற்றும் சாய் குமார் தனது கம்பீரமான குரலாலும், மிரட்டலான வில்லத்தனத்தில் கலக்கும் ரமேஷ் இந்திராவும், சுவாசிகா, அஜய் கோஷ் உள்ளிட்ட இதர நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேடங்களை மிகச் சரியாகச் செய்து கதையின் தீவிரத்தை உயர்த்தியுள்ளனர்.
தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு
இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் தனது அசுரத்தனமான பின்னணி இசையாலும், உணர்வுகளைத் தூண்டும் மெல்லிசைகளாலும் படத்தின் ஜீவனை முழுமையாகத் தாங்கிப் பிடித்துள்ளார்.
ஒளிப்பதிவு: ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மா, கிரைம் திரில்லர், அப்பா – மகள் செண்டிமெண்ட் மற்றும் மாஸ் என மூன்று விதமான பரிணாமங்களைத் தனது கேமரா மூலம் பார்வையாளர்களிடம் மிகக் கச்சிதமாகக் கடத்தியுள்ளார்.
படத்தொகுப்பு: பிரவின் புடி காதல், பாசம், கிரைம் த்ரில்லர் எனப் பல கோணங்களில் பயணிக்கும் கதையைச் சற்றும் தொய்வின்றி நேர்த்தியாகச் செதுக்கியுள்ளார்.
சண்டைப்பயிற்சி: ராம்-லக்ஷ்மண் மற்றும் ரியல் சதீஷ் கூட்டணி நாயகனின் ஆளுமைக்கு ஏற்றவாறு விசித்திரமான மற்றும் இயல்பான ஆக்ஷன் காட்சிகளை வழங்கி அசத்தியுள்ளனர்
குறிப்பாக, தெலுங்கில் எடுக்கப்பட்ட படமென்றே தெரியாத அளவுக்குத் தமிழில் கச்சிதமாக வசனங்களை எழுதி படத்தின் தரத்தை உயர்த்திள்ளார் விஜய்பாலாஜி.
மொத்ததில் பக்தியைத் தலைப்பில் வைத்திருந்தாலும், எடுத்துக்கொண்ட கதையில் பெரிய புதுமை இல்லாவிட்டாலும், தேர்ந்தெடுத்த நடிகர்களிடம் வேலை வாங்கிய விதத்திலும், படம் பேசும் விஷயம் ஒட்டுமொத்த சமுதாயத்தின் பாதுகாப்பிற்கானது என்பது பாராட்டத்தக்கது. சில த்ரில்லிங் திருப்பங்கள் மற்றும் யூகிக்கக்கூடிய க்ளைமாக்ஸ் இருந்தாலும், எமோஷனல் மேக்கிங் படத்தை ஒருமுறை தாராளமாக ரசிக்க வைக்கும்!
மார்க்: 3.5/5
