92% மழை, 100% வறுமை:இந்தியப் பொருளாதாரத்தைத் தாக்கும் எல் நினோ!

92% மழை, 100% வறுமை:இந்தியப் பொருளாதாரத்தைத் தாக்கும் எல் நினோ!

லகளாவிய காலநிலை மாற்றத்தின் ஆகச்சினேகமற்ற முகமான ‘எல் நினோ’ (El Niño), இந்த 2026-ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் மீது மிகக் கடுமையான நிழலைப் படியச் செய்துள்ளது. நடப்பு ஆண்டில் மே முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் எல் நினோ உருவாவதற்கு 82 சதவீத வாய்ப்புகளும், அது இந்த ஆண்டு குளிர் காலம் வரை நீடிப்பதற்கு 96 சதவீத வாய்ப்புகளும் உள்ளதாகப் புதிய காலநிலை அறிக்கைகள் எச்சரிக்கின்றன. இதற்கு நேர்விளைவாக, நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் தென்மேற்கு பருவமழை வழக்கமான அளவை விடக் குறைந்து, இந்த ஆண்டு 92 சதவீதம் மட்டுமே பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இத்தகைய தீவிரமான கால நிலை மாற்றமும், பருவமழைப் பொய்ப்பும் இந்தியாவில் வெறும் வானிலை சார்ந்த பிரச்சினையாக மட்டும் சுருங்காமல், அது ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும், குறிப்பாக அமைப்புசாராத் தொழிலாளர்களையும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் ஒரு மாபெரும் வாழ்வாதார நெருக்கடியாக உருவெடுக்கப் போகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

1. திறந்தவெளி அமைப்புசாராத் தொழிலாளர்களின் உழைப்புத் திறன் முடக்கம்

சுட்டெரிக்கும் கடுமையான வெயில் மற்றும் வழக்கத்திற்கு மாறான வெப்ப அலைகள் (Heat waves) காரணமாகக் கோடிக்கணக்கான மக்களின் தினசரி உழைப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

  • வருமான இழப்பு: கட்டுமானத் தொழிலாளர்கள், டெலிவரி ஊழியர்கள், தெருவோர வியாபாரிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் போன்ற திறந்தவெளியில் வேலை செய்யும் அமைப்புசாரா ஊழியர்களின் வேலை நேரத்தைக் கடுமையான வெப்பம் நேரடியாகக் குறைக்கிறது.

  • உழைப்புத் திறன் சரிவு: மதிய வேலைகளில் நிலவும் அதீத வெப்பத்தால் தொழிலாளர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அவர்களின் அன்றாட உழைப்புத் திறன் (Productivity) பெருமளவில் சரிவடைகிறது. இது அவர்களின் தினசரி வருமானத்தைக் குறைத்து, நுகர்வுச் சந்தையையும் முடக்குகிறது.

2. சிறு, குறு விவசாயிகளின் உற்பத்தித் தளம் மீதான தாக்குதல்

இந்தியாவின் ஒட்டுமொத்த நீர் ஆதாரத்திலும், விவசாயத் தேவையிலும் 70 சதவீதத்தைப் பூர்த்தி செய்வது பருவமழை மட்டுமே. அது பொய்க்கும் போது ஒட்டுமொத்த முதன்மைத் துறையும் நிலைகுலைந்து போகிறது.

  • பாசனச் செலவுகள் அதிகரிப்பு: பருவமழை குறைவதால் நிலத்தடி நீர் மட்டம் மிக வேகமாகக் கீழே சரிந்து வருகிறது. இதனால் மாற்றுப் பாசன வசதிகளுக்காகச் சிறு மற்றும் குறு விவசாயிகள் கூடுதல் மூலதனத்தைச் செலவிட வேண்டியுள்ளது.

  • கடன் சுமை: பாசனச் செலவு அதிகரிப்பு மற்றும் பயிர் விளைச்சல் குறைவு ஆகிய இருமுனைத் தாக்குதல்களால், கிராமப்புற விவசாயிகளின் உற்பத்தித் தளம் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது அவர்களை மீண்டும் ஒரு தீராக்கடன் சுமைக்குள் தள்ளும்.

3. எகிறும் உணவுப் பணவீக்கமும் சமையலறை பட்ஜெட் சீர்குலைவும்

விவசாய உற்பத்தித் தட்டுப்பாடு என்பது நேரடியாகச் சந்தையில் விலைவாசி உயர்வாகப் பிரதிபலிக்கும் சங்கிலித் தொடர் வினையைக் கொண்டது.

  • தற்போதைய பணவீக்க நிலவரம்: நுகர்வோர் விலை குறியீட்டின்படி (CPI), கடந்த ஏப்ரல் மாதத்திலேயே உணவுப் பணவீக்கம் 4.2 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், தற்போதைய எல் நினோ தாக்கம் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது.

  • அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு: பருவமழைப் பற்றாக்குறையால் பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி குறைந்து, அவற்றின் விலை மேலும் அதிகரிக்கும். இது ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் சமையலறை பட்ஜெட்டை முற்றிலுமாகச் சீர்குலைப்பதோடு, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியையும் (GDP) மந்தமாக்கிவிடும்.

4. நகர்ப்புற வெப்பப் பொறிகளும் விளிம்புநிலை மக்களின் துயரமும்

திட்டமிடப்படாத நகர்மயமாக்கல் மற்றும் கான்கிரீட் காடுகளின் பெருக்கம் காலநிலைப் பேரழிவின் தீவிரத்தை நகரங்களில் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

  • வெப்பப் பொறிகள் (Urban Heat Islands): நகரங்களில் பெருகிவரும் சிமெண்ட் கட்டடங்கள் மற்றும் அதிவேகமாகக் குறைந்து வரும் பசுமைப் பரப்பால் நகர்ப்புறங்கள் கடுமையான வெப்பப் பொறிகளாக மாறி வருகின்றன.

  • வசதி வாய்ப்பற்ற ஏழைகள்: அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ஏர் கண்டிஷனர்கள் மூலம் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளும் வேளையில், நகர்ப்புற குடிசைப் பகுதிகளிலும், சிறிய வீடுகளிலும் வாழும் ஏழை எளிய மக்கள் போதிய நீர் வசதியும், குளிர்ச்சியான சூழலும் இன்றித் தவிக்கும் அவலம் நேரிடுகிறது.

5. அவசரத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் நீர் மேலாண்மை

இந்த எல் நினோ பாதிப்பைக் வெறும் தற்காலிக இயற்கை நிகழ்வாகக் கடந்து போகாமல், இதனை ஒரு நீண்டகால வளர்ச்சிச் சவாலாகக் கருதி அரசு போர்க்கால அடிப்படையில் திட்டங்களை வகுக்க வேண்டும்.

  • தொழிலாளர் பாதுகாப்பு: அதீத வெப்ப அலைகள் வீசும் நேரங்களில் திறந்தவெளித் தொழிலாளர்களின் வேலை நேரத்தை மாற்றி அமைப்பதோடு, அவர்களுக்குத் தகுந்த காப்பீடு மற்றும் நிழற்குடை வசதிகளைச் சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும்.

  • வெப்பத்தைத் தாங்கும் உள்கட்டமைப்பு: நகர்ப்புற உள்கட்டமைப்புகளில் பசுமைப் பரப்பை அதிகரித்தல், நீர்நிலைகளை மீட்டெடுத்தல் மற்றும் வெப்பத்தைக் கடத்தாத கட்டுமான முறைகளை ஊக்குவித்தல் அவசியமாகிறது.

  • முறையான நீர் மேலாண்மை: வறட்சிக் காலத்தைக் கடப்பதற்கான நீர்ச் சேமிப்புத் திட்டங்கள், சொட்டுநீர்ப் பாசனம் போன்ற நவீன நுட்பங்களைச் சிறு விவசாயிகளுக்குக் கொண்டு சேர்ப்பதன் மூலமே, இந்த மாபெரும் வாழ்வாதார நெருக்கடியிலிருந்து விளிம்புநிலை மக்களின் பொருளாதாரத்தைக் காக்க முடியும்.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts