ஆந்திராவில் இரண்டாவது குழந்தை பெற்றால் ரூ.25,000 ஊக்கத்தொகையாம்! ஏன் தெரியுமா?

ஆந்திராவில் இரண்டாவது குழந்தை பெற்றால் ரூ.25,000 ஊக்கத்தொகையாம்! ஏன் தெரியுமா?

தென்னிந்திய மாநிலங்களில் நிலவி வரும் மக்கள் தொகை வீழ்ச்சி குறித்த கவலைகளுக்கு நடுவே, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆந்திராவின் எதிர்காலத்தை முதியோர் மாநிலமாக மாறாமல் தடுக்கவும், பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்கவும் ‘மக்கள் தொகை மேலாண்மைக் கொள்கை’ (Population Management Policy) என்ற புதிய ஆயுதத்தை அவர் கையில் எடுத்துள்ளார்.

சமநிலை இழக்கும் மக்கள் தொகை: கவலையில் முதல்வர்

நேற்று (வியாழக்கிழமை) சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் நாயுடு, மாநிலத்தின் மக்கள் தொகை சமநிலை இழந்து வருவது குறித்துத் தனது ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்தார்.

“ஆந்திராவின் தற்போதைய மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 1.5 ஆக உள்ளது. இது மக்கள் தொகை மாற்றத்திற்குத் தேவையான சராசரி அளவான 2.1-ஐ விடக் குறைவு. இந்த இடைவெளி தொடர்ந்தால், எதிர்காலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் தற்போது சந்திக்கும் மிகப்பெரிய பொருளாதாரச் சவால்களை ஆந்திராவிற்கும் கொண்டு வந்துவிடும்” என அவர் எச்சரித்துள்ளார்.

ரூ. 25,000 ஊக்கத்தொகை: புதிய கொள்கையின் சிறப்பம்சங்கள்

இந்தச் சூழலை மாற்றியமைக்க, ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய கொள்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை ஆந்திர அரசு முன்மொழிந்துள்ளது:

  • நிதியுதவி: இரண்டாவது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்குப் பிரசவத்தின்போதே ரூ. 25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

  • கல்விச் சலுகை: மூன்றாவது குழந்தைக்கு 18 வயது வரை இலவசக் கல்வி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

  • ஊட்டச்சத்து உதவி: மூன்றாவது குழந்தை பிறந்ததில் இருந்து 5 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1,000 ஊட்டச்சத்து உதவித்தொகையாக வழங்கப்படும்.

  • அரசியல் அங்கீகாரம்: முன்னதாக, இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தடையை நீக்கிய நாயுடு, இப்போது குழந்தைப் பேற்றை ஊக்குவிக்கும் நிலைக்கு மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய அரசியலும் ‘மக்கள் தொகை’ சிக்கலும்

சந்திரபாபு நாயுடுவின் இந்த அறிவிப்பு வெறும் மாநில நலன் சார்ந்தது மட்டுமல்ல, அதன் பின்னணியில் ஒரு வலுவான தேசிய அரசியல் காரணமும் உள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தொடர்ந்து ஒரு கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்: “மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்கள், இப்போது அதன் காரணமாகத் தண்டிக்கப்படுகின்றன.”

மத்திய அரசு திட்டமிட்டுள்ள தொகுதிகள் மறுவரையறை (Delimitation) கொள்கையின்படி, மக்கள் தொகை அதிகம் உள்ள வடமாநிலங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் (MP) இடங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதேநேரம், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களின் எம்பி இடங்கள் குறையும் சூழல் நிலவுகிறது. இதனைச் சுட்டிக்காட்டியே முதல்வர் ஸ்டாலினும், நாயுடுவும் தென்னிந்திய மாநிலங்கள் மக்கள் தொகையைப் பெருக்குவது குறித்துப் பேசி வருகின்றனர்.

பொருளாதார ரீதியிலான தொலைநோக்கு

ஒரு மாநிலத்தின் முதுகெலும்பு அதன் ‘Demographic Dividend’ எனப்படும் உழைக்கும் வயதுடைய இளைஞர் கூட்டம் தான். அவர்கள் குறையும்போது வரி வருவாய் குறைவதோடு, முதியோருக்கான சமூகப் பாதுகாப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஆந்திராவின் இந்த நடவடிக்கை எதிர்கால மனிதவளப் பற்றாக்குறையை இப்போதே தடுத்து நிறுத்த முயலும் ஒரு முற்போக்கான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

ஆந்தை ரிப்போர்ட்டர் பார்வை:

ஒரு காலத்தில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்று முழங்கிய அரசாங்கங்கள், ‘நாம் இருவர் நம்க்கு ஒருவர்’ என்றெல்லாம் சொல்லி விட்டு இன்று ‘நாம் இருவர் நமக்கு மூவர்’ என்று பேச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. சந்திரபாபு நாயுடுவின் இந்த ரூ. 25,000 ஊக்கத்தொகைத் திட்டம் மக்களிடையே ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துமா? அல்லது மாநிலத்தின் நிதிநிலைமைக்குச் சவாலாக அமையுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ரமாபிரபா

Related Posts