சென்னை உயர் நீதிமன்றம் தற்காலத்தில் இயங்கும் கட்டிடங்களில் இயங்க தொடங்கிய தினமின்று!
ஜூலை 12, 1892 ஆம் ஆண்டு. இந்த நாள் சென்னை மாநகரின் வரலாற்றில் ஒரு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். அன்றுதான், தென்னிந்தியாவின் நீதியின் அடையாளமாக உயர்ந்து நிற்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கம்பீரமான கட்டிடம் முறைப்படி திறக்கப்பட்டு, செயல்படத் தொடங்கியது. பிரிட்டிஷ் கட்டிடக்கலையின் உச்சத்தை பறைசாற்றும் இந்த இந்தோ-சாராசெனிக் பாணி கட்டிடம், பல நூற்றாண்டுகளின் நீதித்துறை வரலாற்றையும், எண்ணற்ற சட்டப் போராளிகளின் பங்களிப்பையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

நீதித்துறையின் ஆரம்பகாலப் பயணம்:
ஆங்கிலேயர்கள் 1640 ஆம் ஆண்டில் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டி, கிழக்கிந்திய கம்பெனியை சென்னையில் தொடங்கியவுடன், வழக்குகளை விசாரிக்கத் தேவை ஏற்பட்டது. இதன் விளைவாக, “சவுல்ட்ரி” (Choultry) என்று அழைக்கப்பட்ட ஒரு சத்திர நீதிமன்றம் தொடங்கப்பட்டது. இங்கு சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
காலப்போக்கில், நீதித்துறை அமைப்பில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன:
- 1688: மேயர் நீதிமன்றம் (Mayor’s Court)
- 1739: கச்சேரி நீதிமன்றம் (Kutchery Court)
- 1798: ரிக்கார்ட் நீதிமன்றம் (Recorder’s Court)
இப்படிப் பல சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களை ஆங்கிலேயர்கள் அமைத்தனர். 1801 ஆம் ஆண்டில், “மெட்ராஸ் உயர் நீதிமன்றம்” என்று அழைக்கப்பட்டாலும், அது சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ் என்ற பெயரில் 60 ஆண்டுகள் பதிவில் இருந்தது.
உயர் நீதிமன்றத்தின் உதிப்பு:
1861 ஆம் ஆண்டில், விக்டோரியா மகாராணி சென்னை, கல்கத்தா, பம்பாய் ஆகிய மூன்று நகரங்களிலும் உயர் நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், 1862 ஆகஸ்ட் 15 அன்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. சுவாரஸ்யமாக, இந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டு சரியாக 85 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்றது!
தற்போதைய நீதிமன்றக் கட்டிடத்தின் பணிகள் 1888 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. அப்போது முதல் தலைமை நீதிபதியாக கோலி கார்மன் ஸ்காட்லாண்ட் நைட் தலைமையில் ஐந்து நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். வழக்கறிஞர்கள் மற்றும் “அட்டர்னி அட் லா” தகுதி பெற்றவர்கள் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு வழக்குகளில் ஆஜரானார்கள்.

பாரிமுனையின் பெருமை: கட்டிடக் கலை அதிசயம்
அப்போதைய மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ராஜாஜி சாலையிலுள்ள சிங்காரவேலர் மாளிகை, கஸ்டம்ஸ் ஹவுஸ் ஒட்டிய பகுதியில் செயல்பட்டது. பின்னர், தற்போதைய பாரிமுனையில் உள்ள இந்த அற்புதக் கட்டிடம் கட்ட நான்கு ஆண்டுகள் ஆனது. கட்டிடப் பணிகள் தொடங்குவதற்கு முன், அங்கிருந்த சென்னகேசவப் பெருமாள், மல்லீஸ்வரர் ஆலயங்கள் பூக்கடை காவல் நிலையம் அருகில் மாற்றி அமைக்கப்பட்டன.
இங்குதான் சென்னைக்கு முதன்முதலாக கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. இது இந்தியாவின் ஒரே நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் என்ற தனித்துவமான பெருமையைப் பெறுகிறது. ஜே.டபிள்யு. பிசிங்டனின் வடிவமைப்பில், ஹென்றி இர்வின், ஜெ.எச். ஸ்டீபன் போன்றோர்களின் முயற்சியில், இந்தோ – சாராசெனிக் முறையில் இந்தக் கம்பீரக் கட்டிடம் எழுந்தது. அதற்கான அன்றைய மொத்த செலவு 12 லட்சத்து 98 ஆயிரத்து 163 ரூபாய்.
ஒரு வரலாற்றுத் திறப்பு விழா:
ஜூலை 12, 1892 அன்று காலை 10 மணி அளவில், சென்னை மாகாண கவர்னர் பாரிமுனைக்கு வருகை தந்து, அங்கிருந்து பிரதான வாயில் வழியாக உயர் நீதிமன்ற வளாகத்துக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். தலைமை நீதிபதியாக இருந்த சர் ஆர்தர் காலின்ஸ் மற்றும் சக நீதிபதிகள் அவரை வரவேற்று, திறப்பு விழா நடைபெறும் நீதிமன்ற அரங்குக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பொதுப்பணித் துறைச் செயலர் உச்ச நீதிமன்றச் சாவியை கவர்னரிடம் முறைப்படி வழங்க, அதை கவர்னர் தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்தார்.
இந்த பிரமிக்கச் செய்யும் கட்டிடத்தைக் கண்டு செஞ்சி ஏகாம்பர முதலியார் “உயர் நீதிமன்ற அலங்கார சிந்து” என்று பாடினார். அந்த அலங்கார சிந்துவில் குறிப்பிட்ட வரிகள்: “அண்டா போல் ஒரு கூண்டு சண்டமாக கட்டி அடுத்தகத்திலும் பெருங்க கொடத்தைபோல வெகுகூட்டி கண்டவர் பிரமிக்க கலசமதிலே மாட்டி கண்கள் சிதறும்படி தங்கத்திலூட்டி…”
சவால்களும், மீண்டெழுதலும்:
- எம்டன் தாக்குதல் (1916): 1916 செப்டம்பர் 22 அன்று, எம்டன் என்ற ஜெர்மானியக் கப்பல் நீதிமன்றத்தின் மீது குண்டு வீசியதில் சுற்றுச் சுவர்கள் சேதமடைந்தன. இதுகுறித்த பதிவுகள் இன்றும் இந்தக் கட்டிடத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள ராஜாஜி சிலை அருகில் மதில்சுவரில் கல்வெட்டாக உள்ளன.
- இரண்டாம் உலகப் போர்: இரண்டாம் உலகப் போரின்போது, இந்த நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, அதன் கோப்புகள் கோவைக்கும் அனந்தப்பூருக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. போர் அச்சம் தணிந்தபின், சிலகாலம் தி.நகரில் உள்ள ஆங்கிலோ – இந்தியப் பள்ளியில் உயர் நீதிமன்றம் தனது பணிகளைச் செய்தது.
நீதிபதிகளும், வழக்கறிஞர்களும்: ஒரு பொற்காலம்
நீண்ட வரலாறு கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், கம்பீரமான கட்டிடங்கள் மட்டுமல்லாமல், நீதியை நிலைநாட்டிய மெத்தப் படித்த, நுண்மான் நுழைபுலம் கொண்ட நீதிபதிகள் மற்றும் ஆற்றலும் பேரறிவும் பெற்ற வழக்கறிஞர்களின் தாயகமாகவும் திகழ்ந்தது.
- முதல் இந்திய நீதிபதி: ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தெரு விளக்கில் படித்த திருவாரூர் முத்துசாமி ஐயர், ஆங்கிலேயர் காலத்தில் 1878 இல் முதல் இந்திய நீதிபதியாக அமர்ந்தார்.
- டாக்டர் ராஜமன்னார்: நாடு விடுதலை பெற்றவுடன் டாக்டர் ராஜமன்னார் 1948 முதல் 1966 வரை நீதிபதியாக அமர்ந்தது நீதித்துறையில் ஒரு மறுமலர்ச்சி காலம்.
- தலைமை நீதிபதிகள்: சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து நீதிபதிகள் பதஞ்சலி சாஸ்திரி, கே.சுப்பாராவ், ஏ.எஸ்.ஆனந்த், கே.ஜி.பாலகிருஷ்ணன் போன்றோர் இந்தியாவின் தலைமை நீதிபதிகளாக உயர்ந்தார்கள்.
- புகழ்பெற்ற வழக்கறிஞர்கள்: சி.பி. ராமசாமி ஐயர், டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரி, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், எஸ். மோகன் குமாரமங்கலம், பராசரன், வி.பி. ராமன், கே.கே. வேணுகோபால் போன்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வரலாறு படைத்தனர். இவர்கள் நீதித்துறையைத் தமிழகத்தில் மேம்படுத்தியவர்கள்.
- பன்முகத் திறமை: அன்றைய நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் தமிழ் இலக்கியம், இசை, கலை, சமூக மேம்பாடு என சகல துறையிலும் சிறந்து விளங்கினர். நீதியரசர் சிவசாமி ஐயர் கல்விக்கு ஆற்றிய பணிகள் ஏராளம். ரசிகமணி டி.கே.சி.யின் சகா, நீதிபதி மகராசன், நீதிபதி மு.மு.இஸ்மாயில் போன்றோர் தமிழுக்கு ஆற்றிய பணிகள் ஏராளம்.
- நீதிபதி மகராசனால் தமிழாக்கம் செய்யப்பட்ட ஷேக்ஸ்பியரின் “கிங் லியர்” இன்றும் படிக்கப் படிக்கத் திகட்டாதது.
- நீதிபதி மு.மு. இஸ்மாயில் தலைமையிலான குழுவால் தயாரித்து வெளியிடப்பட்ட சென்னை கம்பன் கழகத்தின் கம்பராமாயணப் பதிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது.
நீதித்துறையின் மீதான தாக்குதல்களும், அதன் உறுதியும்:
சட்டமன்றத்துக்கும், நீதிமன்றத்துக்கும் பிரச்னைகள் ஏற்படும்பொழுது பல விவாதங்களும், விமர்சனங்களும் நடந்தேறின. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அழகிரிசாமியை அட்வகேட் ஜெனரலாக நியமித்தபோதும், எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நில ஆர்ஜித வழக்கில் நீதிபதி சத்தியதேவ் தீர்ப்பு குறித்து சட்டமன்றத்தில் விவாதித்தபோதும், சட்டப்பேரவைத் தலைவராக பி.எச். பாண்டியன் இருந்தபொழுது நீதிபதி சிங்காரவேல் ஒரு கிரிமினல் வழக்கில் வழங்கிய தீர்ப்பை சட்டமன்றத்தில் ரத்து செய்தபோதும் – நீதித்துறையின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களைப் பொருள்படுத்தாமல் உயர் நீதிமன்றம் அயராது தனது பணிகளைத் தொடர்ந்தது.
கூடுதல் அதிகாரங்கள்:
முதலில் தொடங்கிய மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று உயர் நீதிமன்றங்களும், அதே பேரில்தான் இன்றும் அழைக்கப்படுகின்றன. இந்த நகரங்களின் பெயர்கள் சென்னை, மும்பை, கொல்கத்தா என்று மாற்றப்பட்டாலும், நீதிமன்றங்களின் பெயர்கள் மாற்றப்படவில்லை. இவையாவும் சார்ட்டட் ஐகோர்ட் (Chartered High Court) என்று வழங்கப்படுகின்றன. இந்த மூன்று உயர் நீதிமன்றங்களுக்கும் மற்ற நீதிமன்றங்களைவிட சில கூடுதல் அதிகாரங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது, எல்.பி.ஏ. (LPA) என்று சொல்லக்கூடிய Letters Patent Appeal என்ற இரண்டாவது மேல்முறையீட்டுச் சிறப்பதிகாரம்.
உலகில் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகத்தைக் கொண்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், சாமானியர்களுக்கு நீதியை வழங்குகின்ற ஒரு ஆளுமைக்கு நாம் தலை வணங்குவோம். அதனுடைய நீதி பரிபாலனம் எந்நாளும் ஜனநாயகத்துக்கு வலு கூட்டட்டும்.



