மெக்சிகோவின் கொடூரமான ‘டிரக் கார்டெல்’ இந்தியாவில் கால் பதிப்பு: உள்நாட்டுப் பாதுகாப்பு கேள்விக்குறியா?
டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மெக்சிகோவின் மிகவும் ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் கும்பலான Cartel Jalisco Nueva Generación (CJNG) நேரடியாக நிதியுதவி செய்து போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகங்களை நடத்தியிருப்பது, இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தால் (NCB) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் தகவல், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் செயல்திறன் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
CJNG: ஒரு கண்ணோட்டம்
Cartel Jalisco Nueva Generación (CJNG) என்பது உலகின் மிகக் கொடூரமான மற்றும் ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஆகும். அமெரிக்க ராணுவத்திடம்கூட இல்லாத அதிநவீன ஆயுதங்களை ஏந்தி, தனி ராஜ்ஜியத்தை நடத்தி வரும் இந்தக் கும்பல், fentanyl, methamphetamine, cocaine, Heroin போன்ற போதைப்பொருட்களைக் கடத்துவதோடு, அதற்குத் தடையாக இருப்பவர்களைக் கொடூரமாகக் கொலை செய்யும் வன்முறைக் கும்பல் என அமெரிக்க அரசு குறிப்பிடுகிறது.
ஜூன் 18, 2025 அன்று, அமெரிக்காவின் வெளியுறவுத் துறை (Department of State), #CJNG அமைப்பின் தலைவர்களை உலகளாவிய பயங்கரவாதிகள் என அறிவித்து, தகவல் கொடுப்பவர்களுக்கு 15 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 120 கோடி ரூபாய்) சன்மானமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இந்தியாவில் CJNG-யின் கால்தடம்: எப்படி கண்டறியப்பட்டது?
உத்திரப் பிரதேச மாநிலம், கௌதம் புத்தா நகர் மாவட்டம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள காசனா பகுதியில், 2024 அக்டோபர் 25 அன்று, NCB மற்றும் டெல்லி சிறப்புப் பிரிவு (Delhi Spl Cell) இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், ஒரு ரகசிய மெத்தம்பேட்டமைன் உற்பத்தி ஆய்வகம் கண்டறியப்பட்டது. அங்கிருந்து 95 கிலோ மெத்தம்பேட்டமைன் மற்றும் தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட நவீன இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட 95 கிலோ மெத்தம்பேட்டமைனின் சந்தை மதிப்பு சுமார் ₹285 கோடி ரூபாய். இந்த ஆய்வகத்தை அமைத்து இயக்குவதில் முக்கியப் பங்கு வகித்த மெக்சிகன் நாட்டவர், மும்பையைச் சேர்ந்த வேதியியலாளர், டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர், மற்றும் திகார் சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
நிதி ஆதாரமும், பரிசோதனைக் குழுவும்:
கைது செய்யப்பட்டவர்களிடம் NCB நடத்திய தொடர் விசாரணையில், மெக்சிகன் CJNG ‘டிரக் கார்டெல்’ நேரடியாகப் பணத்தை முதலீடு செய்து இந்தியாவிற்குள் நுழைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிரிப்டோ கரன்சி மூலமாக துபாய்க்குப் பணம் மாற்றப்பட்டு, பின்னர் ஹவாலா மூலமாக மூன்று தவணைகளில் டெல்லிக்கு வந்துள்ளது.
அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், உத்திரப் பிரதேசத்தில் தயாரிக்கப்படும் மெத்தம்பேட்டமைனின் தூய்மையைப் பரிசோதிப்பதற்காக தங்கள் குழுவைச் சேர்ந்த ஒரு நபரையும் மெக்சிகன் CJNG இந்தியாவில் அனுப்பியுள்ளது.
சொத்து முடக்கம் மற்றும் குற்றவாளிகள் யார்?
இந்த வழக்கில், போதைப்பொருள் தயாரிப்புக்கு மூளையாகச் செயல்பட்ட தொழிலதிபர் அமித் குமார் சிங்குக்குச் சொந்தமான ₹9.20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை SAFEMA & NDPS சட்டத்தின் கீழ் NCB முடக்கியுள்ளது.
NCB இந்த வழக்கில் குற்றவாளிகளின் பெயரை வெளிப்படையாக வெளியிடவில்லை. ஆனால், நீதிமன்ற ஆவணங்களின்படி, அமித் குமார் சிங் (தொழிலதிபர்), திகார் சிறை வார்டன் நவீன்மன், ரவீந்திர ஜனார்தன், அம்ரிஷ் பூரி, மற்றும் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த Gutierrez lugo gustavo ஆகிய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமித் குமார் சிங்: ஒரு தொடர் குற்றவாளி?
கைது செய்யப்பட்ட தொழிலதிபர் அமித் குமார் சிங், SCILLA DAIRY INDIA LIMITED, SCILLA BIOTECHNOLOGIES LIMITED உள்ளிட்ட பல நிறுவனங்களில் இயக்குநராக இருந்துள்ளார். 2013 இல் Directorate of Revenue Intelligence (DRI) பதிவு செய்த ஒரு வழக்கில், அவரது நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தில் 951 கிலோ Methaqualone எனும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, 2014 இல் அமித் குமார் சிங் கைது செய்யப்பட்டார்.
கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் 4 மாதம் திகார் சிறையில் இருந்த அவர், 2018 இல் இடைக்கால ஜாமீனில் வெளிவந்துள்ளார். 2024 ஆகஸ்ட் 6 அன்றுதான் அவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கமான ஜாமீன் வழங்கியிருக்கிறது. அடுத்த இரண்டே மாதங்களில், அதாவது 2024 அக்டோபரில், மெக்சிகன் ‘டிரக் கார்டெல்’ உடன் கூட்டு சேர்ந்து போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகத்தை நடத்திய குற்றத்திற்காக NCB அதிகாரிகளால் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

புலனாய்வு ஏஜென்சிகளின் மெத்தனம் மற்றும் அரசியல் உள்நோக்கம்?
இடைக்கால ஜாமீனில் இருந்த ஒரு நபர், உலகின் மிக ஆபத்தான ‘டிரக் கார்டெல்’ உடன் கூட்டு சேர்ந்து போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகத்தை நடத்தியதை இந்தியப் புலனாய்வு ஏஜென்சிகள் எப்படி கவனிக்கத் தவறின என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது மத்திய அரசின் புலனாய்வு ஏஜென்சிகளின் செயல்பாட்டில் உள்ள மெத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஜாபர் சாதிக் வழக்கில், NCB வெளிப்படையாக குற்றவாளியின் பெயர், புகைப்படம், மற்றும் அரசியல் பின்னணி குறித்துப் பேசியது. ஆனால், மெக்சிகன் ‘டிரக் கார்டெல்’ சம்பந்தப்பட்ட இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட நபர்களின் பெயரைக்கூட வெளியிடாமல் ரகசியம் காப்பது, NCB அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களில் கைது செய்யப்படும் நபர்கள் அரசியல் பிரமுகர்களாக இருந்தால், NCB அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தப்படுவதாக ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
NCRB அறிக்கைகளில் மோசடி மற்றும் ரூ.9.29 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் மாயமா?
உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB), “Crime in India” என்ற தலைப்பில் ஆண்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கைகளில், 2018, 2020 மற்றும் 2021 ஆகிய மூன்று ஆண்டுகளில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட பகுதிகள் மட்டும், ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆவணத்தைத் திருத்தி மீண்டும் வெளியிடப்பட்டுள்ளன.
- 2018 இல் 22,263 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியிடப்பட்ட ஆவணம், 7,263 கிலோவாகத் திருத்தப்பட்டுள்ளது. (7 ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 இல் திருத்தப்பட்டது).
- 2020 இல் 55,804 கிலோவும், 2021 இல் 68,219 கிலோவும் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியிடப்பட்ட ஆவணங்கள், 2020 இல் 2,626 கிலோவாகவும், 2021 இல் 3,578 கிலோவாகவும் திருத்தி வெளியிடப்பட்டுள்ளன.
இந்த மூன்று ஆண்டுகளின் திருத்தப்பட்ட தரவுகளுக்கும், ஏற்கனவே வெளியிடப்பட்ட தரவுகளுக்கும் இடையே 1,32,819 கிலோ ஹெராயின் வேறுபாடு உள்ளது. ஒரு கிலோ ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு ₹7 கோடி எனில், இந்த மாயமான 1,32,819 கிலோ ஹெராயினின் மதிப்பு சுமார் ₹9,29,733 கோடி (9.29 லட்சம் கோடி ரூபாய்) ஆகும். இவ்வளவு பெரிய மதிப்புள்ள ஹெராயின் என்ன ஆனது என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மௌனம் சாதிப்பதும், பாராளுமன்றத்திற்குத் தெரிவிக்காததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முடிவும் கேள்வியும்:
உலகின் மிக ஆபத்தான ‘டிரக் கார்டெல்’ இந்தியாவில் நேரடியாகக் கால் பதித்திருக்கும் நிலையில், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு வலுக்கிறது. “போதைப்பொருள் இல்லாத இந்தியா” (Drug Free India) என்ற முழக்கத்துடன் செயல்படும் உள்துறை அமைச்சகம், அரசியல் ஆதாயத்திற்காகப் புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்துவதோடு, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் அலட்சியமாக இருப்பது, இளைய தலைமுறையின் எதிர்காலத்திற்கும், இந்தியாவிற்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகம், ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் காட்டும் அக்கறையில் கொஞ்சமாவது, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிலும், போதைப்பொருள் ஒழிப்பிலும் காட்டுவாரா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.


