அவசரநிலை: கடந்த கால பிழை அல்லது நிகழ்காலப் பாடம்? – மோடி அரசின் விமர்சனமும் அதன் நிஜமும்!
இந்திய ஜனநாயகம் ஒருபோதும் மறக்க முடியாத கசப்பான அத்தியாயம், 1975 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலை. இப்போதைய பிரதமர் நரேந்திர மோடியும், அவரது சகாக்களும் இந்த 21 மாத கால அவசரநிலையை ஆண்டுதோறும் நினைவுபடுத்தி, காங்கிரஸ் கட்சியை விமர்சித்து, தங்களை ஜனநாயத்தைப் பாதுகாப்பவர்களாகக் காட்டிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், இந்த விமர்சனங்களின் பின்னால் மறைந்திருக்கும் சில உண்மைகளையும், இன்றைய இந்தியாவின் நிலைமையையும் நாம் கூர்ந்து நோக்க வேண்டிய அவசியம் உள்ளது.
அவசரநிலையின் அறியப்படாத மறுபக்கம்:
அவசரநிலைக் காலம் பல சர்ச்சைகளையும், அடக்குமுறைகளையும் கொண்டிருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அதற்குக் கூறப்பட்ட நோக்கங்களில் சில நேர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தின என்பதை புறக்கணிக்க முடியாது. அக்காலத்தில், நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்பட்டது. திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்கள் குறைந்தன. தொழில் மற்றும் உற்பத்தித் துறைகளில் வேலைவாய்ப்புகளும் உற்பத்தியும் அதிகரித்தன. வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள் இல்லாததால், உற்பத்தித் திறன் உயர்ந்தது. ஊழல் மற்றும் வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அரசுக்கு வருவாயை அதிகரிக்க உதவியது. ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சீராக இயங்கியது; தாமதங்கள் குறைக்கப்பட்டன. தேசிய அளவில் திட்டமிட்டு செயல்படுவது ஊக்குவிக்கப்பட்டது. இந்த சாதகமான அம்சங்களை மோடி அரசின் விமர்சகர்கள் பெரும்பாலும் வசதியாக மறந்துவிடுகிறார்கள்.

பணமதிப்பிழப்பு: ஒரு புதிய அவசரநிலையா?
அவசரநிலையின் பாதிப்புகளை விவரிக்கும் மோடி அரசு, தாங்கள் எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்திய ஆறாத ரணங்களை வசதியாக மறக்கிறது. அடுத்த சில மணிநேரத்தில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறப்பட்டாலும், லட்சக்கணக்கான சாமானிய மக்களை வாட்டி வதைத்தது. வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் மக்கள் கால் கடுக்க நின்றனர்; பணத்தை மாற்றவும், எடுக்கவும் பல மாதங்கள் போராடினர். இதில் பலர் உயிரிழந்த சோகங்களும் நிகழ்ந்தன. காங்கிரஸ் அரசின் 22 மாத அவசர நிலையை விடவும், இந்த ஒற்றை நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்புகள் பலரின் மனதில் இன்னும் நீங்காத வடுவாகவே உள்ளன.
அடக்குமுறையின் புதிய வடிவங்கள்:
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தை மோடி அரசு கையாண்ட விதம், அவசரநிலைக் காலத்தில் கூட யாருக்கும் தோன்றாத அடக்குமுறை முறைகளை நினைவூட்டுகிறது. அமைதியான போராட்டங்கள், இணைய முடக்கம், முக்கிய தலைவர்கள் மீதான வழக்குகள் எனப் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இன்றைய மோடி ஆட்சியில், எதிர்த்து குரல் எழுப்புபவர்கள் நசுக்கப்படுவதும், மக்கள் அச்சுறுத்தப்படுவதும் வெளிப்படையாகவே நடக்கின்றன. பணபலத்தால் அதிகாரத்தை விலைக்கு வாங்குவது, நண்பர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது போன்ற குற்றச்சாட்டுகள் வலுவாக எழுகின்றன. அமலாக்கத்துறை (ED), சி.பி.ஐ. போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள், அரசியல் எதிரிகளை மிரட்டவும், பணிய வைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன என்ற விமர்சனங்கள் அவசரநிலைக் காலத்தில் கூட இவ்வளவு வெளிப்படையாக எழுந்ததில்லை.
ஊடக வேட்டை: சுதந்திரத்தின் மீதான தாக்குதல்
அவசரநிலைக் காலத்தில் பத்திரிகை சுதந்திரம் பறிபோனதாக மோடி அண்ட் டீம் தொடர்ந்து விமர்சிக்கிறது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, நவீன ஊடகங்கள் முதல் தேசிய-சர்வதேச ஊடகங்கள் வரை வேட்டையாடப்படுவது ஜனநாயகத்தின் மீதான கவலையை எழுப்புகிறது.
- பிபிசி: குஜராத் இனப் படுகொலையில் நரேந்திர மோடியின் பங்கை அம்பலப்படுத்திய “இந்தியா: மோடியின் கேள்வி” என்ற ஆவணப் படத்தை ஒளிபரப்பிய பிபிசி-யின் தில்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இது ஆய்வுகள் அல்ல, ரெய்டுதான் என்று பரவலாக நம்பப்பட்டது. இதன் விளைவாக, பிபிசி இந்தியாவில் நேரடிப் பணியை நிறுத்தி, அதன் ஊழியர் சங்கம் செய்திகளின் பொறுப்பில் இயங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
- தி வயர்: பாஜக அரசின் பார்வையை உறுத்திய தி வயர், பல அவதூறு வழக்குகளையும், நீதிமன்ற உத்தரவுகளையும் எதிர்கொண்டது. பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியாவின் புகாரின் பேரில் தில்லி காவல்துறையினர் வயர் மீது வழக்கு பதிவு செய்ததுடன், நிறுவன ஆசிரியர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் உ.பி. அரசின் தோல்விகளைப் பற்றி செய்தி வெளியிட்டதற்காக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
- காஷ்மீர் வாலா: ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட காஷ்மீர் வாலா செய்தி நிறுவனம் 2023 ஆகஸ்ட் 23 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. அதன் ஆசிரியர் ஃபஹத் ஷா பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 21 மாதங்கள் சிறையில் இருந்தார்.
- தி ஸ்க்ரோல்: மோடியால் தத்தெடுக்கப்பட்ட டோமாரி கிராமத்தில் உணவுப் பஞ்சம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக ஸ்க்ரோலின் ஆசிரியர் பிரியா சர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- நியூஸ் லாண்டரி: நிதி முறைகேடு புகாரின் பேரில் 2 முறை நியூஸ் லாண்டரி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கைப்பற்றப்பட்ட தகவல்கள் கசிந்தது தொடர்பான வழக்கில் வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் பின்னடைவை ஏற்படுத்தியது.
- டைனிக் பாஸ்கர் மற்றும் பாரத் சமாச்சார்: கோவிட் காலத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் தோல்வியை அம்பலப்படுத்தியதற்காக இந்த செய்தி நிறுவனங்கள் மீதும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டன.
- சித்திக் கப்பன்: ஹத்ராஸ் சம்பவத்தைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சித்திக் கப்பன் யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 846 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
- நியூஸ் க்ளிக்: மோடி அரசின் ஊழல்கள் மற்றும் வெறுப்பு அரசியலை அம்பலப்படுத்திய நியூஸ் க்ளிக் மீது சீனாவிடமிருந்து பணம் வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, அதன் முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் உச்சநீதிமன்றம் அவரது கைது நடவடிக்கையைத் தவறு என்று கூறி, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

முத்தாய்ப்பாக 250 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியின் தவறுகளைச் சரிசெய்து இந்தியாவை முன்னேற்றப் பாதையில் பயணிக்க வைத்த காங்கிரஸின் நடவடிக்கைகளில் ஒன்றான அவசரநிலையை, மோடி அரசும் பாஜகவும் அன்றாடம் அல்லது அவ்வப்போது நினைவுபடுத்துகின்றன. ஆனால், தற்போதைய ஆட்சி காலத்தில் நடைபெறும் பணமதிப்பிழப்பு, விவசாயிகளின் போராட்டம் மீதான அடக்குமுறை, மத்திய அமைப்புகளின் அரசியல் பயன்பாடு, மற்றும் ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் போன்ற நிகழ்வுகள், அவசரநிலையின் கொடுமைகளை விடவும் நவீனமயமாக்கப்பட்ட வடிவத்தில் அரங்கேறுகின்றனவா என்ற கேள்வியை எழுப்புகின்றன.
பாஜக தனது அரசியல் ஆதாயத்திற்காக அவசரநிலையை நினைவுபடுத்தும் ஒவ்வொரு முறையும், அதுவே அதன் பலவீனமாக மாறி, தற்போதைய ஆட்சியின் ஜனநாயக விரோதப் போக்குகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே அமைகிறது. கடந்த காலப் பிழைகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, எதிர்காலத்தை ஜனநாயக நெறிமுறைகளுடன் கட்டமைப்பதே உண்மையான ஆட்சியாளர்களுக்கு அழகு.
நிலவளம் ரெங்கராஜன்


