பார்வையற்றோருக்கான பிரெய்லி பத்திரிகை – ஒயிட் பிரிண்ட்
பார்வையற்றோர் படிக்க உதவும் பிரைய்லி முறையை பயன்படுத்தி இதுவரை ஹிந்தி, மராத்தி மொழிப் பத்திரிகைகளும், ஆடியோ வடிவிலான புத்தகங்கள் மற்றும் பாடநூல் புத்தகங்களுமே இந்தியாவில் வெளிவந்துள்ளன. ஆனால் கடந்த ஆண்டு முதலாக, ‘ஒயிட் பிரிண்ட்’ என்ற பெயரில் பார்வையற்றோருக்கான ஒரு ஆங்கில மாத இதழ் வெளிவருகிறது. இது மற்ற பத்திரிகைகளைப் போன்றே, அரசியல், நாட்டு நடப்பு, உணவு, பயணக்குறிப்புகள் போன்ற சகல விஷயங்களும் அடங்கியதாக இருக்கிறது. ஆரம்பத்தில் இதன் பதிவுக்குக் கூட பெரிதும் சிரமப்பட்டேன் என்றும் முதலில் ஒருபத்து பிரதிகள் ரெடி செய்து விறபதே சவாலாக இருந்த நிலையில் இப்போது முன்னூறு பிரதிகள் விற்பதால் தெம்பாக இருக்கிறாராம்,

ஆரம்பத்தில் பொதுஜனத் தொடர்பாளராகப் பணியாற்றி வந்த. 24 வயதே ஆன உபாசனா மகதி என்பவர்தான் இந்த புது முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வியாபார நிறுவனங்கள் மூலம் விளம்பரங்களையும் பிரபல செய்தியாளர்களின் மூலம் பிற செய்திகளையும் பெற்று மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள பார்வையற்றோருக்கான தேசியக் கழகத்தின் உதவியுடன் இந்த இதழ் அச்சிடப்படுகின்றது.தன் அனுபவம் குறித்து அவர்,”மும்பையில் உள்ள ஜெய்ஹிந்த் கல்லூரியில் பட்டம் பெற்ற நான் தொடர்ந்து கனடா சென்று ஒரு படிப்பையும் முடித்து மும்பைக்குத் திரும்பினேன். பின்னர் எல்லோரையும் போலவே எனக்கும் அடுத்து என்ன செய்யலாம் என்ற கேள்வி எழுந்தது. முதலில் மக்கள் தொடர்பு நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தேன். ஆனால் வழக்கமான வேலைகள் மீது என்க்குப் பெரிய பிடிப்பில்லை. வித்தியாசமான ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்கான யோசனையில் ஆழ்ந்த போதுதான் எனக்குப் பார்வையற்றோருக்கான பத்திரிகை தொடங்க வேண்டுமெனத் தோன்றியது. உடனே அது தொடர்பாக 3 மாதங்கள் தீவிரத் தேடலில் ஈடுபட்டேன்.
இதன் விளைவாக கையிலிருந்த வேலையை உதறி விட்டு பத்திரிகை தொடங்கும் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தேன். முதலில் மும்பையில் உள்ள பார்வையற்றோருக்கான தேசிய அமைப்பை தொடர்புகொண்டதும் அவர்களும் என் திட்டத்திற்குத் தங்களால் ஆன உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர். சொன்னது மாதிரி பிரெய்லி முறையில் பத்திரிகையை அச்சடிக்கத் தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை அவர்கள் அளித்துள்ளனர். நானும் சாதாரணமாகத் தட்டச்சு செய்யும் சொற்களை பிரெய்லி முறையில் மாற்றித் தரும் மென்பொருள் பற்றிக் கற்றறிந்தேன். இதைத் தொடர்ந்து பார்வையற்றோர் பலருடன் தொடர்ந்து பேசினேன். பலரும் தங்களுக்கான லைஃப்ஸ்டைல் பத்திரிகை இருந்தால் நல்லது எனக் ஆசைப்பட்டனர்.
இதையடுத்தே 2013 மே மாதம் ஒயிட் பிரிண்ட் பத்திரிகை வெளியானது. இதில் அவ்ர்கள் எதிர்பார்த்த லைஃப்ஸ்டைல், பொழுதுபோக்கு, அரசியல் போன்ற விஷயங்களைத் தாங்கிவரும் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. பார்வையற்றோர் தங்கள் அபிப்பிராயங்களையும் கருத்துகளையும் கதைகளையும் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களது பிரச்சினைகளைத் ர்ப்பதற்கான குரலையும் இப்பத்திரிகையில் ஒலிக்கவிடுகிறார்கள். உணவு, இசை, அரசியல், சினிமா, கேட்ஜெட் போன்றவையுடன் பர்கா தத்தின் பத்தி ஒன்றும் இப்பத்திரிகையில் இடம்பெறுகிறது. இவை அனைத்தும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளன எனத் தெரிவிக்கிறார் உபாஸனா மகதி. இதழில் வெளிவரும் வெற்றிக் கதைகளும் சிறுகதைகளும் உணர்வுபூர்வமாகவும் உற்சாகம் அளிப்பதாகவும் உள்ளதாக வாசகர்கள் சொல்கிறார்கள் என மகிழ்ச்சியுடன் மகதி கூறுகிறார்.


