தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு கிடைச்சாச்சு!
காஞ்சிபுரம் பட்டு சேலை, திண்டுக்கல் பூட்டு, மணப்பாறை முறுக்கு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்து விளக்குகள், கும்பகோணம் வெற்றிலை… இப்படி ஒரு குறிப்பிட்ட நகரப் பெயருடன் இணைந்துள்ள விசேஷ பொருட்களுக்கு தரப்படும் அங்கீகாரமே ‘புவிசார் குறியீடு’. Patent அதாவது அறிவுசார் உரிமம் போன்றே ஒரு ஊருக்கு சொந்தம் கொண்டாட உரிமையை பெற்றுக் கொள்வதே இந்த புவிசார் குறியீடு ஆகும். தமிழகத்திற்கு இதுவரை 19 பொருட்களுக்கு இந்த ‘புவிசார் குறியீடு’ கிடைத்துள்ளது. மேலும் பலவற்றிற்கு பெற உரிமம் கோரப்பட்டுள்ள நிலையில் பாரம்பரியக் கலையைப் பாதுகாத்து வரும் தஞ்சாவூர் வீணைக்கு இக்குறியீடு அளிக்கப்பட்டுள்ளது.

புவிசார் குறியீடு’ சட்டம் 1999-ல் இந்தியாவில் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில்தான் வட்டாரங்களில் தனி சிறப்பும் பாரம்பரியமும் மிக்க வட்டார பொருட்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கப் படுகிறது. மேலும் போலியாக வேறு யாரும் மற்ற பகுதிகளில் இதே பெயரில் தயாரித்து விற்பனை செய்யவும் முடியாது. வெளிநாடுகளில் எலாம் தாவரகளை பாரம்பரிய அறிவுசார் சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்கிறார்கள். உதாரணத்திற்கு பொன்னி அரிசியை மலேசியாவிலும் பாசுமதி அரிசியை பதிவு செய்துள்ளனர். அவற்றை எதிர்த்து இந்தியா வழக்கு தொடுத்து வென்றது ஞாபகம் இருக்கலாம்.
இதற்கிடையில்தான் பாரம்பரியக் கலையைப் பாதுகாப்பதற்காக வழங்கப்படும் புவிசார் குறியீடு தஞ்சாவூர் வீணைக்கு அளிக்கப்பட்டுள்ளது.வீணை இசைக் கருவி பண்டைய காலம் தொட்டு வாசிக்கப்பட்டு வந்தாலும், தஞ்சாவூரில் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னர் காலத்தில்தான் தற்போதைய உருவத்தை அடைந்தது. எனவே, இதற்கு “தஞ்சாவூர் வீணை’ எனப் பெயர் சூட்டப்பட்டது.பண்ருட்டியிலிருந்து வரவழைக்கப்படும் பலா மரத்திலிருந்து இந்த வீணைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த வீணை சிறந்த அலங்கரிப்புடன் எடை கூடியதாக இருக்கும்.
மைசூர் வீணை, திருவனந்தபுரம் வீணை போன்றவை இருந்தாலும், அவற்றைவிட தனிச் சிறப்பு கொண்டது தஞ்சாவூர் வீணை. அனைத்து ராகங்களையும் மீட்டக்கூடிய விதமாக வடிவமைக்கப்பட்ட வீணை இது. எனவே, இந்த வீணை உலக அளவில் பிரசித்தி பெற்றது. இது குறித்து விசாரித்த போது தஞ்சாவூரில் இருந்த ரகுநாத நாயக்கர் அவரது பிரதம மந்திரி கோவிந்த தீட்சிதர் அப்போது வழக்கத்தில் இருந்த சரஸ்வதி வீணையை சற்று மாற்றங்கள் செய்து அனைத்து ராகங்களையும் இசைக்கக்கூடிய இசை கருவியாக உயர்த்தி உள்ளனர். அதனால் ரகுநாத நாயக்கரே தஞ்சாவூர் வீணையின் சிற்பி, அதன் தந்தை என்று போற்றப்படுகிறார். அதனால்தான் ‘தஞ்சாவூர் வீணை’ என்ற சொற்றொடரும் வழக்கத்திற்கு வந்துள்ளது. இந்த வீணையினை தயாரிப்பது மிகவும் சிரமமான காரியம் ஆகும். விசேஷ மரம் கொண்டு இறைவனின் படங்கள் பொறிக்கப்பட்டு இந்த வீணைகள் மிக நுண்ணியமாய் வடிவமைக்கப்படுகிறது. வேத புராண காலத்திலேயே பிரபலமான இசை கருவிகளாக புல்லாங்குழல், மிருதங்கம் உள்ளது. மூன்றாவதாக இருப்பது இந்த வீணையாகும். இசை கடவுளாக வர்ணிக்கப்படும் சரஸ்வதி எப்போதும் கையில் வீணையுடன் இருப்பது கலைகளில் வீணையின் முதன்மையை விளக்குகிறது. இப்படி பல அரிய விசேஷ செய்திகள் கொண்ட நமது பாரம்பரிய கலை பொக்கிஷமான தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு அண்மையில் கிடைத்தது. இந்த புவிசார் குடியீட்டுச் சான்றிதழை வீணைத் தொழிலாளர்களுக்கு வழங்கும் விழா தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த புவிசார் குறியீடு மூலம் தஞ்சாவூர் வீணைக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. புவிசார் குறியீட்டுச் சட்டத்தில் தஞ்சாவூர் வீணை பதிவு செய்யப்பட்டுள்ளதால், இனிமேல் இதுபோன்ற வடிவில் வேறெங்கும் செய்யக் கூடாது. இது, வரலாற்றில் ஒரு மைல் கல். இதன்மூலம், வீணை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 100 கலைஞர்கள் பயனடைவர். மேலும், தொழிலாளர்களின் குடும்பங்களைச் சார்ந்த வருங்காலத் தலைமுறையினரும் இந்தத் தொழிலில் தொடருவதற்குப் புவிசார் குறியீடு வழிவகுக்கும்.
இதையடுத்து திருபுவனம் பட்டு, நெல் மாலை ஆகியவற்றுக்குப் புவிசார் குறியீடு பெற விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கும் விரைவில் புவிசார் குறியீடு கிடைத்துவிடும் என்றும் மேலும், சீரகச் சம்பா, மரக்குதிரை, திருவையாறு அசோகா அல்வா, கும்பகோணம் வெற்றிலை ஆகியவற்றுக்கும் புவிசார் குறியீடு பெற பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது


