மோடி பதவியேற்பு விழாவில் சோனியா, ராகுல் !

மோடி பதவியேற்பு விழாவில் சோனியா, ராகுல் !

நரேந்திர மோடி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் உள்ள வெளிப்புற முற்றத்தில் இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன. மாலை 6 மணிக்கு தொடங்கும் விழா இரவு 7.45 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மோடி பதவி ஏற்கும் விழாவுக்கு வருமாறு முதன் முதலாக தெற்காசிய கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது. சார்க் கூட்டமைப்பில் இந்தியா தவிர பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான், மாலத்தீவு ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
Modi-PM
இதில் இலங்கை அதிபர் ராஜபக்சே, ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேபாளம், பூடான், மாலத்தீவு தலைவர்களும் வர உள்ளனர். பாகிஸ்தானும், வங்க தேசமும் பிரதிநிதிகளை மட்டும் அனுப்பும் என்று தெரிகிறது.இதற்கிடையே மோடி பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மே 20-ல் பாஜக நாடாளுமன்ற குழு தலைவராகவும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராகவும் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்ட தினம், சோனியா காந்தி தனது வாழ்த்துகளை நரேந்திர மோடியிடம் தெரிவித்தார் என்பது கவனிக்கத்தக்கது.

இதற்கிடையே மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வருமாறு முக்கிய திரை உலக பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், சல்மான்கான், விஜய், நடிகை ரேகா ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர், கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.இவ்வளவு வி.ஐ.பி.க்கள் அழைக்கப்பட்டும் மோடி குடும்பத்தின் சார்பில் அவரது தாய் மற்றும் சகோதர்கள் டெல்லி விழாவில் கலந்து கொள்வார்களா? என்ற சந்தேகம் நிலவுகிறது. மோடி தனிப்பட்ட முறையில் 20 பேரை அழைக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவர் இதுவரை தனிப்பட்ட முறையில் யாருக்கும் அழைப்பு கொடுக்க வில்லை.

இதனிடையே நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ராஜபக்சே வருவதை எதிர்த்து தலைநகர் டெல்லியில் தனது தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
படம்:socialism.in

Related Posts