மற்ற மாநிலங்களிலும் மணிப்பூரின் தீ!
மணிப்பூரில் நிர்வாணமாக அழைத்து இழுத்துச் செல்லப்பட்ட பெண்களிடம், தமது அனுபவங்களைச் சொல்லுமாறு கூறி அடிக்கடி மத்தியப் புலனாய்வுத் துறை நடத்துகிற விசாரணையை உடனே நிறுத்துமாறு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார். உடலளவில் நிகழ்த்தப்பட்ட அந்த வன்முறையைத் திரும்பத் திரும்பச் சொல்ல வைத்து மனதாலும் காயப்படுத்துகிற கொடூரர்கள்! ‘இரண்டு மாதங்களாக மணிப்பூரில் அரசியலமைப்பு இயந்திரம் முற்றிலும் சீர் குலைந்துள்ளது. ஓரிரு வழக்குகளைத் தவிர, மற்ற வழக்குகளில் யாரும் கைது செய்யப்படுவதில்லையா? எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் கூட கால தாமதம்’ என்று கோபமடைந்த தலைமை நீதிபதி இது தொடர்பாக விளக்கமளிக்க மாநில டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

விஷயம் மணிப்பூரோடு மட்டும் முடிந்து விடவில்லை. அரியானா மாநிலத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் இணைந்து நடத்திய ஊர்வலத்தைத் தொடர்ந்து நூ மாவட்டத்தில் பெரும் வன்முறை வெடித்திருக்கிறது. “முஸ்லிம்கள் தான் வன்முறையில் ஈடுபட்டார்கள். ஆயிரக் கணக்கான இந்துக்களை மகாதேவ் ஆலயத்தில் சிறைப் பிடித்து வைத்திருக்கிறார்கள்” என்று பாஜக ஆளும் அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சர் கூறுகிறார்.
ஆனால் அந்த ஆலயத்தின் தலைமைப் பூசாரியான தீபக் ஷர்மா, ஆயிரக் கணக்கான மக்கள் ஆலயத்திற்கு வந்து செல்கிறார்கள். வெளியே கலவரச் சூழல் காரணமாக உள்ளேயே இருக்குமாறு, காவல்துறை தான் அவர்களை நிறுத்தி வைத்தது என்று உண்மையைப் போட்டு உடைத்து இருக்கிறார். ஆண்டுதோறும் இந்துக்களும் முஸ்லிம்களும் தமது பண்டிகைகளை நடத்துவதும் ஊர்வலம் செல்வதும் அங்கு வழக்கம். அப்போது ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அடுத்தச் சமூகத்திற்கு உதவுவார்கள் என்பது கடந்த கால வரலாறு.
இப்போது விசுவ இந்து பரிஷத் கலவர நோக்கத்தோடு அந்த ஊர்வலத்தைத் தன் கைக்குள் எடுத்துக் கொண்டது. மோனு மனேசர் என்று இந்துத்துவா தலைவர், முஸ்லிம்களை ஏளனப் படுத்தியும், ஆத்திரமூட்டும் கடும் சொற்களால் விமர்சித்தும் பேசிய வீடியோ ஊர்வலத்துக்கு முன்னதாகவே பரப்பப்பட்டது இது பற்றி முஸ்லிம்கள் காவல் துறையிடம் முறையிட்டிருக்கின்றனர். ஊர்வலத்தில் அந்த மனேசர் பங்கேற்காத வகையில் பார்த்துக் கொள்கிறோம் என்று காவல் துறையும் உறுதி அளித்திருக்கிறது. ஆனால் அவர்தான் ஊர்வலத்துக்குத் தலைமை! முஸ்லிம்கள் தடுத்ததால் தான் கலவரம் என்று மாநில அரசு கூறுகிறது. ஆனால் எரிந்தவை எல்லாம் இஸ்லாமியர்களின் கடைகள், வீடுகள், வாகனங்கள் தான். ஒரு மசூதியும் கூடஎரித்துத் தகர்க்கப் பட்டிருக்கிறது.
ஜோதிர் ஆதித்ய சிந்தியாவைப் பிடித்து, காங்கிரஸ் ஆட்சியைத் தட்டிப் பறித்து, தற்போது பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில், சங்பரிவார் நடத்திய ஊர்வலத்தின் மீது மூன்றாவது மாடியிலிருந்து தண்ணீரைத் துப்பியதாக பொய்ப் புகார் ஒன்றும் எழுப்பப்பட்டது. 16,15,14 வயதுள்ள மூன்று சிறுவர்களைக் காவல்துறை பிடித்து, கண் மூடித்தனமாகத் தாக்கியதோடு, அவர்களைச் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்திருக்கிறது. இது போதாதென அவர்களது மூன்று மாடி வீடு இடிந்து விழும் நிலையில் இருப்பதாகக் கூறி நோட்டீஸ் ஒட்டி, சில மணி நேரங்களில் புல்டோசர் கொண்டு மொத்த வீட்டையும் இடித்துத் தரை மட்டமாக்கி இருக்கிறார்கள். இடிக்கும்போது சங்கிகள் கூட்டம் மேள தாளத்தோடு உற்சாகக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது.
சிவசேனை, என்சிபி கட்சிகளை உடைத்து, பாஜக ஆட்சியைப் பிடித்த இன்னொரு மாநிலமான மகாராஷ்டிராவில், ஓடும் ரயிலில் ஒரு ரயில்வே காவலர் தனது அதிகாரியை மட்டுமின்றி, மூன்று முஸ்லிம்களையும் எந்தக் காரணமும் இன்றி சுட்டுக் கொன்றிருக்கிறார். “நீங்கள் இந்துஸ்தானத்தில் வாழ வேண்டும் என்றால் மோடிக்கும் யோகிக்கும் வாக்களியுங்கள்” என்று அப்போது அவர் கூறிய வீடியோ வெளியாகி இருக்கிறது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள். மாட்டிக் கொண்டால் மனப் பிறழ்வு என்பார்கள். நாளை அவர் பாஜக வேட்பாளராகவும் கூட நிறுத்தப்படலாம். மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி புரிந்தால் அது இரட்டை எஞ்சின் ஆட்சி என்று பேசினார்கள். அவ்வாறு அமைந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த மாநிலங்களில் நடைபெறும் வன்முறை வெறியாட்டங்களே சாட்சி.
மேற்சொன்ன மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு 2024ல் தேர்தல் நடக்கப் போகிறது. நாடாளுமன்றத் தேர்தலும் வருகிறது. கலவரங்களை நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவது சங்கிகளுக்குக் கைவந்த கலை. அரசாங்கமே துணை நின்று தூண்டும் போது தாக்குதலின் வேகமும், பரப்பளவும், சேதமும் அதிகரிக்கின்றன. இந்தக் கொடூரர்களுக்கு எதிராக மக்களைத் தட்டி எழுப்புவது ஜனநாயக முற்போக்கு சக்திகளின் கடமையாகும்.


