ஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்

எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஃபாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. அதை ஒட்டி இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குனர் மோகன்ஜி, டத்தோ ராதாரவி, நடிகை தர்ஷா குப்தா, இசையமைப்பாளர் ஜுபின், கலை இயக்குனர் ஆனந்த், விளம்பர வடிவமைப்பாளர் பிரவீன், நடிகர் ஜே.எஸ்.கே கோபி, படத்தொகுப்பாளர் தேவராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் ‘டத்தோ’ ராதா ரவி பேசுகையில்,” இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் மறுப்பு தெரிவித்தேன். ஏனெனில் ‘ருத்ரதாண்டவம்’ என்ற பெயரில் வி. கே. ராமசாமி, நாகேஷ் நடித்திருக்கும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன். நாங்கள்‘ருத்ரதாண்டவம்’ என்ற பெயரில் படத்தை எடுக்க திட்டமிட்டு விவாதித்தோம். பிறகு சில காரணங்களால் அதனைத் தொடர முடியவில்லை. இந்நிலையில் நண்பர் ஜேஎஸ்கே கோபியின் உதவியுடன் இயக்குனர் மோகன்ஜி என்னை சந்தித்தார். நீங்கள்தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனர் தெரிவித்தார் அப்போது நான் ஒரு தொகையை சம்பளமாக கேட்டேன் அதைக் கேட்டு அதிர்ந்து சென்றவர்தான் அதன் பிறகு திரும்பி வரவே இல்லை. பிறகு அவர் ஒரு சம்பளத்தை நிர்ணயித்து சொன்னார்.
மலையாள திரை உலகில் படைப்பாளிகளும், திரைக்கதை ஆசிரியர்களும் எதைச் சொல்ல நினைக்கிறார்களோ… அதை அவர்களால் உறுதியாகவும், துணிச்சலாகவும் செல்ல முடியும். அது போன்றதொரு நிலை தமிழகத்தில் இல்லை. இங்கு ஒரு காட்சியில் பின்னணியில் நிற்பவர்களால் கூட அரசியலாக்கப்படுகிறது. நான் ஒரு திறமையான நடிகன் இதனை சொல்லி சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டேன் இனிமேல் சொல்வதில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். ஏனெனில் திரை உலகில் காகித பூக்களுக்கு தான் மரியாதை. உண்மையான வாசம் வீசும் மலருக்கு மரியாதை கிடைப்பதில்லை. ஊடகவியலாளர்கள் நினைத்தால் நன்றாக இருக்கும் ஒருவரை கூட ஆட்டோ சங்கர் ஆக மாற்றிவிட முடியும் நீங்கள் நினைத்தால் ஆட்டோ சங்கரை கூட சாய்பாபாவாக மாற்றிவிட முடியும். எனவே இப்படத்தை பற்றி எழுதி ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ‘என்றார்.
நடிகை தர்ஷா குப்தா பேசுகையில்,” தர்ஷா குப்தா என்றால் ‘குக் வித் கோமாளி’, ‘விஜய் டிவி’ என்ற அளவில்தான் அனைவருக்கும் அறிமுகமாகி இருக்கிறேன் ஆனால் என்னுடைய நீண்டநாள் கனவு திரைப்படத்தில் நடிகையாக நடிக்க வேண்டும் என்பது. அதிலும் ஒப்பனையே இல்லாமல் கிராமத்து பெண் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. அந்தக் கனவை இயக்குனர் மோகன்ஜி ருத்ர தாண்டவம் படத்தில் மூலம் நிறைவேற்றியிருக்கிறார்.என்னுடைய திரைப்பட அறிமுகமே பெரிய நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடைபெறுவதால் மகிழ்ச்சியுடன் பெருமிதமாகவும் இருக்கிறது. இந்தப்படத்தில் கிராமத்தில் வாழும் பெண்ணாகவும், அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்திற்கான ஆடிஷன் தேர்வில் இயக்குனர் மேக்கப் எதுவுமில்லாமல் வரவேண்டுமென கேட்டுக்கொண்டார். இது எனக்கு சவாலானதாக இருந்தது. இந்த படத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
படத்தின் இயக்குனர் மோகன்ஜி பேசுகையில்,” திரௌபதி படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளரான 7ஜி சிவா அவர்களுக்கு முதல் பிரதி அடிப்படையில் இந்த திரைப்படத்தை என்னுடைய சொந்த நிறுவனமான ஜி எம் கார்ப்பரேஷன் ஃபிலிம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறேன். திரௌபதி படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரமாண்டமான பட்ஜெட்டில் படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் வந்தது. திரௌபதி படத்தின் பட்ஜெட் 45 லட்சம். ஆனால் படத்தின் பட்ஜெட்டை விட இருபதிலிருந்து இருபத்தி மூன்று மடங்கு கூடுதலாக வசூலித்தது. இதனால் ஏராளமான வாய்ப்புகள் என்னை தேடி வந்தது. முன்னணி நடிகர்கள் இருவர் கூட நல்ல ஊதியத்தில் படங்களை இயக்க வாய்ப்பு வழங்கினார்கள். பழைய வண்ணாரப்பேட்டை படத்திலிருந்து திரௌபதி படம் வரை என்னைச் சுற்றி இருப்பவர்களின் கதைகளைத்தான் படைப்பாக உருவாக்கி இருக்கிறேன். சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மையப்படுத்தி தான் திரௌபதி திரைப்படத்தை உருவாக்கி இருந்தேன்.
ருத்ர தாண்டவம் படத்தின் கதையையும் என்னுடைய நண்பரான கிருத்துவ பாதிரியார் ஒருவர் தான் அளித்தார். அவர் திரௌபதி படத்தை பார்த்துவிட்டு உங்களுடைய துணிச்சலைப் பாராட்டுகிறேன். நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன். அதனை படைப்பாக மாற்ற இயலுமா..? என கேட்டு கேட்டு விட்டு ஒரு விஷயத்தைச் சொன்னார், கிருத்துவ மதத்தில் பல உட்பிரிவுகள் இருக்கிறது கிறிஸ்தவ மதத்தை சிலர் கார்ப்பரேட் நிறுவனம் போல் மாற்றியமைத்து இருப்பதையும் எடுத்துரைத்தார். மலையாளத்தில் வெளியான டிரான்ஸ் என்ற படத்தை பற்றி விரிவாக விவாதித்தார். இதனை திரைப்படமாக உருவாக்கினால், சமூகத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக உருவாகும் என விவரித்தார். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தமிழக கடலோர மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படும் என சொன்னார்.
சிலர் எளிதாக மேடையில் இந்து மதத்தை அழித்து விடுவோம். வேரறுத்து விடுவோம் என பேசுகிறார்கள். அதற்கு கைதட்டல்களும் கிடைக்கிறது. இதன் பின்னணியில் மிகப்பெரிய கார்ப்பரேட் அரசியல் இருப்பதையும், மிகப் பெரிய சதி திட்டம் இருப்பதையும் எடுத்துரைத்தார். இவை யெல்லாம் பொதுமக்களுக்கு தெரிவதில்லை. மக்களும் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. நம்முடன் இருந்து கொண்டே இந்து மதத்தை அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனை பாதிரியாருடைய கண்ணோட்டத்திலிருந்து சொல்லும்பொழுது எனக்கு மிகப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் இதுவரை உண்மையான கிறிஸ்துவராக இருந்தோம். தற்போது திடீரென்று ஏராளமானவர்கள் இங்கு வந்து கிறிஸ்துவராகவும் இல்லாமல், இந்துவாகவும் இல்லாமல் எங்களை நோக்கி கேள்வி கேட்கிறார்கள். இதை கேட்டவுடன் இதுதான் என்னுடைய அடுத்த படைப்பு என்று உறுதி எடுத்துக் கொண்டு ருத்ரதாண்டவம் என தலைப்பு வைத்து பணிகளைத் தொடங்கிவிட்டேன். இதுதான் ருத்ரதாண்டவம் உருவான கதை. இந்த தருணத்தில் நடிகர் ரிச்சர்ட்டிற்கு நான் நன்றி சொல்ல வேண்டும். நான் ரிச்சர்ட் உடன் தொடர்ந்து படங்களை படங்களில் பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் முப்பத்தி எட்டு, முப்பத்தி ஒன்பது நாட்களுக்குள் ஒரு படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டு நிறைவு செய்கிறோம் என்றால், அதற்கு நாயகனின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. படப்பிடிப்பு ஏழு மணி என்றால்இ ஏழு மணிக்கு ஒப்பனையுடன் தயாராக ரிச்சர்ட் இருப்பார். படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் எந்த ஒரு நெருக்கடியை கொடுக்காமல் வீட்டுக்கு செல்வார். இதுபோன்ற ஒரு நாயகன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாகவே கருதுகிறேன். தமிழ்சினிமா இவரை கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
கதாநாயகி தர்ஷா குப்தா அவர்களுக்கு இன்னும் அவர்களுடைய ஊதியத்தில் சிறு தொகை நிலுவையில் இருக்கிறது. பட வெளியீட்டுக்கு முன்னால் அதை வழங்கி விடுவேன் என உறுதி கூறுகிறேன். தர்ஷா குப்தா இந்த படத்தில் அவருடைய நடிப்பிற்கு அவரே பின்னணி குரல் கொடுத்தார். இது என்னுடைய அதிர்ஷ்டம் என்று தான் கருதுவேன். ஏனெனில் நான் இயக்கிய 3 படங்களிலும் நாயகிகள் சொந்த குரலில் பின்னணி பேசியிருக்கிறார்கள். இதனால் தமிழ் பேசத் தெரிந்த நடிகர்களை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஊக்கமாக இருக்கிறது. தர்ஷா குப்தா படத்தில் 8 மாத கர்ப்பிணியாக கதையில் அறிமுகமாகி, ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருக்கிறார். படம் வெளியான பிறகு நிச்சயம் அவர் பேசப்படுவார்
நடிகர் மனோபாலா சார் அதிரடியாக ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். விரைவில் ஸ்னீக் பீக்காக வெளியாகவிருக்கிறது. அந்த முன்னோட்ட காட்சிகள் வெளியான பிறகு நிச்சயம் சலசலப்பு உண்டாகும். இதற்கு எதிர்மறையாக விமர்சனங்கள் வரும். இதற்கு நான் இப்போதே பதிலளித்து விடுகிறேன். படத்தில் அந்தக் கதாபாத்திரம் பேசும் வசனங்கள் தவறு என்றால், நிஜத்தில் தலைவர் ஒருவர் மேடையில் பேசிய அத்தகைய பேச்சும் தவறுதான். தலைவர் ஒருவர் மேடையில் பேசிய பேச்சை தான் இப்படத்தில் வசனங்களாக இடம்பெற வைத்திருக்கிறேன். இந்த சலசலப்பு படத்தின் வெளியீட்டிற்கு வெற்றிக்கும் பெரிய அளவில் உதவி செய்யும் என நம்புகிறேன்.
அதேபோல் மற்றவர்களுக்கும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன் நீங்கள் ஃபேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக வலைதள பக்கத்தில் என்னுடைய மதத்தை பற்றியோ.. என்னுடைய சமூகத்தைப் பற்றியோ.. ஏதேனும் காயப்படுத்தும் வகையில் பேசினால், அதனை அப்படியே என்னுடைய படைப்பில் இடம்பெறும் கதாபாத்திரம் பேசும் வகையில் வைத்து விடுவேன். அதனால் மற்றவர்களை காயப்படுத்தும் முன் தீர யோசனை செய்து வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
திரௌபதி 360 திரை அரங்குகளில் வெளியானது. ருத்ர தாண்டவம் அக்டோபர் 1ஆம் தேதியன்று 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் என வினியோகஸ்தர் 7 ஜி சிவா வாக்குறுதி அளித்து இருக்கிறார். அது நடைபெறும் என நினைக்கிறேன். அது நடைபெறறால் இப்படத்தின் வெற்றி உறுதியாகிவிடும். இந்தப் படம் யார் மனதையும் காயப் படுத்துவதற்காக எடுக்கப்படவில்லை. ஒரு படைப்பாளியாக எனக்கு கிடைத்த ஒரு நல்ல கருவை அனைவரும் ரசிக்கும் வகையில் திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறேன். படத்தைப் பார்த்துவிட்டு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும என கேட்டுக்கொள்கிறேன்.’ என்றார்.