தமிழக பட்ஜெட் & வெள்ளை அறிக்கை தாக்கலாகும் நாள் குறிச்சாச்சு!
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஆண்டு, பரிட்சார்த்த முயற்சியா காகிதமில்லா இ-பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ள நிலையில் அந்த நிதிநிலை அறிக்கை வரும் 13-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக 9-ம் தேதி, 120 பக்கங்கள் கொண்ட நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் எனவும், அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. . இதுதவிர, இந்த ஆண்டு தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், துறைவாரியாக நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, தற்போது பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழலில், தமிழக பட்ஜெட் தொடர்பாக, இன்று காலை (ஆக. 04) 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அமைச்சரவையின் 33 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு, வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் தேதி உள்ளிட்ட முக்கியத் தேதிகள் இக்கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது.
மேலும், பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள், துறைகள் வாரியாக புதிய திட்டங்கள், வெள்ளை அறிக்கை, பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக விண்ணப்பித்துள்ள நிலையில், அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக, இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் 2021-2022ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை வரும் 13-ம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இதனை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றபிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது.
மேலும், 9-ம் தேதி, 120 பக்கங்கள் கொண்ட நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் எனவும், அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட உள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில், “முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
* இக்கூட்டத்தில் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, வரும் 13-8-2021 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
* அதோடு, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை, தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுமென்று ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தவாறு, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை நடப்புக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு முடிவு செய்வார்.