June 2, 2023

ஒன்றிய அரசு என்றுதான் அழைப்போம்- முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்!

ன்றியம் என்ற வார்த்தையைக் கேட்டு யாரும் மிரளத் தேவையில்லை என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதில் கூட்டாட்சித் தத்துவம் உள்ளது. அதனால் பயன்படுத்தினோம், பயன்படுத்துவோம், பயன்படுத்திக் கொண்டே இருப்போம் என்று கூறினார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், மத்திய அரசை, ஒன்றிய அரசு என கூறுவது ஏன் என முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என கோரினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “ஒன்றிய அரசு என கூறுவது சமூக குற்றமல்ல. சட்டத்தில் என்ன சொல்லி இருக்கிறதோ அதைதான் சொல்லி இருக்கிறோம். மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது தான் ஒன்றியம். இது தவறானது அல்ல. ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி உள்ளது. ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்தினோம். பயன்படுத்துவோம். பயன்படுத்தி கொண்டே இருப்போம். ஒன்றிய அரசு என கூறுவதை கண்டு யாரும் மிரள வேண்டாம்.

1957-ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் ஒன்றிய அரசு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தின் முதல் வரியில் ஒன்றியம் என்ற வார்த்தை உள்ளது. மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இருப்பதே ஒன்றியம் என பொருள்.” இவ்வாறு அவர் பதிலளித்தார்.

அப்போது, இந்தியாவில் இருந்து பிரிந்தது தான் மாநிலங்கள் என நயினார் நாகேந்திரன் கூறியதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்தியாவில் இருந்து மாநிலங்கள் பிரியவில்லை. எல்லோரும் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் இந்தியா என விளக்கமளித்தார்.