ஒலகமாம்.., தலைவர்களாம்.. மீட்டாம் .. நீட்டாம் – அடப் போங்கப்பூ!
உலக தலைவர்கள் இந்தியா வந்தால் நாடே சுத்தமாகிவிடும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித் ததாக செய்தி ஒன்று கடந்தது. சென்னை மவுன்ட் ரோடையும் ஓஎம்ஆரையும் காரில் கடந்துவிட்டு இந்த கருத்தைச் சொல்லியிருப்பார்கள் என்று ஊகிக்கலாம்.
பள்ளிக் காலத்தில் ஐந்தம் வகுப்பு படித்தபோது இன்ஸ்பெக்ஷன் வருகிறார்கள் என்று தயார் படுத் தினார்கள். வகுப்பறையில் உயரம் காரணமாக கடைசி இருக்கையில் உட்கார்ந்தவர்களெல் லாம் வருபவர்கள் எதாவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல தெரியாதவர்களால் ரீப்ளேஸ் செய்யப் பட்டு முன் வரிசைக்கு வந்தார்கள். வரும் ஆய்வாளர் தமிழாசிரியராக இருந்தால், ‘வணக்கம் ஐயா அல்லது அம்மா’ சொல்ல வேண்டும். அதுவரை மாணவர்களால் சுத்தம் செய்த வகுப்பறைக்கு துப்புரவு தொழிலாளர் ஒருவர் வந்து சுத்தம் செய்வார். பல ஜிகுஜிகு வேலைகள் நடக்கும். அதுவரை ஊர் திருவிழாவில் சிலம்பாட்டம் ஆடிய சிறுவர்களை அழைத்து வந்து கலை நிகழ்ச்சி நடத்து வார்கள். இன்ஸ்பெக்ஷன் முடிந்ததும் பழையபடி வேதாளம் முருங்கை மரத்துக்கு ஏறிவிடும். (அந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பலர் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை)
தொழிற்சாலைகளில் ’ஆடிட்டிங்’ கேள்விப்பட்டிருப்பீர்கள். பொருளை உற்பத்தி செய்யக் கொடுத்த நிறுவனம் வந்து சோதனையிடும். எல்லாம் சுத்தமாக இருக்கிறதா? உரிய பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்படுகின்றனவா என்றெல்லாம் சோதனை நடக்கும். அதுவரை கைக்கு க்ளவுஸ் கொடுக்காத மேலாளர்… பாசமாக வந்து ‘இந்தாப்பா இத போடு…’ என அக்கறை காட்டுவார். அந்த கொதிக்கும் பொருளுக்கெல்லாம் க்ளவுஸ் இருக்கு என்றே அன்றுதான் நமக்கு தெரியவரும். அவர்கள் கிளம்பியதும் கொடுத்த க்ளவுஸை பிடிங்கிக் கொள்வார்கள்.
அப்படித்தான் இந்த சுற்றுப்பயணத்துக்குப் பிறகும் நடக்குமா? என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம். மத்திய கைலாஷ் பகுதியில், ஓஎம்ஆர் சாலையில் இருந்து படேல் ரோட்டுக்கு லெஃப்ட் கட் செய்யும் இடத்தில் ஒரு பெரிய குழியும், அதன்மீது உடைந்த இரும்பு மூடியும் போடப்பட்டிருக்கும். பல நாள் புதுப் பயணிகள் அதற்குள் வண்டியை விட்டு அவதிப்பட்டிருப்பார்கள். அந்த குழி தற்போது சரி செய்யப்பட்டு, புதிய மூடி போடப்பட்டுள்ளது. அதன் அருகே குண்டும் குழியுமாக இருந்த ப்ளாட் ஃபார்மும் இப்போது சமமாகியுள்ளது.
இந்திரா நகர், கஸ்தூரிபா நகர் ரயில் நிலையங்களையெல்லாம் பார்க்கும்போது பேய் பட ஃபீலிங் வரும்… குழந்தைகள் மிரட்சியுடன் பார்ப்பதையும் பார்த்திருப்பீர்கள். அதைப் பார்த்து சீன அதிபர் பயந்து விடக்கூடாது என துணி போட்டு மூடி வைத்திருக்கிறார்கள். புதிதாக வெள்ளைக் கோடு போடப்பட்டிருக்கிறது. நாவலூர் சிக்னலில் போலீஸ் அதிகாரிகளை நிறுத்தியிருக்கிறார்கள். திருவான்மியூர் ரயில்வே ஸ்டேஷன் வெளியே இருக்கும் ப்ளாட் ஃபார்மில் சிமெண்ட் பூசப்பட்டி ருக்கிறது. இன்னும் இதுபோல ஆயிரமாயிரம் மாற்றங்கள் இந்த ஒரு வாரத்தில் நடந்தேறியுள்ளன.
எல்லா போலீஸ்காரர்களும் இந்த வேலையில் பிசியாக இருப்பதால், கைதிகளை கோர்ட்டில் ஆஜர் படுத்த ஆள் இல்லையாம். அவர்கள் வந்துவிட்டு கிளம்பும் வரை அவகாசம் கேட்டிருக்கிறார்கள். நாளை வழிநெடுக குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றனவாம். வெயில் குறை வாக அடிக்குமா என்று தெரியவில்லை. எத்தனை குழந்தைகள் வியர்வையில் வாடி வதங்கப் போகிறார்கள் என்பதெல்லாம் பயணம் முடிந்ததும் தான் நமக்கு தெரியவரும்.
இத்தனை நாளாக தீவிர பணியில் இருக்கும் போலீஸ்கார்களுக்கு சாப்பாடு மூன்று வேளையும் கிடைக்கிறதா? துப்புரவு பணியில் இருப்பவர்களுக்கு குடிக்க தண்ணீராவது கிடைக்கிறதா?