தமிழகத்தில் தானாய் தளைக்குது இந்தி!
தாளமுத்து நடராசன், கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம் பாக்கம் சிவலிங்கம், விருகம் பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி… –இவர்களெல்லாம் இந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் உயிர் நீத்த தியாகிகள். இந்தித் திணிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் 1965-ம் ஆண்டு தமிழகமே பற்றி எரிந்தது எனலாம். மாணவர்கள் முன்னின்று நடத்திய அந்தப் போராட்டத்தில் பல நூறு பேர் உயிர் நீத்தனர். போராட்டத்தை அடக்க ராணுவம் வந்தது.
மொழியைப் பாதுகாக்க நடைபெற்ற ஒரு போராட்டத்தை ஒடுக்க ராணுவம் களத்தில் இறங்கியதும், அந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன என்பதும் உலக வரலாற்றில் வேறெங்கும் இல்லாதது. அதனால்தான், 1965-ம் ஆண்டு போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையும் குலுக்கி எடுத்தது. இதெல்லாம் பழைய வரலாறு. ஆனாலும் இன்றளவும்
மத்திய அரசும் இந்தியை திணிக்கும் முயற்சியை கைவிடவில்லை என்று புகார் நிலவுகிறது. இந்நிலையில், தொலைதூரக் கல்வியில் இந்தி பயில சேர்ந்த மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அதாவது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் இந்தி இயக்குநரகத்தின் கீழ் தொலைதூரக் கல்வி மையம் செயல்படுகிறது. இந்த இந்தி மொழி கற்க 2012-ல் சான்றிதழ் பிரிவில் 1,886 பேர் சேர்ந்தனர். இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டில் அதிக அளவாக 7,447 ஆக உயர்ந்தது. பட்டயப் படிப்பில் 475 பேர் சேர்ந்தனர். அடுத்த ஆண்டு இது 1,572 ஆக உயர்ந்தது. பொறியியல் மாணவர்கள் இந்தி பயில அந்த ஆண்டில் அதிக விருப்பம் காட்டியதே இந்த உயர்வுக்கு காரணம் ஆகும்.
கொங்கனி, ஒரியா, பெங்காலி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, அசாமி ஆகிய மொழிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது. இதில் மற்ற அனைத்து மொழிகளையும் விட தமிழில் இந்தி கற்பவர்கள் படிப்படியாக உயர்ந்து தற்போது சுமார் 70 சதவீதமாக உள்ளது.
இதுகுறித்து இந்தி இயக்குநரக அதிகாரிகள் கூறும்போது, “வழக்கமாக தொலைதூரக் கல்வியில் இந்தி கற்கச் சேரும் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதில்லை. அவர்கள் நோக்கம் இந்தி கற்றுக் கொள்வது மட்டுமே. பாடங்களை பெற்று கற்றுக் கொள்வதுடன் நிறுத்திக் கொள்பவர்களில் தமிழர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை தேர்வெழுத கட்டாயப்படுத்த முடியாது” என்று தெரிவித்தனர். இதற்கிடையே இந்தி பிரச்சாரத்திற்காக தென் மாநிலங்களை குறிவைத்து மத்திய இந்தி இயக்குநரகம் சார்பில் ஒரு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்கள் கொண்ட அந்தப் படத்திற்கு ‘தக் ஷின் பாரத் மே இந்தி (தென்னிந்தியாவில் இந்தி)’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தியால் மக்களிடையே ஒற்றுமை வளர்ந்து அது சுதந்திரப் போராட்டங்களில் அதிக பங்களித்ததாகவும், அதனால் மக்கள் இந்தி கற்பதை ஆங்கிலேயர்கள் தடுக்க முயன்றதாகவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளன. வயல்வெளி உட்பட பல இடங்களில் மக்கள் ரகசியமாக இந்தி கற்றதாகவும் காட்டப் படுகிறது என்பது அடிசினல் தகவல்.