அதிமுக பொதுக்குழு & செயற்குழுவுக்கு தடை விதிக்க முடியாது! – ஐகோர்ட்.

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இறந்தார். இதையடுத்து உள்கட்சி பூசல் ஏற்பட்டது. முதல்வராக இருந்த பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் பழனிசாமி முதல்வராக பதவியேற்றார். சில உடன்படிக்கைகளை தொடர்ந்து 2 அணிகளும் கடந்த மாதம் இணைந்தன. இரு அணிகள் இணைந்த பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 12ம் தேதி (இன்று) நடைபெறும் என்று கடந்த 28ம் தேதி பழனிசாமி அறிவித்தார். கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
வெற்றிவேல் திடீர் மனு: இந்த பொதுக்குழுவில் அதிமுக பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில், பொதுக்குழு, செயற்குழுவுக்கு தடைகோரி தினகரன் ஆதரவாளரான வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளரும், பொதுக்குழு உறுப்பினருமான எம்எல்ஏ வெற்றிவேல் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அதில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை கூட்டும் அதிகாரம் பொதுச் செயலாளரான சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது. அவர், பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை. இப்போது அனுப்பப்பட்ட பொதுக்குழு கடிதத்தில் யாருடைய கையெழுத்தும் இல்லை. செப்டம்பர் 12ம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு நடத்தவுள்ளதாக சிலர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். எனவே இதுதொடர்பாக கடந்த மாதம் 28ம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்.
அதிமுக யாருக்கு சொந்தம் என்ற விவகாரம் தேர்தல் கமிஷனில் நிலுவையில் உள்ளது, இந்நிலையில் பொதுக்குழு நடைபெற உள்ளது. தேர்தல் கமிஷனில் நிலுவையில் உள்ளபோது பொதுக்குழு கூட்டுவது சட்ட விரோதம். எனவே பொதுகுழுவுக்கு தடைவிதிக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி, ‘‘ஏன் ஒருவர் மட்டும் தடைகேட்டு வந்துள்ளார்? உங்கள் அணியும் பொதுக்குழுவில் கலந்து கொள்ளலாமே? அவர்களால் அனுப்பப்பட்ட கடிதம் விதிகளுக்கு எதிரானது என்றால், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷனை அணுகலாமே? யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், நீங்கள் அதை நிராகரித்துவிட்டு வீட்டில் இருக்கலாமே’’ என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து ஒரு எம்எல்ஏ வழக்கு தொடர வேண்டும் என்றால், அது முதலில் தலைமை நீதிபதி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விதி உள்ளது, அது இந்த வழக்கில் கடை பிடிக்காமல், பொதுக்குழுவுக்கு தடை கோரி தனிப்பட்ட முறையிலேயே வெற்றிவேல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ரூ.1லட்சம் அபராதம்: தினகரன் ஆதரவாளராக செயல்படக்கூடிய மனுதாரர், இந்த வழக்கில் தினகரனையே 4வது எதிர்மனுதாரராக சேர்த்துள்ளார். தனக்கு ஆதரவாக உள்ளவர்களை இதுபோல் எதிர்மனுதாரராக சேர்த்து விடுவது இப்போது வாடிக்கையாகிவிட்டது. இப்படி செய்வது வழக்கு, விசாரணையின் முக்கிய கட்டத்தை எட்டும்போது அதை திசை திருப்பும் நோக்கமாகும். இந்த செயல் கண்டனத்துக்குரியது, இதுபோன்ற உள்நோக்கம் கொண்ட செயல்களை கோர்ட் ஒருபோதும் அனுமதிக்காது. வெற்றிவேல் விருப்பப்பட்டால் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். கூட்டத்துக்கு செல்ல விருப்பமில்லாவிட்டால் அவர் கூட்டத்தை புறக்கணித்து வீட்டிலேயே இருக்கலாம் என தெரிவித்த நீதிபதி கார்த்திகேயன், ஐகோர்ட் நேரத்தை வீணடித்ததற்காக வெற்றிவேலுக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் தேர்தல் கமிஷனை அணுக சட்டப்படியான சுதந்திரம் உள்ளது என்றும் கூறினார்.
மேல்முறையீடு: அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து வெற்றிவேல் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ராஜிவ் சக்தேர், அப்துல் குத்துாஸ் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது வெற்றிவேல் தரப்பு வக்கீல் ராமானுஜம்,- ‘‘அதிமுக என்பது மட்டுமே பதிவு செய்யப்பட்டது. அதிமுக அம்மா என்றோ, அதிமுக புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரிலோ கட்சியே இல்லை. இடைத்தேர்தலுக்காக வழங்கப்பட்ட பெயரை வைத்தே பொதுக்குழு கூட்டப்படுகிறது. பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்து அனுப்பப்பட்ட கடிதத்தில் எந்த பெயரும் இல்லை. நிர்வாகி என்று மட்டுமே இருந்தது. யார் அந்த நிர்வாகி என்ற விவரம் இல்லை. அதிமுக அம்மா மற்றும் புரட்சி தலைவி அம்மா அணி இணைவது என்பது தேர்தல் கமிஷனால் மட்டுமே முடியும். இப்போது நடந்த இணைப்பு முறையானது இல்லை. இந்த பொதுக்குழு நடப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதிமுக என்ற பெயரை பயன்படுத்தி பொதுக்குழுவை கூட்டக்கூடாது’’ என்றார்.
தினகரன் தரப்பு வக்கீல் சித்ரா சம்பத் ஆஜராகி, ‘‘அதிமுக கட்சி மற்றும் சின்னம் தொடர்பான அதிகாரம் தினகரனுக்கே உள்ளது. இரு அணிகள் இணைந்ததை தேர்தல் கமிஷன் இன்னும் அங்கீகரிக்கவில்லை. பொதுச்செயலாளர் இல்லாதபோது கட்சியின் முடிவெடுக்கும் அதிகாரங்கள் துணை பொதுச்செயலாளருக்கு உள்ளது. இந்த பொதுக்குழுவை துணைச் பொதுசெயலாளரான தினகரன் கூட்டவில்லை. அதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை’’ என்றார்.
யார் தினகரன்: பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பில் வக்கீல் அரிமா சுந்தரம் ஆஜராகி, ‘‘தினகரன் பொதுக்குழு உறுப்பினரே அல்ல. தேர்தல் கமிஷனில் இரு அணிகள்தான் உள்ளது என்பதை வெற்றிவேல் தனது மனுவில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த இரு அணிகளும் இணைந்தே பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டுகின்றன. எனவே கூட்டத்தை கூட்டக்கூடாது, பேசக்கூடாது என கூறமுடியாது. அதிமுக பெயரை பயன்படுத்தக்கூடாது என்ற தேர்தல் கமிஷன் உத்தரவை மதித்தே அடைப்பு குறியிட்டு அம்மா, புரட்சி தலைவி அம்மா என்ற பெயரை பயன்படுத்துகிறோம். தேர்தல் கமிஷன் உத்தரவு மீறப்பட்டது என்றால் மனுதாரர் கமிஷனை நாடியிருக்க வேண்டும். பொதுக்குழுவை கூட்ட அனைத்து உறுப்பினர்களும் சம்மதித்துள்ள நிலையில் இவர் மட்டும் எதிர்ப்பது ஏன்? இரு அணிகளும் இணைந்து நடத்தும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடைகோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த வழக்கின் நோக்கமே மேலும் ஒரு பிரச்னையை ஏற்படுத்துவதே’’ என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
தடை இல்லை: நேற்று இரவு நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவுக்கு தடை விதிக்க முடியாது. பொதுக்குழுவை நடத்தலாம். பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள், வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டப்பட வேண்டும். இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை, அக்டோபர் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அடுத்தக்கட்ட விசாரணையின்போது, வழக்கின் எதிர்மனுதாரர்கள், பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.