வாழ்க்கையில் ஜெயிக்கணும்னா கல்யாணம் பண்ணிக்கங்க! = ஆண்களுக்கு அட்வைஸ் தரும் ஆய்வு!

வாழ்க்கையில் ஜெயிக்கணும்னா கல்யாணம் பண்ணிக்கங்க! = ஆண்களுக்கு அட்வைஸ் தரும் ஆய்வு!

இந்தியாவில் ஆண்களை விட மிக குறைந்த அளவே பெண்கள் உள்ளனர்.நாட்டில் உள்ள 6.50 கோடி திருமண மாகாத ஆண்களுக்கு 2.38 கோடி மணப்பெண்களே உள்ளனர். அதனால் 5இல் ஒரு ஆண் வேறு வழியின்றி திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1970கள், 80கள் மற்றும் 90களில் கோடிக் கணக்கான பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டுள்ளனர். இதனால் தான் ஆண், பெண் சரிவிகிதம் சமமாக இல்லை என்று கூறப்படுகிறது.இதனிடையே இன்றும் திருமண பருவத்தில் இருக்கும் மகனிடம், ‘உனக்கு பெண் பார்த்து கல்யாணம் செய்து வைக்கட்டுமா?’ என்று கேட்டால், ‘நான் திருமணம் செய்துகொண்டால் எனக்கு என்ன பலன் என்று சொல்லுங்கள்?’ என்று பல இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடம் எதிர்கேள்வி எழுப்புகிறார்கள்.
Marriage hand
அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று பெற்றோர் குழம்ப வேண்டியதில்லை. ‘நீ திருமணம் செய்து கொண்டால் உனக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்’ என்று கூறுங்கள். புதிய ஆய்வு ஒன்றில் இந்த உண்மையை கண்டறிந்திருக் கிறார்கள். ‘வெற்றி பெற்ற ஆண்களுக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள்’ என்ற உண்மையை இந்திய பெண்கள் ஏற்கனவே மெய்ப்பித்து காட்டியிருந்தாலும், இப்போதுதான் அந்த உண்மை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

பெண்கள் எப்போதுமே மனோதிடம், துணிச்சல், ஆன்மபலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மனப்பூர்வமான ஜோடியாக அவள், கணவரோடு இணையும்போது அவளது சக்தியும், ஆலோசனையும் கணவருக்கு கிடைக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் ஆண்கள் வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள். இந்த உண்மையை இளைஞர்களிடம் புரியவைக்கவேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. புரிந்துகொண்டால், அவர்கள் திருமணம் செய்துகொண்டு, மணவாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றியை நோக்கி நகரத் தொடங்கிவிடுவார்கள்.

‘மணவாழ்க்கையில் நிறைய பிரச்சினைகளும் இருக்கத்தானே செய்கிறது?’ என்ற கேள்வி எழும்புவது இயல்புதான்.

வாழ்க்கை என்பது பிரச்சினைகளை கடந்துவந்து வெற்றி காண்பதுதான். பிரச்சினைகளை கடந்து வெற்றி பெறும் போது நாம் புதிய பலம் பெறுகிறோம். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் ஆகிறோம். ஆனால் ஒரு உண்மை என்னவென்றால் பிரச்சினை என்பது எப்போதும் இருக்கும். திருமணமானாலும் இருக்கும். திருமணமாகாவிட்டாலும் இருக்கும். திருமணத்திற்கு பின்னால் வரும் பிரச்சினைகளை மனைவி உதவியோடு முறியடிக்கலாம் என்பதுதான் புதிய செய்தி.

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றுதான், இந்த தன்னம்பிக்கை ஆய்வை மேற்கொண்டுள்ளது. திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் திருமணமான இளைஞர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். பல்வேறு கட்டங்களாக, பல நாட்களாக அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ‘திருமணமாகாதவர் களைவிட திருமணமான ஆண்கள் மிகுந்த தன்னம்பிக்கையோடு வாழ்கிறார்கள். மனோபலத்துடன் இருக்கிறார்கள்’ என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

‘திருமணமானவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். அர்த்தத்தோடு பயனுள்ள வாழ்க்கையை வாழ்கிறார்கள்’ என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.சமூக அந்தஸ்தும், மரியாதையும் திருமணமானவர்களுக்கு அதிகம் கிடைக்கிறது. அதுவும் அவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்க ஒரு காரணமாகிறது. புதிய உறவு, நட்பு என்று அவர்களுடைய மகிழ்ச்சியான உலகம் விரிவடைந்துக் கொண்டே போகிறது.

பொறுப்புணர்வும், கடமை உணர்வும் திருமணமானவர்களிடமே அதிகம் இருக்கிறது. திருமணம் ஆண்களுக்கு கூடுதல் பொறுப்புணர்வை தருகிறது. கடமையை அவர்களுக்கு கற்றுத்தருகிறது. தனிமையில் இருந்து அவர்களுக்கு விடுதலை கொடுத்து, கலகலப்பான சூழலுக்கு அவர்களை கொண்டுவருகிறது.

அலுவலகத்தில் அதிக பொறுப்புடன் வேலைபார்ப்பது, வேலைகளை குறித்த நேரத்தில் முடிப்பது, நாகரிகமாக உடை அணிவது… போன்ற விஷயங்களிலும் திருமணமான ஆண்களே முன்னணியில் இருக்கிறார்கள். அதுவரை ஏனோதானோவாக நடந்துகொண்டவர்கள்கூட திருமணத்திற்கு பின்பு நேர்த்தியானவர்களாக மாறி இருக்கிறார்கள். நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருகிறார்கள் என்றெல்லாம்கூட அந்த ஆய்வு சொல்கிறது. ஐரோப்பிய நாடுகளில் நடந்த ஆய்வு ஒன்றில் ‘திருமணமானவர்கள் பலவித வியாதிகளிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள்’ என்று கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது திருமணமான ஆண்கள் ஆரோக்கியமாக வாழ்கிறார்களாம்.

மனோதத்துவ நிபுணர்கள் சொல்லும் கருத்தைக் கேட்டால்,”பெண்கள் தோல்வியை எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திரும்பத் திரும்ப போராடி வெற்றியை கைப்பற்றும் பிடிவாதம் பெண்களுக்கு உண்டு. அந்தப் பிடிவாதமே ஆண்களை இயக்கி ஜெயிக்க வைக்கிறது. பெண்களின் போராட்ட குணம் அவர்களது பிறவி வரம்’’ என்கிறார்கள், அவர்கள்.