வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நம்பிக்கை! – ஜனாதிபதியின் குடியரசு தின உரை முழு விபரம்!

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நம்பிக்கை! – ஜனாதிபதியின் குடியரசு தின உரை முழு விபரம்!

குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். ஜனாதிபதியான பிறகு ராம்நாத் கோவிந்த் ஆற்றிய முதல் உரை  இதோ:–

பல லட்சம் பேர் பங்கேற்ற மகத்தான போராட்டத்திற்கு பின்னரே நாம் சுதந்திரத்தை பெற்றோம். அவர்கள் அனைத்தையும் சுதந்திரத்திற்காக துறந்தார்கள், பலர் உயிரையும் இழந்தார்கள். மகாத்மா காந்தியின் உந்துதல் காரணமாக இந்த வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட ஆண்களும், பெண்களும் அரசியல் சுதந்திரம் பெற்றதும், அத்துடன் திருப்தி அடைந்திருக்கலாம். ஆனால் அவர்கள் ஓயவில்லை. தங்கள் முயற்சியை இரட்டிப்பாக்கினார்கள். அரசியல் சாசனத்தை வடிவமைக்கும் பணியில் தங்களை முழுமையாக கரைத்துக் கொண்டார்கள்.

அரசியல் சாசனத்தை அவர்கள் ஒரு அடிப்படை சட்டமாக மட்டுமே பார்க்காமல், சமுதாய மாற்றத்திற்கான கட்டளையாக வரித்துக்கொண்டார்கள். நாமும் அவ்வாறே கருத வேண்டும். நமது அரசியல் சாசனத்தை வகுத்தளித்த ஆண்களும், பெண்களும் தொலைநோக்குப்பார்வை கொண்டவர்கள். சட்டத்தின் ஆட்சியின் மாட்சியையும், சட்டத்தின் விதிகளையும் அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள்.

நமது தேசிய வாழ்வில் முக்கியமான கட்டத்தின் பிரதிநிதிகள் அவர்கள். அவர்கள் வழங்கிய அரசியல் சாசனத்தையும், குடியரசையும் வாரிசாக பெற்றுக் கொள்ளும் பேறு பெற்றவர்கள் நாம். நம்பிக்கையுடன் முன்னேற்றத்தை நோக்கி செல்லும் நாட்டை, அதே நம்பிக்கையும், முன்னேற்ற பாதையும் கொண்ட இளைஞர்கள்தான் கட்டமுடியும். நமது மக்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 35 வயதிற்கும் குறைவானவர்களே. அவர்கள் மட்டில் தான் நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

கல்வியில் நாம் பல முன்னேற்றங்களை பெற்றுள்ளோம். அதன் எல்லையை மேலும் விரிவுபடுத்தி அறிவாற்றலை வளர்க்க வேண்டும். நமது கல்வி முறையில் சீர்திருத்தம் கொண்டுவந்து மேம்படுத்தி, விரிவுபடுத்தி 21–ம் நூற்றாண்டின் யதார்த்த நிலைமைக்கேற்ப டிஜிட்டல் பொருளாதாரம், மரபணு மாற்றம், ரோபோ பயன்பாடு மற்றும் எந்திர மயமாக்கல் முதலியவற்றில் நமது வேட்கை அமைய வேண்டும்.

கிராமங்கள் மற்றும் நகரங்களில் நாம் சுகாதாரத்தை பேணினால்தான், நமது அண்டை அயலாரும் அதே முறையை பின்பற்றுவார்கள். அடுத்த வீட்டுக்காரர்களின் அந்தரங்கம், உரிமை முதலியவற்றுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். 2020–ம் ஆண்டில் நமது குடியரசுக்கு 70 வயதாகும். 2022–ம் ஆண்டில் நமது சுதந்திரத்தின் 75–வது ஆண்டை கொண்டாட இருக்கிறோம். இந்த இரண்டும் நமக்கு சிறப்பான நிகழ்வுகள்.

இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்களின் மறைந்து கிடக்கும் ஆற்றலை வெளிப்படுத்தும் புதிய இந்தியாவை கட்டமைக்க நமது அரசியல் சாசனத்தை வகுத்த முன்னோர்கள் எப்படி பணியாற்றினார்களோ அந்த திசை நோக்கி முன்னேறி செல்வதற்கு இந்த சிறப்பான நாட்களை நாம் பயன்படுத்திக் கொள்வோம். 21–ம் நூற்றாண்டில் இந்தியா தனக்கே உரிய தனிப்பெருமை பெற்றதாக விளங்கட்டும்.

நூறு கோடிக்கும் மேற்பட்ட நமது நாட்டின் மக்களை தாய் போல பாவித்து, உணவளித்து, ஊக்குவிக்க கடுமையாக உழைக்கும் நமது விவசாயிகளின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது அவசியம். நமது துணிவுமிக்க ராணுவ வீரர்களுக்கும், காவல்துறைக்கும், துணை ராணுவ படைக்கும் தேவையான கருவிகளையும், தளவாடங்களையும் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை நவீனமயமாக்கி, வலுப்படுத்துவதும் அவசியம்.

வறுமை ஒழிப்பு, பசியின்மை, அனைவருக்கும் கல்வி மற்றும் ஆரோக்கிய வாழ்வுக்கான வாய்ப்பு, நமது பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு துறையிலும் சமவாய்ப்பு வழங்குதல் என்ற நீடித்த லட்சியங்களை நிறைவேற்ற முன்னேறிச்செல்வது அவசியம். நமது மக்களுக்கு தூய்மையான, பசுமையான, திறம்பட்ட, கட்டுப்படியான எரிசக்தி கிடைப்பதும் அவசியமானது. சொந்த வீட்டுக்காக ஏங்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு வீடு கிடைப்பதை நனவாக்குவதும், திறமையாளர்களுக்கு எல்லையற்ற வாய்ப்புகளை வழங்கும் நவீன இந்தியாவை உருவாக்குவதும் இன்றைய அவசியம்.

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நம்பிக்கை நமக்கு தென்படுகிறது. நாம் மேற்கொண்டுள்ள நவீன இந்தியாவை உருவாக்கும் பணியில் இது புதிய கட்டம். நமது இளம் தலைமுறையினர், தங்களின் தொலைநோக்கு பார்வை, லட்சிய வேட்கை, கொள்கையை செழுமைப்படுத்தி நமது குடியரசை முன்னோக்கி அழைத்துச் செல்வது இன்றைய தேவை.

நமது குடியரசின் விழுமியங்கள், இந்தியாவின் தொன்மையான பண்புகள் முதலியவற்றில் இருந்து அந்த இளைய தலைமுறையினரின் தொலைநோக்கும், வேட்கையும், கொள்கையும் உந்துசக்தியை பெறும் என்று நான் நம்புகிறேன்.

இந்த மகிழ்ச்சிகரமான குடியரசு நன்னாளில் உங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். ஒளிமிக்க, நம்பிக்கை மிக்க எதிர்காலம் உங்களுக்கு தழைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.

Related Posts