பத்ம விருதுகள் அறிவிப்பு!: இளையராஜாவுக்கு பத்ம விபூஷன்!

பத்ம விருதுகள் அறிவிப்பு!: இளையராஜாவுக்கு பத்ம விபூஷன்!

2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்தது. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருதும் நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கும் பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.கலை, இசை, நாடகம், இலக்கியம், மருத்துவம், அறிவியல், விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அளித்து மத்திய அரசு கவுரப்படுத்துகிறது. அதன்படி, 2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் தற்போது  அறிவிக்கப்பட்டுள்ளன.அதில் தமிழகத்தைச் சேர்ந்தவரும், 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்தவருமான இசையமைப்பாளர் இளைய ராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இசைத் துறையில் சிறந்து விளங்கியதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டது.

தமிழத்தின் நாட்டுப்புறக் கலைஞர் விஜய லட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமய இசைகளையும், பழங்குடி மக்களின் இசையையும், பாடல்களையும் தொகுக்கும் பணியில் தன் வாழ்கையை ஈடுபடுத்திக்கொண்டார் விஜயலட்சுமி, நவநீத கிருஷ்ணன். இவரின் சேவையைப் பாராட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் மதுரை காமராசர் பல்கலையின் நாட்டுப்புறவியல் துறையின் முன்னாள் பேராசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பிளாஸ்டிக் கழிவு பொருட்களை பயன்படுத்தி புத்தாக்க முறையில் சாலை அமைத்து அதற்கு காப்புரிமை பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ராஜகோபாலன் வாசுதேவனுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பழங்குடியின பெண் லட்சுமி குட்டிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 500 மூலிகை மருந்துகள் நினைவில் வைத்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு பாம்புக்கடி, பூச்சி கடிகளில் இருந்து சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளார். மேலும், மலைப்பகுதிகளில் குடிசையில் வாழ்ந்தபோதிலும், அங்குள்ள மக்களுக்கு பாரம்பிரய கலைகளை கற்றுக்கொடுத்து வருகிறார். 1950களில் கல்வி கற்ற ஒரே பழங்குடியின பெண் லட்சுமிகுட்டி ஆவார்.

மேலும், ஐ.ஐ.டி. கான்பூர் பேராசிரியர் அரவிந்த் குப்தாவு, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓவியர் ஷியாம், மேற்கு வங்காளத்தின் 99வயது சுதந்திரப் போராட்ட வீரர் சுதான்சு பிஸ்வாஸ், கேரளா மருத்துவர் எம்.ஆர். ராஜகோபால், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர் முரளிகாந்த் பேட்கர் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷினி மிஸ்திரி வீட்டு வேலைகள் செய்து ஏழைகளுக்காக மருத்துவமனை கட்டிக் கொடுத்துள்ளார். இவரின் சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி சுலாகட்டி நரசம்மா, திபெத்திய மூலிகை மருத்துவர் யேஷி டோடெனுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஏற்கனவே கடந்த 2010-ம் ஆண்டு இளையராஜாவுக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்தது. இப்போது பத்ம விபூஷண் விருது வழங்கி இருக்கிறது. தற்போது விருது பெற்றது குறித்த மகிழ்ச்சி தெரிவித்த இளையராஜா, அதை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வேன் என்றும் கூறினார்.

இசைத்துறையைச் சேர்ந்த குலாம் முஸ்தபா கான் (மராட்டியம்), இலக்கியம் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த பரமேஸ்வரன் (கேரளா) ஆகியோரும் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.

பத்ம விபூஷண் விருது பெற்ற இளையராஜாவுக்கு ஏராளமான திரையுலக பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

பத்ம விருது பெற்றவர்களில் 14 பேர் பெண்கள்; 16 பேர் வெளிநாடுகளில் வசிப்பவர்கள். மரணம் அடைந்த 3 பேருக்கும் விருது வழங்கப்பட்டு உள்ளது.டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பின்னர் நடைபெறும் விழாவில், பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குவார்.
error: Content is protected !!