மோடி வரும் 21-ம் தேதி பிரதமர் பொறுப்பேற்கிறார்!
வருகிற 20 ஆம் தேதியன்று பா.ஜ.க. எம்.பி.க்களின் கூட்டத்தை கூட்டி நரேந்திர மோடியை பிரதமராக தேர்வு செய்வது என்று டெல்லியில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் மோடியை ஆட்சியமைக்க குடியரசு தலைவர் அழைப்பு விடுத்த பின்னர், மோடி தலைமையிலான அமைச்சரவை வருகிற 21 ஆம் தேதி பதவியேற்கும் எனத் தெரிகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று மதியம் தொடங்கியது. இந்த கூட்டத்தில், பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி, அருண் ஜெட்லி உள்ளிட்ட அக்கட்சியின் பல்வேறு தலைவர்களும் கலந்துகொண்டனர்.இக்கூட்டத்தில் மத்தியில் ஆட்சியமைப்பது மற்றும் மோடியை முறைப்படி கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக, அதாவது பிரதமராக தேர்வு செய்வதற்கான பா.ஜனதா எம்.பி.க்களின் கூட்டத்தை எப்போது கூட்டுவது என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. அதன்படி மே 20 ஆம் தேதி பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.ஆட்சியில் யார் யாருக்கு என்ன பொறுப்புக்கள் வழங்குவது என்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது அந்தக் கூட்டத்தில் மோடிக்கு புகழாரம் சூட்டி பேசிய கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கையடுத்து மற்ற தலைவர்களும் மோடிக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
குறிப்பாக் அத்வானி கட்டிப்பிடித்து வாழ்த்து அத்வானி பாராட்டி பேசும்போது மோடிக்கு மலர்கொத்து கொடுத்து கட்டிப்பிடித்து வாழ்த்தினார். இதனிடையே மோடி நாடாளுமன்ற பா.ஜனதா தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் மே 20 ஆம் தேதியன்று பா.ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்ட பின்னர் , குடியரசுத் தலைவரை மோடி சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.இதன் பின்னர் மோடியை ஆட்சியமைக்க குடியரசு தலைவர் அழைப்பு விடுத்த பின்னர், மோடி தலைமையிலான அமைச்சரவை வருகிற 21 ஆம் தேதி பதவியேற்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது..


