மழை குறைவால் காய்கறிகளின் விலை 20-25 சதவீதம் அதிகரிக்கும்: அசோசெம் கணிப்பு!
இந்தியாவில் பருவ மழை குறைவால் உணவு பயிர்களின் உற்பத்தி குறையும் சூழல் உருவாகியுள்ளது. 2012-13 ஆம் ஆண்டில் 257,13 மில்லியன் டன்னாக இருந்த நாட்டின் மொத்த உணவுப் பயிர்களின் உற்பத்தி 2013-14 ஆம் ஆண்டு 265.57 மில்லியன் டன்னாக உயர்ந்திருந்தது. இரண்டாவது முன் மதிப்பீட்டின் 2014-15 2012-13 ஆம் ஆண்டின் உணவு உற்பத்தி 257,07 மில்லியன் டன்னாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டின் உணவு உற்பத்தி குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உற்பத்தி குறைவுக்கு பருவ மழை குறைபாடே முக்கிய காரணாமாகும் என்ற தகவல் மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் திரு. மோகன்பாய் குந்தாரியாவால் மக்களவையில் தெரிவித்தார்.

இந்நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் இன்னும் சில நாட்களில் காய்கறிகளின் விலை 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் என அசோசெம் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வு அறிக்கையின் படி அறுவடைக்கு தயாராக இருந்த 25-30 சதவீத பயிர்கள், எதிர்பாராத மழை மற்றும் ஆலங்கட்டி மழையால் அழிந்து விட்டது. இந்த மழையால் பாதிக்கப்பட்ட தோட்டப்பயிர்களான மா, வாழை, திராட்சை மற்றும் கொண்டை கடலை ஆகியவற்றின் விலை ஏற்கனவே அதிகரிக்க தொடங்கியதை வைத்தே இதை தெரிந்து கொள்ள முடியும்.
கோதுமை, எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் போன்றவையும், தக்காளி, காலிஃப்ளவர், மற்றும் கொத்தமல்லி போன்ற காய்கறிகளும் மழையால் மோசமான பாதிப்புகளை சந்தித்து உள்ளன. இன்னும் சில நாட்களில் இவற்றின் விலை அதிகரிக்க ஆரம்பிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் கணக்குப்படி மழையால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களில், 106.73 லட்சம் ஹெக்டெர் அளவுள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு ஜூன் – செப்டம்பர் மாதங்களில் போதுமான அளவில் பருவமழை பெய்யும் என ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


