முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது!

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது!

நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
agri
நெல்லை வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வேளாண் துறையில் 7 டிரைவர்களை பணி நியமனம் செய்ததில், அரசியல் பிரமுகர்களின் நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்திய இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துக்கொண்ட விவகாரம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நேற்று இரவு எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் விடிய விடிய தீவிர விசாரணை நடைபெற்றது. இதையடுத்து காலை 5.00 மணியளவில் அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து, நெல்லைக்கு அழைத்து சென்றனர். அவருடன் வேளாண் துறை பொறியாளர் செந்தில் என்பவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து, நெல்லை அழைத்துச் செல்கின்றனர். அங்கும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. அநேகமாக நெல்லையை சேர்ந்த 3 முக்கிய புள்ளிகள் இன்று மாலைக்குள் கைதாகலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts