பி எஃப் நியூ ஸ்கீம்மை ஒத்தி வச்சாச்சு! – பெங்களூர் கலவரம் எதிரொலி

பி எஃப் நியூ ஸ்கீம்மை ஒத்தி வச்சாச்சு! – பெங்களூர் கலவரம் எதிரொலி

புதிய தொழிலாளர் வைப்பு நிதி(பி.எஃப்) திட்டத்தை கைவிடக் கோரி நாடு முழுவதும் மீண்டும் போராட்டங் கள் நடைபெற்றன. குறிப்பாக கடந்த சில தினங்களாக போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றது. கடந்த இரண்டு பெங்களூரில் ஆடைத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட் டனர். போராட்டம் தீவிரமடைந்ததால் பெங்களூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது.
bang apr 19
இந்நிலையில், தொடர் போராட்டத்தை தொடர்ந்து, புதிய தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை மூன்று மாதத்திற்கு நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. ஜூலை 31-ம் தேதி வரை திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய தொழிலாளர் துறை இணை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். மேலும், மீண்டும் திட்டத்தை பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்..

முன்னதாக பெங்களூரு பொம்மனஹள்ளியில் திங்கள்கிழமை மத்திய அரசின் வருங்காலவைப்புநிதிக் கொள்கையை கண்டித்து தனியா ருக்கு சொந்தமான 5 ஆயத்த ஆடை நிறுவனங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் சாலைமறியல், தர்னா போராட்டதில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் போலீஸார், பெண்கள் காயமடைந்தனர். கல்வீசியதில் பல வாகனங்கள் சேதமைடைந்தன.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தும்கூருசாலை கங்கொண்டபாளையா, ஓசூர் சாலை ஹெப்பகோடியில் தொழிலாளர்கள் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தும்கூருசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் சென்ற அரசு பேருந்து களை நிறுத்தி, அதில் இருந்த பயணிகளை இறக்கி விட்டு, பேருந்துகளுக்கு தீ வைத்தனர். இதனால் 2 அரசு பேருந்துகள், 1 மாநகர பேருந்து தீக்கிரையாகின.

அதே போல் ஓசூர்சாலையில் உள்ள ஹெப்பகோடியில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், ஹெப்பகோடி காவல் நிலையத்தில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, நிறுத்திவைக்கப்ட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையானது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், விரைந்து வந்த போராடி தீயை அணைத்தனர். இதனால் 2 சாலைகளிலிலும் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தொழிலாளர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், பெங்களூருவில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
காயம்

ஹெப்பகோடியில் வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் வானத்தை நோக்கி சுட்டனர். அப்போது கார்வேபாளையத்தில் அருகே உள்ள லட்சுமி லேஅவுட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரீத்தி (18) என்பவரின் தொடையில் குண்டு பாய்ந்தது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு துப்பாக்கி குண்டை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.