இப்போ தி.மு.க.வில் குடும்பச் சண்டை நடக்குது. குழப்பத்தில் இருக்கார் கருணாநிதி! – ஜெ. பேச்சு.
காஞ்சிப்புரத்தில் திங்கள் மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர், ”2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது, குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும், மக்களாட்சியை மலரச் செய்ய வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்டேன். நீங்களும் என்னுடைய வேண்டுகோளினை ஏற்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்தினீர்கள். உங்களின் அமோக ஆதரவுடன் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். மாற்றம் தந்த உங்கள் வாழ்வில் ஏற்றம் தந்த அரசு தான் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு.

நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், தேர்தலின் போது உங்களுக்கு என்னென்ன வாக்குறுதிகளை அளித்தேனோ, என்னென்ன திட்டங்களை தருவேன் என்று சொன்னேனோ, அதையெல்லாம் நிறைவேற்றித் தந்திருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சொன்னதை செய்திருக்கிறேன். அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப் பட்டு இருக்கிறது.அதன் பயனை நீங்கள் எல்லாம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறீர்கள். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சீரமைக் கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டத்தின் படி நான்கு ஆண்டுகளில் 4 லட்சம் ரூபாய் வரை ஒரு குடும்பத்தினர் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். கடந்த ஐந்தாண்டுகளில் 3,256 கோடி ரூபாய் செலவில் 14.3 லட்சம் ஏழை, எளிய மக்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.நவீன பசுமை வீட்டு வசதித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தேன். கடந்த ஐந்தாண்டுகளில் 5,879 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,79,954 பேர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 20,046 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இருண்ட தமிழகம் ஒளி பெற வழிவகை செய்யப்படும் என்று நான் வாக்குறுதி அளித்து இருந்தேன். கடந்த ஐந்தாண்டுகளில் அனைத்து திட்டங்களின் மூலம் 7,485.5 மெகாவாட் மின்சாரம் தமிழக மின் தொகுப்பில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சாதனை. இதன் காரணமாக தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் மின்வெட்டு உள்ளது என தி.மு.க. வினர் பொய் பிரசாரம் செய்கின்றனர். 2011-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நான் நிறைவேற்றி யுள்ளேன். தமிழகத்தில் 3 லட்சம் பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 11லட்சத்து 49 ஆயிரம் நிலப்பட்டாக்கள் வழங்கப் பட்டுள்ளன. நான் சொல்வதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வேன். ஆனால் தி.மு.க.வினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இது மக்களிடம் எடுபடாது.
2006-ம் ஆண்டு மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. விவசாயிகளுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் வழங்குவோம் என்றனர். இதுபோல் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் என்னென்ன கொடுத்தார்களே அத்தனையும் என்னவாயிற்று, அதன் மீது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி நடவடிக்கை எடுத்தாரா? இப்போது தி.மு.க.வில் குடும்பச் சண்டை நடக்கிறது. குழப்பத்தில் கருணாநிதி உள்ளார் என நினைக்கிறேன் ” என்றார்


